என்ன நடக்குதுங்க? அட்வகேட் ஜெனரலை வரச்சொன்ன ஸ்டாலின்.. நடுக்கத்தில் அமைச்சர்கள்.. ஒரே திகிலா இருக்கே
சென்னை: அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரிக்க தொடங்கி உள்ளார். அவரின் இந்த நடவடிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம் உடன் அவசர ஆலோசனையும் நடத்தி உள்ளாராம்.
சொத்து குவிப்பு வழக்குகளில் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் லஞ்ச ஒழிபுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக 76 லட்சத்து 40 ஆயிரத்து 433 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை, அவர் மீதும், அவரது மனைவி மணிமேகலை மீதும் வழக்குப்பதிவு செய்தது.
என்ன வழக்கு?: கடந்த 2012ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை ஏற்று, அவரையும், அவரது மனைவி மணிமேகலையையும் வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2022 ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதேபோல, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை, 44 லட்சத்து 56 ஆயிரத்து 67 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்திருந்தது. கடந்த 2012ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கே கே எஸ் எஸ் ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை ஏற்று அவர்களை விடுவித்து கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது.
இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மேல் முறையீடு செய்யாததால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
பின்னணி: இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, லஞ்சபொழிப்புத் துறையினரின் விளக்கங்களை கேட்காமல் ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் அது அதிகாரிகளை களங்கப்படுத்தியதாகி விடும் எனவும் விசாரணை நடைமுறையில் எந்த தவறும் இல்லை என்றார்.
அதற்கு, வழக்கில் பதிலளிக்க மட்டுமே உத்தரவிடப்படுகிறது என்றும் எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனத் தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடந்த 2021ம் ஆண்டு இந்த வழக்குகளில் விடுவிக்க கோரிய மனுக்களுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த புலன் விசாரணை அதிகாரி, ஆட்சி மாற்றத்துக்கு பின், மேல் விசாரணைக்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர் என்றார்.
இந்த வழக்கில் தவறான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதாகவும், இரு உத்தரவுகளும் ஒரே மாதிரியாக உள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கிய இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கண்மூடிக் கொண்டிருக்க முடியாது என்றும், இதை அனுமதித்தால் கடமை தவறியதாகி விடும் எனவும் குறிப்பிட்டார்.
உத்தரவு: இந்த நீதிமன்றம் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கோ, அதில் தொடர்புடையவர்களுக்கோ, அரசுக்கோ உரித்தானது அல்ல. ஆனால் இந்த நாட்டில் வாழும் குப்பனுக்கும், சுப்பனுக்கும் உரித்தானது எனக் குறிப்பிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 2021க்கு பிறகு தங்கள் நிலைப்பாட்டில் இருந்து மாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.
யார் அதிகாரத்திற்கு வந்தாலும் வழக்குகளை நீர்த்துப் போகச் செய்வதாகவும், உண்மையில் சிறப்பு நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்தப்படும் விதம் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, இந்த வழக்குகள் தொடர்பாக செப்டம்பர் 20ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கும், லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
பொன்முடி: இன்னொரு பக்கம் சமீபத்தில் இரண்டு முக்கிய வழக்குகளில் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார். நில அபகரிப்பு வழக்கில் சமீபத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 1996 - 2001 காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். இந்த காலகட்டத்தில் அவர் முறைகேடாக நிலம் வாங்கியதாக கூறப்பட்டது.
தன்னுடைய மாமியார் சரஸ்வதி பெயரில் போலி ஆவணங்களைத் தயார் செய்து நிலம் வாங்கியதாக கூறப்பட்டது. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில், அரசுக்குச் சொந்த 3,630 சதுர அடி நிலத்தைப் பதிவுசெய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் சமீபத்தில் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார். போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி பொன் முடி விடுதலை செய்யப்பட்டார். அதேபோல் கடந்த 13-5-1996 முதல் 31-3-2002 வரையிலான கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006ஆம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று பொன்முடி விடுதலை செய்யப்பட்டார். இதில் 172 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 28ஆம் தேதி வேலூர் கோர்ட் நீதிபதி வசந்த லீலா பிறப்பித்த உத்தரவில், இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததாலும், போதிய ஆதாரங்கள் இல்லாததாலும் இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் முறையாக கையாளவில்லை என்றும், மேல்முறையீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை என்றும் கருதியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

இதனால் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டை சூ-மோட்டாவாக எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கவிருக்கிறார். இன்று மதியம் இந்த வழக்கின் விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.
ஸ்டாலின் ஆலோசனை: அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரிக்க தொடங்கி உள்ளார். அவரின் இந்த நடவடிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம் உடன் அவசர ஆலோசனையும் நடத்தி உள்ளாராம்.
அதன்படி நீதிபதியின் முடிவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு ஆலோசனை செய்து வருகிறதாம். சட்ட ரீதியாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நிலைப்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முயன்று வருகிறதாம். இதற்கான ஆலோசனைகளை ஸ்டாலின் செய்து வருகிறாராம்.
பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து மேல்முறையீட்டு வழக்கை எடுத்துக் கொண்டிருப்பது பொன்முடியை மட்டுமல்ல திமுக தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், நில அபகரிப்பு வழக்கில் பொன்முடி விடுதலை செய்யப்பட்டிருப்பதால் அந்த வழக்கிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சரியாக இயங்கவில்லை என கூறி அதிலும் சூ-மோட்டாக வழக்கு பதிவு செய்யப்படலாம் என்ற அச்சமும் திமுக வழக்கறிஞர்களிடம் இருக்கிறது. இப்படி சூ-மோட்டாவாக உயர்நீதிமன்றம் வழக்கினை பதிவு செய்வதால், பொன்முடி பாணியில் வழக்கிலிருந்து விடுதலையாகலாம் என திட்டமிட்டு காய்களை நகர்த்தி வந்த திமுக அமைச்சர்களுக்கு கிலி ஏற்பட்டிருக்கிறது. சூ-மோட்டோ என புது ரூட்டில் உயர்நீதிமன்றம் வழக்கை பதிவு செய்திருப்பது திமுக அமைச்சர்களுக்கு சிக்கல் தான்.












Click it and Unblock the Notifications