ஆளுநர் ரவி இல்லை.. ஆர்.எஸ்.எஸ். ரவி.. தேநீர் விருந்தை புறக்கணித்த கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
சென்னை: ஆர்.என். ரவி, ஆளுநரை போல அல்லாமல் ஆர்.எஸ்.எஸ் ஊழியரை போல செயல்படுகிறார்” என கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். ஆளுநர் மாளிகையில் குடியரசு தின நாளில் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாகவும் கூறியுள்ளார் கே. பாலகிருஷ்ணன்.
ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றதிலிருந்து, மாநில அரசுக்கும் அவருக்கும் இடையேயான உறவு அவ்வளவு சிறப்பாக இல்லை. மாநில அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை நிலுவையில் வைப்பது தொடங்கி, திருவள்ளுவர், கார்ல் மார்க்ஸ் வரை சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பது என ஆளுநரின் போக்கு கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது.

இதற்கெல்லாம் உச்சமாக, சுதந்திர போராட்டத்தில் காந்தியின் பங்கு ஒன்னுமே இல்லை என்றும், தேச தந்தை நேதாஜிதான் எனவும் அவர் பேசியிருந்தது அனைத்து தரப்பினரையும் கொந்தளிக்க வைத்தது.
நேற்று நாடு முழுவதும் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றிருந்தார்.
அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், “இந்திய தேசிய ராணுவத்தின் கடற்படை மற்றும் விமானப்படையின் புரட்சியே இந்தியாவின் சுதந்திரத்திற்கு காரணம். நமது நாட்டின் கலாச்சார சின்னமாகவும், ஆன்மீக சின்னமாகவும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் விளங்குகிறார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் இந்திய ராணுவ படையில்தான் தமிழர்கள் அதிகளவு நிறைந்திருந்தனர். வேலு நாச்சியார், வ.உ.சி போன்றவர்களை போல நேதாஜியின் தியாகம் போற்றப்பட வேண்டியவை.
சுதந்திரத்திற்காக போராடிய தமிழ்நாட்டு வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. வேலு நாச்சியார், வ.உ.சி போன்றவர்களை போல நேதாஜியின் தியாகத்தையும் போற்ற வேண்டும். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவு படையை கட்டமைப்புக்கு பின் பல தலைமுறைகளுக்கு பிறகே இந்திய ராணுவத்தில் பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் சுதந்திரத்தை பொறுத்த அளவில், இந்திய தேசிய காங்கிரஸின் ஒத்துழையாமை இயக்கம் ஆங்கிலேயரை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதற்கான காரணமில்லை என இங்கிலாந்து முன்னாள் பிரதமர் அட்லீ பதிவு செய்துள்ளார். மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் பலன் அளிக்கவில்லை. 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்தான் காரணம். நாட்டின் தேச தந்தை நேதாஜிதான்” என்று கூறியிருந்தார்.
ஆளுநரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் தரப்பில் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்தை திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விசிக ஆகியவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இது குறித்து பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “ரவி, ஆளுநரை போல அல்லாமல் ஆர்.எஸ்.எஸ் ஊழியரை போல செயல்படுகிறார்” என விமர்சித்துள்ளார்.
மேலும், “அரசியலமைப்பு சட்டத்தையும், அதன் விழுமியங்களையும் ஆளுநர் மதிக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காததால் தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை. எனவே தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications