ஊடகவியலாளர் ஜூபேருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது ஏன் தெரியுமா? முதல்வர் ஸ்டாலின் சொன்ன தகவல்!
சென்னை: ஊடகவியலாளர் ஜுபேருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது இன்று குடியரசு தின விழாவில் வழங்கப்பட்டது. பொய்யான செய்தியினால் சமூகத்தில் ஏற்படும் வன்முறைகளை தடுக்க உதவி வருவதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின கொண்டாட்டத்தின்போது பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு விருதுகளும் வழங்கப்பட்டன. நாட்டின் 75வது குடியரசு தினவிழாவையொட்டி, தமிழ்நாட்டில் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 8 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றினார்.

இந்த நிகழ்வுகளை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2024ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் விருதுகளை வழங்கினார். அந்த வகையில் இந்த ஆண்டு 'கோட்டை அமீர் மத நல்லிணக்க' விருது ஆல்ட் நியூஸின் முகமது ஜூபேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் தளி பஞ்சாயத்து உருது பள்ளி தெரு என்ற முகவரியில் வசித்து வருகிறார் முகமது ஜுபேர் . Alt News என்ற பெயரில் இணையதளத்தை தொடங்கி சமூக ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் உண்மை தன்மையை ஆராய்ந்து உண்மையான செய்திகளை மட்டும் தனது இணையதளத்தில் வெளியிட்டு மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருகிறார். அவரது இந்த பணியானது பொய்யான செய்தியினால் சமூகத்தில் ஏற்படும் வன்முறைகளை தடுக்க உதவி வருகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய காணொளி காட்சியின் உண்மை தன்மையை சரிபார்த்து, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளியில் உள்ள காட்சிகள் தமிழ்நாட்டில் நடைபெற்றது அல்ல என தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். தமிழ்நாட்டுக்கு எதிராக வதந்தி பரப்பி வருவதை தடுத்து தமிழ்நாட்டில் சாதி, மத, இன மற்றும் மொழியினால் ஏற்படும் வன்முறைகள் நிகழாத வண்ணம் செயல்பட்டுள்ளார். இவரின் இந்த செயலை பாராட்டி 2024 ஆம் ஆண்டிற்கான கோட்சை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது.
பொய்ச் செய்திகள் திட்டமிட்டுக் காட்டுத்தீயாய்ச் சமூக வலைத்தளங்களில் பரப்படுகிறது. இந்த நிலையில் உண்மைகளை உரக்கச் சொல்லி மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் சில ஊடகங்கள் செய்கின்றன. அப்படிச் செயல்பட்டு அவதூறுகளைத் துடைத்தெறிந்த ஊடகவியலாளர் திரு. @zoo_bear அவர்களுக்கு கோட்டை அமீர்… pic.twitter.com/v3N4K4nH79
— M.K.Stalin (@mkstalin) January 26, 2024
இதுதொடர்பாக சமூகல் வலைதளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், "பொய்ச் செய்திகள் திட்டமிட்டுக் காட்டுத்தீயாய்ச் சமூக வலைத்தளங்களில் பரப்படுகிறது. இந்த நிலையில் உண்மைகளை உரக்கச் சொல்லி மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் சில ஊடகங்கள் செய்கின்றன. அப்படிச் செயல்பட்டு அவதூறுகளைத் துடைத்தெறிந்த ஊடகவியலாளர் ஜுபேர் அவர்களுக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கப்பட்டது.
அழியாச் செல்வமான கல்விக்குத் தனது சொத்தான நிலத்தைக் கொடையாக அளித்திட்ட ஆயி அம்மாள் அவர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருதும், பெரு வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியவர்களுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட குடியரசு நாள் விருதுகளை 14 பேருக்கு வழங்கினேன். இவர்களுக்கான பாராட்டுகள் சமூகச் சேவை செய்வதற்கான ஊக்கமாக உங்களுக்கு அமையட்டும்!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications