திறக்கப்பட வேண்டிய நேரத்தில்! தண்ணீரில் மூழ்கிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்! ரியல் காரணமே வேறயாமே
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, திட்டமிடப்பட்டு வந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இந்த மாத இறுதியில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று பெய்த மழையில் இந்த பேருந்து நிலையம் மூழ்கி உள்ளது. இந்த பேருந்து நிலையம் மூழ்கியதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்துக்கொண்டு இருந்த நிலையில், மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. முக்கியமாக வட தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக சென்னையில் நேற்று மழை பெய்தது.

சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. அதேபோல் எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.
அதிகாலை 2- 3 மணி நேரம் இங்கு விடாமல் மழை பெய்தது. மேலும் 3- 4 மணி நேரங்களுக்கு சென்னையில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இன்று மாலை சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை முதல் கனமழை வரை பெய்தது.
இந்த கனமழை காரணமாக கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வந்த பேருந்து நிலையம் மூழ்கி உள்ளது. இந்த பேருந்து நிலையம் மூழ்கியதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. முன்பே திறக்கப்பட வேண்டிய கிளாம்பாக்கம் பஸ் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த பேருந்து நிலையம் ரூ 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இது 2018-ம் ஆண்டே திறக்கப்படும் என முதலில் கூறப்பட்டது.
தள்ளிப்போன திறப்பு: ஆனால், கட்டுமானப் பணிகள் முடிவடையாததால் இதன் திறப்பு விழா தள்ளிக்கொண்டே போகிறது. இந்த வருடம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. ஜெயலலிதா மூலம் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் முறையாக திட்டமிட்டு கட்டப்படவில்லை. சென்னையில் இருந்து 30 கிமீ தூரத்தில் பேருந்து நிலையம் இருக்கிறது. இங்கே மெட்ரோ இல்லை. புறநகர் ரயில் இல்லை.
இதனால் மக்கள் இங்கிருந்து சென்னைக்கு உள்ளே வருவது கடினமான வேலையாக இருக்கிறது. இங்கே பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்ட போதே அதை முறையாக திட்டமிடாமல் விட்டுவிட்டனர். அதன் காரணமாகவே தற்போது இங்கே மாற்றங்களை செய்து வருகின்றனர். இங்கே கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகளை சரி செய்து மக்கள் பயன்படுத்தும் வகையில் எலிமனையாக் விஷயங்களை மாற்றி வருவதாக ஆளும் திமுக அரசும் தெரிவித்து உள்ளது. உள்ளே இரண்டு மாடி.. மக்கள் செல்ல நவீன நகரும் தரைத்தளம், அதுபோக எக்ஸ்லேட்டர் என்று பல சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளனர்.

சர்வதேச நாடுகளில் இருக்கும் வகையில் உலக தரத்துடன் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த நிலையில்தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் சென்னையில் அகலமான சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இங்கே மழை நீர் வடிகால் வசதி இல்லாததால் கடந்த முறை தண்ணீர் தேங்கியது. இதையடுத்து இங்கே உடனே வடிகால் வசதி அமைக்க அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டார். இதையடுத்து அங்கே பணிகள் நடந்து வருகின்றன.
உண்மையான காரணம்: ஆனால் இங்கே வடிகால் வசதி அமைக்கப்படாதது மட்டும் தண்ணீர் தேங்க காரணம் இல்லை. உண்மையில் கிளாம்பாக்கத்தில் தண்ணீர் தேங்க காரணமே வேறு என்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய அதிகாரிகள் சிலர் கூறுகையில், இந்த பாக்கம் என்று முடியும் பகுதிகள் எல்லாமே ஒரு காலத்தில் தண்ணீர் நிரம்பிய நீர் ஆதாரம் கொண்ட ஏரிகள், குளங்களை கொண்ட பகுதிகள்தான். இந்த பேருந்து நிலையத்திற்கு அருகே செய்யப்பட்ட சில ஆக்கிரமிப்புகள் இங்கே தண்ணீர் தேங்கவும் காரணமாக உள்ளது.
அதை விட இந்த பேருந்து நிலையம் சுத்தமாக எந்த திட்டமிடலும் இல்லாமல் கட்டப்பட்டு உள்ளது. பேருந்து நிலையத்தின் மையப்பகுதி தண்ணீர் தேங்கும் வகையில் தாழ்வாக கட்டப்பட்டு உள்ளது. இந்த பகுதியே தாழ்வான இடத்தில் உள்ளது. இதனால் தண்ணீர் எளிதாக சென்று தேங்கிவிடுகிறது. பிளானிங் செய்யப்பட்ட சொதப்பல்தான் தண்ணீர் தேங்குவதற்கு முக்கிய காரணம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

கடைசியாக பேருந்து நிலையத்தின் நுழைவு பகுதியும் தாழ்வாக அமைந்து உள்ளது. பேருந்துகள் எளிதாக வருவதற்காக இந்த டிசைன் செய்துள்ளனர். ஆனால் அதுவே தண்ணீர் தேங்கவும் காரணம் ஆகிவிட்டது. இதை தடுக்க அடிப்படை அமைப்பையே மாற்ற வேண்டும்.
வெறுமனே மழை நீர் வடிகால் மட்டும் அமைக்காமல் தண்ணீர் தேங்காமல் இருக்க தரை பகுதியை தூக்கி கட்ட வேண்டும். இப்போது இருக்கும் தளத்திற்கு மேலே இன்னும் சில அடுக்கு தளம் அமைக்க வேண்டும். அதோடு நுழைவு பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க பெரிய தடுப்புகள் அமைக்க வேண்டும்.
உள்ளே பேருந்துகள் நிற்கும் இடத்தையும் தூக்கி தளம் அமைத்து கட்ட வேண்டும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications