2021ல் 24 மணி நேரத்திற்குள் முழு டேட்டாவை வெளியிட்ட தேர்தல் ஆணையம்.. இப்போ 10 நாள்.. ஏன் இவ்ளோ லேட்?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து 10 நாட்களுக்குப் பிறகு தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். கடந்த 2021 சட்டசபை தேர்தல் முடிவடைந்த 24 மணி நேரத்தில் முழு வாக்குப்பதிவு விவரங்கள் வெளியிடப்பட்டது. 2024 மக்களவை தேர்தலில் 10 நாட்கள் கழித்து வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 4 முனைப் போட்டி நிலவிய இந்தத் தேர்தலில், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. அன்றைய நாளின் இறுதியில் இரவு நேரத்தில், வாக்குப்பதிவு 85.15% என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

2 நாட்களுக்குப் பிறகு, மறுசரிபார்ப்பிற்குப் பின் இந்த தற்காலிக சதவீதத்தை 85.10% ஆக தேர்தல் ஆணையம் திருத்தியது. எனினும், முழுமையான வாக்குப்பதிவு விவரங்கள் வெளியிடப்படாமல் இருந்தது. சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, வரும் திங்கட்கிழமை (மே 4) நடைபெற உள்ள நிலையில் இன்று வரை முழுமையான வாக்குப்பதிவு விவரங்கள் வெளியிடப்படாததால் குழப்பம் நிலவியது.
இந்நிலையில், மே 2 ஆம் தேதியான இன்று தொகுதி வாரியான வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். தமிழகத்தில் மொத்தமாக 4.87 கோடி பேர் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். அதாவது வாக்குப்பதிவு சதவீதம் 85.10%. கரூர் மாவட்டம் 92.6% பெற்று முதலிடம் பிடித்துள்ளது.
நாளை மறுநாள் மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. இந்நிலையில் தேர்தல் நடைபெற்று 10 நாட்களுக்குப் பிறகு இன்றுதான் வாக்குப்பதிவு விவரங்கள் தொகுதி வாரியாக முழுமையாக தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நடந்து முடிந்து 10 நாட்களுக்குப் பிறகு வாக்குப்பதிவின் முழு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவை தேர்தலுக்கான முதல் 2 கட்ட வாக்குப்பதிவின் இறுதி வாக்காளர் எண்ணிக்கைத் தரவுகளை 2024 ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியிட்டது. அதாவது முதல் கட்ட வாக்குப்பதிவின் (19 ஏப்ரல் 2024) முழு டேட்டா10 நாட்களுக்குப் பிறகுதான் வெளியிடப்பட்டது. இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின் தரவுகள் (26 ஏப்ரல் 2024) 4 நாட்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டது.
முன்பு தேர்தல்களின் போது, வாக்குப்பதிவு முடிந்த 24 மணி நேரத்திற்குள் முழுமையான வாக்குப்பதிவு விவரங்களை ஆணையம் வெளியிட்டு வந்தது. கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்த நாளான ஏப்ரல் 7 ஆம் தேதி காலையில், தேர்தல் ஆணையம் முழுமையான வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட்டது. இதில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு சதவீதம் தனித்தனியாக வெளியிடப்பட்டது.
ஆனால், கடந்த 2024 மக்களவைத் தேர்தலின்போதும், தற்போது தமிழக சட்டசபை தேர்தலின்போதும், வாக்குப்பதிவு முழு டேட்டாவை வெளியிட 10 நாட்கள் எடுத்துக் கொண்டுள்ளது தேர்தல் ஆணையம். வாக்குப்பதிவு, EVM இயந்திரங்கள் மூலம் எளிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வாக்குப்பதிவின் துல்லிய விவரங்களை வெளியிட ஏன் இவ்வளவு தாமதம் என்ற கேள்வி அரசியல் கட்சிகளால் எழுப்பப்படுகிறது.
நாடு முழுவதும் பதிவான வாக்குகளை சில மணி நேரத்தில் எண்ணி முடிக்க முடியும் என்ற நிலையில், வாக்குப் பதிவு நடந்து 10 நாட்களுக்குப் பிறகு தான் வாக்குப்பதிவு எவ்வளவு என்பதை தர முடியுமா? தேர்தல் ஆணையத்தால் வாக்குச் சாவடி வாரியான எண்களை ஏன் விரைந்து கொடுக்க முடியவில்லை என்ற கேள்வி எழுந்து வருகிறது.













Click it and Unblock the Notifications