ஸ்டாலினுக்கு முருகன் மீது திடீர் பாசம் ஏன்? அதன் ரகசியம் என்ன?: பாயிண்டை பிடித்த பழ. கருப்பையா
சென்னை: பழனி கோயிலில் இரண்டு நாட்களாக முருகன் மாநாட்டை திமுக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக ஏன் நடத்தியது? அதற்குள் ஒளிந்துள்ள மர்மம் என்ன? என்பது பற்றி பழ கருப்பையா விளக்கம் அளித்துள்ளார்.
திராவிட மாடல்’ திமுக முத்தமிழ் முருகனுக்கு மாநாடு நடத்தியது குறித்துப் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. உலக நாடுகளில் அதிகமாக வணங்கப்படும் தமிழ்க் கடவுள் முருகன்தான். அதாவது இலங்கை, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர். ஆஸ்திரேலியா, மொரீசியஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து,தென்னாப்பிரிக்கா, கனடா, இந்தோனேசியா எனப் பல நாடுகளில் முருகனுக்கு தமிழர்கள் கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.

முருகக் கடவுளை நக்கீரர், குமரகுருபரர், அருணகிரிநாதர் என பலர் போற்றி பாடியுள்ளனர். கிருபானந்த வாரியார் வரை இந்தப் பக்தி பரவசம் தமிழ்நாட்டில் பரவலாக வளர்த்து எடுக்கப்பட்டுள்ளது. குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருப்பான் என்பது தமிழர் நம்பிக்கை. ஆகவேதான் மொத்தம் 2 நாட்களாகப் பழனியில் முருகன் மாநாடு நடந்து முடிந்துள்ளது. ஒரு பக்கம் சனாதனத்தை ஒழிப்போம் என்று உதயநிதி பேசுகிறார். மற்றொரு பக்கம் ஆ. ராசா இந்து மதத்தையும் இந்துக் கடவுகளையும் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார். ஆனால், திமுக அரசு முருகனுக்கு மாநாடு நடத்துகிறது. இது பற்றிய குழப்பம் பலரிடம் இருக்கிறது. பாஜகவின் இந்துத்துவா கருத்துக்குப் பதிலடியாகத்தான் முருகனை திமுக கையில் எடுத்துள்ளது என்கிறார் பேச்சாளர் பழ கருப்பையா.
அவர் முருகன் மாநாடு பற்றிப் பேசுகையில், “திமுக இதுவரை தன்னை பகுத்தறிவு இயக்கமாகவே தன்னை அடையாளப்படுத்தி வந்தது. இதற்கு முன்னர் முத்தமிழ் மாநாடு நடத்துவார்கள். அதை நான் கேள்விப்பட்டுள்ளேன். இப்போதுதான் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துகிறார்கள். அண்ணாதுரை காலத்தில் திமுகவிலிருந்த சிவாஜி கணேசன் ஒருமுறை திருப்பதிக்குச் சென்றுவந்தார். அதனால், 'திருப்பதி கணேசா, உனக்கு திமுக ஒரு கேடா?’ என்று கேலி பேசி கட்சியைவிட்டே வெளியேற்றிவிட்டார்கள். ஒரு காலத்தில் மதுரை மீனாட்சிக்கு எதற்கு வைர மூக்குத்தி? தலையில் தேய்ப்பதற்கு எண்ணெய் இல்லை என்று கூட பேசியவர்கள் இன்று முருகனுக்கு மாநாடு நடத்தப் போய் இருக்கிறார்கள். அதில் ஏதாவது ஒரு குறிப்பு இருக்கவே செய்யும்.
பூம்புகார் பக்கம் ஒரு கோயில் உள்ளது. அங்கே சென்று ஸ்டாலினுக்காக அவரது மனைவி துர்கா ஆயுள் ஹோமம் செய்தார். அதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. அவரது மனைவிக்கு நம்பிக்கை இருக்கிறது போகிறார். அதில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை. அந்த ஆயுள் ஹோமம் சமஸ்கிருதத்தில் தான் நடந்தது. ஆயுளைக் கூட்ட தமிழ் பயன் தராது போல. திமுக வெளியில் ஒன்றாகவும் உள்ளே ஒன்றாகவும் இருப்பது என்பது ஸ்டாலினின் தகப்பனார் காலத்திலிருந்து உள்ள பழக்கம்தான்.
திமுக முருகன் தான் தமிழ்க் கடவுள் என்கிறது. அதில் தவறில்லை. முருகனைப் பற்றி தொல்காப்பியத்தில் குறிப்பு உள்ளது. ஆறுபடை வீட்டில் முருகன் தான் ஆண்டு கொண்டுவருகிறான் என்பது தமிழர் நம்பிக்கை. அதிலும் கருத்து வேறுபாடு இல்லை. பாஜக இந்துத்துவத்தை எதிர்க்கவே திமுக முருகனைக் கையில் எடுத்துள்ளது என நான் நினைக்கிறேன். ஒரு காலத்தில் நாயக்கர்கள், மராத்தியர்கள், நாவாப் ஆகியோரின் ஆட்சிகள் தமிழ்நாட்டில் நடைபெற்ற போதுதான் முருகனைப் போற்றும் 'திருப்புகழ்’ பிறந்தது.
அதன்மூலம் தமிழர்கள் தங்களின் சமயத்தைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றார்கள். அன்று பிற மதத்தினரின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அருணகிரிநாதன் முருகனைப் பாடினார். இன்று இந்தியா முழுவதும் இந்துத்துவம் பெரிதாக பாஜகவால் வளர்க்கப்பட்டு வருகிறது. அதைத் தடுக்கவே திமுக, முருகக் கடவுளைக் கையில் எடுத்துள்ளது. தமிழர்கள் யாரும் இந்துக்கள் கிடையாது. தமிழர்களின் மதம் சைவம். அதன் கடவுளாகச் சிவன் இருந்தார். பின்னர் சிவனை முருகனின் மகனாக மாற்றினார்கள். இருந்தாலும் சிவன் சைவ சமயத்தின் பெரிய கடவுள் என மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.
இந்து மதத்தின் பெருமையை அமெரிக்காவில் நிலைநாட்டிப் பேசி உலகையே திரும்பிப் பார்க்கவைத்த விவேகானந்தர், கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்தார். அங்கே பேசினார். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மனோன்மணீயம் சுந்தரனார் அவர் பேச்சின் நடுவே குறுக்கிட்டு, 'வி ஆர் நாட் இந்து’ என்று சொன்னார். அதைக் கேட்ட விவேகானந்தர் 'அப்படி என்றால் நீங்கள் யார்?’ என்றார். அதற்கு 'நாங்கள் சைவர்கள்’ என்றார் சுந்தரனார். அமெரிக்காவில் இந்து மதப் பெருமையைப் பேசி வெற்றி பெற்றுவிட்டு வந்த விவேகானந்தர் திருவனந்தபுரத்தில் நீராரும் கடலுடுத்த பாடலை எழுதிய மனோன்மணீயத்திடம் தோற்றார்.
அதை உணர்ந்து திராவிட இயக்கம் சைவ மதத்தை வளர்க்கவில்லை. மொத்த கடவுளையும் ஒழிப்பதாகக் கூறி, தமிழ் சமயத்தைக் காப்பாற்றப் பெரியார் தவறிவிட்டார். திராவிட இயக்கத்தினருக்குத் தமிழ் சமயம் பற்றிப் புரியவே இல்லை. அது புரிந்து இருந்தால், இந்து சமய அறநிலையத்துறை என்பதைத் தமிழர் சமய அறநிலையத்துறை என்று பெயர் மாற்றி இருப்பார் ஸ்டாலின். நான் கடந்த 7 ஆண்டுகளாக இதைச் சுட்டிக் காட்டி பேசி வருகிறேன்.
ஒருமுறை அறிவாலயத்தில் நடந்த விழாவில் ஸ்டாலினிடமே சொன்னேன். அவர் இதுவரை அந்தப் பெயரை மாற்றவில்லை. தமிழர் சமயம் என மாற்றினால் இந்து எந்த வார்த்தை ஒழிந்துவிடும். அதன் மூலம் இந்துத்துவா வேறு, தமிழர்கள் வேறு எனப் பலருக்கும் புரியவரும் என்று சொல்கிறேன். இதைப் பற்றி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு என்ன தெரியும்?” என்று மிகக் காட்டமாகப் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications