சீமான் vs டெல்லி.. சீனுக்குள் என்ட்ரியான எல்.முருகன், அண்ணாமலை! ஆதாயம் பெறப்போவது விஜய்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி, பாஜக இடையேயான மோதல், நாம் தமிழர் கட்சி மீதான டெல்லி நடவடிக்கைகள், நாம் தமிழர் கட்சியை கலகலக்க வைக்கும் வகையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஊடகங்களுக்கு கசியவிடும் தகவல்கள், இதே நேரத்தில் நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் ஆகியவை தமிழ்நாட்டில் புதிய ஆடுகளம் ஒன்று உருவாகிக் கொண்டிருப்பதாகவே காட்டுகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

திராவிடர் இயக்கம், இடதுசாரி மேடைகளில் பேசி வந்த சீமான் 2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்துக்கு பின்னர் தனி அமைப்பாக, கட்சியாக உருவெடுத்தார். தமிழ்நாட்டில் தனிநாடு கோருகிற பெரியாரிய, தமிழ்த் தேசிய, இடதுசாரி இயக்கங்கள் அவ்வப்போது உருவாவதும் பின்னர் அவை கலைந்து போய்விடுவதும் தொடர் நிகழ்வுதான்.

Why NIA, BJP Target Naam Tamilar Party? For Actor Vijay?


அண்ணா முதல் இன்று வரை: தந்தை பெரியார் தனித் தமிழ்நாடு கேட்ட காலத்தில் திராவிடர் இயக்கத்தின் பெரும் பிளவாக திமுக உதயமானது. தனித் தமிழ்நாட்டுக்கு மாற்றாக திராவிட நாடு என தென்னிந்திய மாநிலங்களை ஒருங்கிணைந்த கூட்டமைப்பை முன்வைத்தார் அண்ணா. அண்ணா காலத்திலேயே அவருக்கு எதிராக ஈவிகே சம்பத் தமிழ்த் தேசியம் பேசி காங்கிரஸில் கரைந்தார். அண்ணாவின் திடீர் மறைவைத் தொடர்ந்து திமுகவில் கருணாநிதி கை ஓங்கிய நிலையில் எம்ஜிஆர் தனிக் கட்சி தொடங்கினார். எம்ஜிஆர் ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவை கொண்டு வந்தார். ஆனால் டெல்லிக்கு ராஜ்யசபா எம்பியாக போன ஜெயலலிதா தமக்கு எதிராக சதி செய்வதாக எம்ஜிஆரே குற்றம் சாட்டினார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அண்ணா திமுக உடைந்து இணைந்தது. திமுகவில் கருணாநிதிக்கு இணையாக ராஜ்யசபா எம்பியாக இருந்த வைகோ வளருகிறார் என்ற அச்சம் உருவெடுக்க திமுக உடைக்கப்பட்டு மதிமுக உருவானது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் அண்ணா திமுக சிதறடிக்கப்பட்டது. அண்ணா திமுகவை டெல்லி எப்படி கையாண்டது என்பது நாடறிந்த கதைதான். நாம் மேலே சொன்ன நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் ஏதோ ஒருவகையில் டெல்லி மத்திய அரசின் உளவுத்துறை தொடர்பு குறித்த விவாதங்கள் நிகழாமல் இருந்ததே இல்லை.

யார் இந்த சீமான்? : 2009-ல் இலங்கை இறுதி யுத்தத்தின் பின்னர் சீமான் எனும் திரைப்பட இயக்குநர் நாம் தமிழர் கட்சியை தொடங்கினார். சீமானுக்கு நாம் தமிழர் கட்சி பெயரையே வாங்கி கொடுத்தவர்கள் டெல்லிக்கு அனுசரணையானவர்கள் என்பது தமிழ்நாடு தெரிந்த சங்கதிதான். சீமானுக்கு கொள்கை பட்டயம் எழுதிக் கொடுத்தவர்கள் யார் என்பதை அவரே பலமுறை சொல்லியும் இருக்கிறார். சீமானின் பிரதான இலக்காக இருப்பதும் இருந்து வருவதும் திமுகதான். சீமானின் வருகைக்குப் பின்னர் தமிழ்நாட்டில் இருந்த விடுதலைப் புலிகள் ஆதரவு கேலிக் கூத்தாக்கப்பட்டு திராவிடர் இயக்கங்களிடம் இருந்து வெகுதொலைவு அன்னியப்படுத்தப்பட்டுவிட்டது. அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் பெயரையோ படத்தையோ பயன்படுத்த காலம் காலமாக இருந்த தடை சீமான் தரப்புக்கு மட்டும் அறிந்தோ அறியாமலோ, விதி விலக்கும் அளிக்கப்பட்டிருந்தது.

சீமானின் ஒரே இலக்கு திமுக: சீமான் தரப்பினர் ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொலை செய்தோம் என்று சொன்னாலும் சரி, காஷ்மீர் தீவிரவாதி யாசின் மாலிக்கை அழைத்து குலாவினாலும் சரி எதுவும் பேசாமல் இத்தனை ஆண்டுகாலம் அமைதியாகவே வேடிக்கை பார்த்தது டெல்லி சர்க்கார். சீமான் தரப்புக்கு மட்டும் இத்தனை சலுகைகளை டெல்லி கொடுக்க, சீமான் முழு மூச்சாக திமுக எதிர்ப்பையே பிரதானமாக கொண்டு களமிறங்கினார். எத்தனை தேர்தல் வந்தாலும் எப்போதும் தோற்றாலும் கவலைப்படாமல் ஆட்சி அதிகாரம் நமக்குதான் என திமுகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என ஓயாமல் குரல் எழுப்பிய சீமானிடம் பெருமளவு விஜய் ரசிகர்கள் குவிந்து கிடப்பதை எல்லோரும் கவனித்தார்கள். இது டெல்லிக்கும் தெரியாத ஒன்று அல்ல. இதனாலேயே சீமானும் தம்பி விஜய் என ஆரத் தழுவியபடியே பேசியும் வந்தார்.

நாம் தமிழர் கட்சி மீது திடீர் தாக்குதல்: தற்போது ஆடுகளத்தை டெல்லி மாற்றத் தொடங்கிவிட்டதோ என்பதாகவே நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன. திடீரென என்.ஐ.ஏ. சீமான் கட்சி மீது குறி வைத்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கதை மீள் உருவாக்க சதி, நாம் தமிழர் கட்சியை சீமானிடம் இருந்து கைப்பற்ற சதி என என்.ஐ.ஏ. தரப்பிலிருந்து ஊடகங்களுக்கு கசியும் தகவல்கள் ஏக பரபரப்பை ஏற்படுத்துகின்றன. அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சி ஒரு தேசதுரோக கட்சி; தேசதுரோகிகள் கைது செய்யப்படுவார் என்கிறார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு பின்னர் நாம் தமிழர் கட்சியே இருக்காது என்கிறார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.

சீமானின் மென்மை வாய்ஸ் விஜய்: கடந்த சில நாட்களாக நடந்தேறும் இந்த அரங்கேற்றங்களின் ஊடாக திடீரென நடிகர் விஜய் தாம் அரசியல் கட்சியை தொடங்கிவிட்டேன். 2026 சட்டசபை தேர்தலில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற போகிறேன். அதுதான் இலக்கு என்கிறார். லஞ்ச ஊழல் குறித்தெல்லாம் பேசுகிறார் விஜய். தமிழ்நாட்டில் தற்போது திமுகதான் ஆட்சியில் இருக்கிறது. சீமான் ஆவேச குரலில் திமுகவுக்கு எதிராக இதுவரை பேசியதை நடிகர் விஜய் மென்மை குரலில் பேச தொடங்கி இருக்கிறார் என்பதையே அவரது அறிக்கை வெளிப்படுத்தி இருக்கிறது.

அடுத்து என்ன நடக்கும்?: சீமான் மீதான டெல்லியின் திடீர் தாக்குதல் நிச்சயம் நாம் தமிழர் கட்சியின் வேகத்தை குறைக்கும். நாம் தமிழர் கட்சியில் புதியவர்கள் இணைவதைத் தடுக்கும்; நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளை முடக்கும். ஏனெனில் என்.ஐ.ஏ.வை எதிர்த்து களமாடக் கூடிய கொள்கை தீரர்களைக் கொண்ட கட்சியும் அல்ல.. டெல்லியை எதிர்த்து வலிமையாக போராடும் வல்லமை கொண்ட கட்சியும் அல்ல நாம் தமிழர் கட்சி. சீமான் சொல்வதைப் போல விஜய் ரசிகர்களால் நிரம்பிய கட்சி. இப்போது விஜய்யே அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் இனி சீமான் தேவை இல்லை; ஒரிஜனல் விஜய்யே போதும் என டெல்லி முடிவெடுத்துவிட்டதாகவே தோன்றுகிறது. இதனால்தான் ஆடுகளத்தில் சீமானுக்கு எதிராக டெல்லியும் பாஜகவும் களமாடுகின்றர். சீமானை களத்தில் இருந்து வெளியேற்றிவிட்டு அந்த இடத்தில் நடிகர் விஜய்யை நிறுத்துகிற ஒரு முயற்சியாகத்தான் இதை பார்க்க வேண்டும். காலம் காலமாக தமிழ்நாட்டு அரசியலில் நிகழ்கிற போக்குகளின் ஒரு தொடர்ச்சியாகவே சீமான் vs பாஜக vs விஜய் என்பதை கவனத்தில் வைத்து கொண்டு இந்த அரசியலையும் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+