மன்மோகனுக்கு தந்த அதே ஐடியா! முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஜீன் ட்ரெஸ்.. கூட இருந்த பிடிஆர் -என்னாச்சு?
சென்னை: பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரெஸ் நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.
கடந்த வருடம் ஜூன் மாதம் 21ம் தேதி தமிழ்நாடு அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் பொருளாதார ஆலோசனைகளை வழங்க வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் ரகுராம் ராஜன் தலைமையில் மாபெரும் ஆலோசனை நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் உலகின் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்கள் பலர் இடம்பெற்று இருந்தனர். இந்திய பொருளாதாரம் குறித்து நன்கு தெரிந்த வல்லுனர்களுக்கு இதில் இடமளிக்கப்பட்டது.

முதல்வர் குழு
அமெரிக்காவின் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டாப்லோ என்ற பொருளாதார நிபுணரும், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரெஸ், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ் நாராயண் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்று இருந்தனர். இடையில் இரண்டு முறை இந்த குழு சார்பாக முதல்வருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

ஜீன் ட்ரெஸ்
அதேபோல் இந்த குழுவில் இருந்த உறுப்பினர்களை ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது சந்தித்து ஆலோசனை செய்து வந்தார். இந்த நிலையில்தான் பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரெஸ் நேற்று முதலவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்திய பொருளாதாரத்தை மிக நெருக்கமாக ஆய்வு செய்து வருபவர். பெல்ஜியத்தில் பிறந்தவர் இந்திய குடியுரிமை பெற்று இங்கு வசித்து வருகிறார். இந்தியாவின் பல பல்கலைக்கழகங்களில் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

ஸ்டாலின் ஜீன் ட்ரெஸ்
ஆனாலும் சாலையில் வசிப்பது, ரேஷன் பொருட்கள் வழங்குவது, மக்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களின் பொருளாதார நிலையை அறிவது, அரசுகளுக்கு பொருளாதார ஆலோசனை வழங்குவது பல்வேறு பணிகளை செய்து வருகிறார். வறுமை ஒழிப்புதான் இவரின் முக்கிய நோக்கம். மக்கள் எல்லோருக்கும் ஊதியம் தரக்கூடிய வேலைகளை வழங்குவதன் மூலம் வறுமையை ஒழிக்கலாம், இதன் மூலம் பணம் புழங்கி பொருளாதாரத்தை சரி செய்யும் இவர் பல காலமாக ஆலோசனை வழங்கினார்.

100 வேலை திட்டம்
100 நாள் வேலை திட்டம் உருவாக கூட இவரின் ஆலோசனை முக்கிய காரணம் ஆகும். அதேபோல் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட இவர் முக்கிய காரணமாக இருந்தார்.இவர் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆட்சியில் தேசிய ஆலோசனை குழுவில் இடம்பெற்று இருந்த போதுதான் தகவல் அறியும் உரிமை சட்ட ஐடியாவை வழங்கினார். அது பின்னர் சட்டமாகவும் வந்தது. இப்போது இவர்தான் நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்.

ஸ்டாலின் சந்திப்பு
இந்த சந்திப்பிலும் அதே ஐடியாவை முதல்வர் ஸ்டாலினுக்கு ஜீன் ட்ரெஸ் வழங்கி உள்ளார். அதன்படி தமிழ்நாட்டிற்கு என்று மத்திய தகவல் பலகை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று முதல்வருக்கு இவர் ஐடியா கொடுத்துள்ளார். அரசிடம் மக்களுக்கு இருக்கும் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் வகையில் citizens information portal (CIS) என்ற பலகையை உருவாக்க வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கஷ்டப்பட்டு கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் இங்கேயே பதில் கிடைக்கும் வகையில் இது உருவாக்கப்பட வேண்டும்.

தகவல் அறியும் உரிமை சட்டம்
இதன் மூலம் ஊழல் ஒழியும், முறைகேடுகள் தடுக்கப்படும், ஆட்சியில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார். அனைத்து துறைகளில் இருந்தும் தகவல்களை அறியும் வகையில் இந்த பக்கம் உருவாக்கப்பட வேண்டும் ஆர்டிஐ விதிப்படி அனைத்து துறைகளின் தகவல்களும் எளிதாக பெறக்கூடிய வகையில் இருக்க வேண்டும். எனவே அதை கருத்தில் கொண்டு இந்த பக்கம் உருவாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு இதன் மூலம் தகவல் அறியும் உரிமை சட்டத்தை காப்பதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ முடியும்.
Recommended Video

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
அதிகாரிகள் மற்றும் துறை ரீதியான தகவல்களை பார்க்கும் வகையில் இல்லாமல் பொது மக்களும் இந்த தகவல்களை பார்க்கும் வகையில் இந்த தளம் அமைக்கப்பட வேண்டும், என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஜீன் ட்ரெஸ் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உடன் இருந்தார். முதல்வருக்கான ஆலோசனை குழுவை உருவாக்கியதில் பிடிஆர் முக்கிய பங்கு வகித்தார். முக்கியமாக ஜீன் ட்ரெஸ் இந்த குழுவில் சேர பிடிஆர் முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில்தான் நேற்று மீட்டிங்கில் பிடிஆரும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications