இலவு காத்த கிளிகளாக கட்சிகள்.. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி, துணை முதல்வர்கள் சாத்தியம்தானா?
சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கூட்டணி அரசு குறித்தும் துணை முதல்வர்கள் பதவி குறித்தும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சி என்பதோ துணை முதல்வர்கள் பதவி என்பதோ 'அந்நியமான' சொல்லாடலாக இருந்து வரும் நிலையில் இத்தகைய முழக்கங்கள் 2026 தேர்தலில் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடுமா? என்பதும் விவாதத்துக்குரியதாக இருக்கிறது.
இந்தியாவின் பல மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது; துணை முதல்வர்கள் பதவிகளில் வகிக்கின்றனர். தமிழ்நாட்டிலும் கருணாநிதி முதல்வராக இருந்த போது தற்போதைய முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தார்; எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக்கப்பட்டார்; தற்போது மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவி வகிக்கும் நிலையில் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட்டுள்ளார்.

முதல் பொதுத் தேர்தல்: தமிழ்நாட்டில் முதலாவது பொதுத் தேர்தல் சென்னை மாகாணமாக இருந்தபோது 1952-ல் நடைபெற்றது. அந்த தேர்தலில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது பல கட்சிகளை உடைத்தும் அமைச்சர் பதவிகளை கொடுத்தும் அதாவது கூட்டணி ஆட்சி அமைத்தவர் ராஜகோபாலாச்சாரியார்.
காங்கிரஸ் பெரும்பான்மை: மொழிவாரி மாநில பிரிவினைக்குப் பின்னர் 1957-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மொத்த தொகுதிகள் 205. அப்போது இரட்டை உறுப்பினர் என்பதும் நடைமுறையில் இருந்ததால் 167 தொகுதிகளில்தான் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்தான் திமுக முதன் முதலாக போட்டியிட்டது. இத்தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக காமராஜர் பதவி வகித்தார். 1962-ம் ஆண்டிலும் இரட்டை உறுப்பினர் முறை இருந்தது. இந்த தேர்தலிலும் காங்கிரஸ்தான் பெரும்பானை பெற்றது. இதன் பின்னர் 1967-ம் ஆண்டு முதல் திராவிட அரசியல் கட்சிகளின் சகாப்தம் தொடங்கியது.
1967 முதல் 2001 வரை.. : 1967-ல் இரட்டை உறுப்பினர் முறை ஒழிக்கப்பட்ட நிலையில் 234 தொகுதிகளுடன் தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக பிரம்மாண்டமான கூட்டணியை அமைத்தது. ஆனாலும் திமுக பெரும்பான்மைக்கும் அதிகமாக 137 இடங்களைக் கைப்பற்றியது. அப்போது முதல் திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகளே மாறி மாறி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்து வந்தன. 1971-ல் திமுக 184, 1977-ல் அதிமுக 130, 1980-ல் அதிமுக 129, 1984-ல் அதிமுக 132, 1989-ல் திமுக 150, 1991-ல் அதிமுக 164, 1996-ல் திமுக 167, 2001-ல் அதிமுக 132 இடங்களில் வென்றன.
2006 தேர்தல் முடிவுகள்: ஆனால் 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக 96 இடங்களில்தான் தனித்து வென்றது. அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், பாமக, இடதுசாரி கட்சிகள் திமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தன. அப்போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்தோ கூட்டணி ஆட்சி குறித்தோ பேச்சுகள் எழவும் இல்லை. 2011 தேர்தலில் அதிமுக 146, 2016-ல் அதிமுக 134, 2021-ல் திமுக 133 இடங்களிலும் வென்று தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தன.
ஒரு கட்சி ஆட்சிதான்: அதாவது தமிழ்நாட்டு வாக்காளர்கள் 1967-ம் ஆண்டு முதல் இதுவரை திமுக அல்லது அதிமுக என்கிற ஒற்றை கட்சிக்கே பெரும்பான்மை இடங்களை வாரிக் கொடுத்து வருகின்றனர். 2006-ம் ஆண்டு தேர்தலில் திமுக போட்டியிட்டதே 132 இடங்கள்தான். திமுக தமது கூட்டணி கட்சிகளுக்கு அப்போது தொகுதிகளை வாரி வழங்கியது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 48, பாமக 31, சிபிஐ 10, சிபிஎம் 13 இடங்களில் திமுக கூட்டணியில் போட்டியிட்டன.
உஷாரான திமுக, அதிமுக: இதனால் திமுக, அதிமுக கட்சிகள் மிக உஷாராக பெரும்பான்மைக்கான 117 இடங்களுக்கு பங்கம் வராத வகையில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றன. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் திமுக 188 இடங்களில் போட்டியிட்டது. காங்கிரஸுக்கு 25, சிபிஐ, சிபிஎம், விசிக கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது. சிறிய கட்சிகளுக்கு தொகுதியை தந்தாலும் உதயசூரியன் சின்னத்திலேயே நிற்க வைத்தது. அண்ணா திமுகவும் கடந்த 2021 தேர்தலில் 191 இடங்களிலும் பாமகவுக்கு 23, பாஜகவுக்கு 20 இடங்களைக் கொடுத்தது.
திமுகவின் வியூகம்: 2026 சட்டசபை தேர்தலைப் பொறுத்தவரை திமுக 188 இடங்களை விட கூடுதலான தொகுதிகளில் போட்டியிடவே திட்டமிட்டுள்ளது. 190 முதல் 200 இடங்களில் திமுக போட்டியிடக் கூடும். இதனால் கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகக் கூடும். அதே நேரத்தில் அண்ணா திமுகவோ, பலமான கூட்டணி இல்லாததால் திமுக கூட்டணியில் அதிருப்தி அடையக் கூடிய கட்சிகளை வளைக்கவே பார்க்கும்.
நிராகரிக்கும் திமுக: திமுகவைப் பொறுத்தவரையில் கூட்டணி ஆட்சி அல்லது அதிகாரத்தில் பங்கு, கூட்டணிக் கட்சிகளுக்கு துணை முதல்வர்கள் பதவி என்பதை ஒருபோதும் ஏற்காது; திட்டவட்டமாக நிராகரிக்கவே செய்யும். 2026 தேர்தலில் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலைமை ஏற்பட்டால் மட்டுமே மேலே சொன்ன அத்தனையையும் திமுக தலைமை யோசிக்க வாய்ப்புதான் இருக்கிறது என்கின்றனர் திமுகவின் சீனியர்கள்.
கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன்வைக்குமா அதிமுக?: ஆனால் அண்ணா திமுகவோ, இப்போதே விசிக வந்தால் திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி தரும் என்கிற பேச்சுகளுடன் வலம் வருகிறது. இதனால் 2026 தேர்தலில் திமுக கூட்டணியை உடைக்க, கூட்டணி ஆட்சி- துணை முதல்வர்கள் பதவி என்கிற முழக்கத்தை அதிமுக கையில் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதே நேரத்தில் 2011 தேர்தலில் இப்படித்தான் தேமுதிகவின் விஜயகாந்தை முன்வைத்து மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் அத்தனை கட்சிகளும் கூட்டணி ஆட்சி என பிரசாரம் செய்து மக்களிடத்தில் மரண அடி வாங்கிய வரலாறும் இருக்கிறது. இப்போது அதிமுக தலைமையில் மக்கள் நலக் கூட்டணி பாணியில் ஒரு கூட்டணி உருவாகும் போதும் அதிகாரத்தில் பங்கு என்கிற பிரசாரம் முன்வைக்கப்பட அதிக வாய்ப்புகள் உண்டு. ஆனால் மக்கள் இதனை ஏற்பார்களா? மக்கள் நலக் கூட்டணி 1.0-க்கு கொடுத்த அடி விழுமா? என்கிற ஊசலாட்டம் அதிமுகவுக்கும் வரவே அதிக வாய்ப்பு இருக்கிறது எனவும் மூத்த பத்திரிகையாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
மத்திய அரசிடம் இருந்து பாடம்: ஏனெனில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கூட்டணி ஆட்சி, துணை முதல்வர்கள் என்றாலே நிலைக்காத அரசியல்/ ஆட்சி என்கிற பால பாடத்தை எத்தனையோ 'மத்திய கூட்டணி அரசுகளிடம்' இருந்து பெற்றிருக்கிறார்கள். இருந்த போதும் காலம் மாற்றங்களைக் கொண்டதுதானே.. 2026 தேர்தல் தமிழ்நாட்டில் பழைய அரசியல் பார்முலாவையே தரப் போகிறதா? புதிய கூட்டணி ஆட்சி அத்தியாயத்தை எழுதப் போகிறதா? என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாகும்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications