இப்படி வீக்காகவா இருப்பாங்க.. பால்கனியில் விழுந்து காப்பாற்றப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை ஏன்?
சென்னை: சென்னையில் திருமுல்லைவாயிலில் அடுக்குமாடி குடியிருப்பில் பால்கனியில் இருந்து தவறி விழுந்த 7 மாத குழந்தை மீட்கப்பட்ட நிலையில் அந்த குழந்தையின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் இறந்ததற்கு காரணம் பொறுப்பற்ற தாய் என சமூகவலைதளங்களில் இருந்து வந்த கமென்ட்கள்தான் என சொல்லப்படுகிறது.
சென்னை ஆவடி திருமுல்லைவாயிலில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு வெங்கடேஷ் - ரம்யா தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டியிருப்பதால் ரம்யா தான் பார்த்துக் கொண்டிருந்த வேலை தற்காலிகமாக ராஜினாமா செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வீட்டில் இருந்த ரம்யா குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி தனது வீட்டு பால்கனியில் நின்றுக் கொண்டு 7 மாத குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது ரம்யாவின் கையில் இருந்த குழந்தை திடீரென துள்ளியது. இதில் 4 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்தது.
அப்போது முதல் மாடியில் இருந்த சன்ஷேடில் குழந்தை விழுந்தது. இதை பார்த்துக் கொண்டிருந்த அக்கம் பக்கத்து வீட்டினர், கூச்சலிட்டனர். பிறகு அந்த குழந்தையை மீட்க அந்த குடியிருப்புவாசிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். குழந்தை கீழே விழுந்தாலும் அடிபடாதவாறு கீழே மெத்தையை விரித்து வைத்திருந்தனர்.
நல்வாய்ப்பாக அந்த குழந்தையை அந்த குடியிருப்பு இளைஞர்கள் நல்லபடியாக மீட்டுக் கொடுத்தனர். குழந்தை கீழே விழுந்த அதிர்ச்சியில் ரம்யா இருந்ததால், அவர்கள் குடும்பத்துடன் கோவை மாவட்டத்தில் காரமடையில் ரம்யாவின் தாய் வீட்டுக்கு சென்றனர். இந்த நிலையில் ரம்யாவின் தாய், தந்தை ஏதோ ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டனர்.
அப்போது வீட்டில் ரம்யா மட்டும் இருந்துள்ளார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமண நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய பெற்றோர், மகள் பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குழந்தையை காப்பாற்றிய நிலையில் தாயை காப்பாற்றாமல் போனது சோகத்திலும் சோகம்! ரம்யா இறந்ததற்கு குழந்தை கீழே விழுந்தது முதல் அவர் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்களில் கேட்ட போது, குழந்தை தவறி கீழே விழுந்ததில் இருந்தே ரம்யா மன வேதனையில் இருந்தாராம்.
குழந்தையை குடியிருப்புவாசிகள் காப்பாற்றிய விவகாரம் வைரலானதை அடுத்து பொறுப்பற்ற தாய் என சமூகவலைதளங்களில் விமர்சிக்கப்பட்டார். குழந்தை காப்பாற்றப்பட்டது குறித்து குடியிருப்புவாசிகள் கொடுத்த பேட்டியும் வைரலானது. அவர்களில் சிலரும் குழந்தையின் தாய் மீது குற்றச்சாட்டை முன் வைத்தனராம்.
இந்த நிலையில் அந்த சம்பவம் நடந்த போது அவருடன் இருந்த பெண் ஒருவர் கூறுகையில், குழந்தை கீழே விழுந்ததும் ரம்யா துடியாய் துடித்து போனார். இது தற்செயலாக நடந்த விபத்து, இதற்கு குழந்தையின் தாயை யாரும் விமர்சிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தார். இதனிடையே காரமடை போலீஸார் இறந்த ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications