சென்னை வெள்ளத்தடுப்பு.. திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட தயக்கம் ஏன்? முதல்வருக்கு அன்புமணி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகள் அடங்கிய திருப்புகழ் குழு அறிக்கை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தவெக அரசு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பேரிடரிலிருந்து சென்னை மாநகரைப் பாதுகாப்பதற்கான மிகவும் முக்கியமான ஓர் ஆவணம் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் அரசு பதிலளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "தமிழக சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள், சென்னையில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட திருப்புகழ் குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 41 மாதங்களாகியும் மக்கள் பார்வைக்கு வெளியிடப்படாததை சுட்டிக்காட்டி, அதை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரினார்.

Why the reluctance to release the Thirupugazh Committee report about Chennai flood Anbumani

அதற்கு பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், ''திருப்புகழ் குழுவின் அறிக்கையை திமுக அரசு வெளியிட்டிருக்க வேண்டும்; ஆனால், ஏன் அவர்கள் வெளியிடவில்லை என்று தெரியவில்லை. இதுதொடர்பாக பத்திரிகை செய்திகள் வந்ததை மட்டும் தான் பார்த்தோம். இப்போது வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்க வருவாய் நிர்வாக ஆணையர் முருகானந்தம் தலைமையில் 7 பேர் கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார். மழை &வெள்ளத்திலிருந்து சென்னை மாநகரைப் பாதுகாப்பதற்கான திருப்புகழ் குழு அறிக்கையை திமுக அரசு வெளியிடாதது தவறு; அதை நாங்கள் உடனடியாக வெளியிடுவோம் என்பதாகத் தான் அமைச்சரின் பதில் இருந்திருக்க வேண்டும். அத்தகைய பதில் அரசிடமிருந்து வராதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

2021-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழையும், அதன் காரணமாக சென்னை மாநகரம் முழுவதும் ஏற்பட்ட வெள்ளமும் மறக்க முடியாத கொடுமையான நிகழ்வுகள். அதைத் தொடர்ந்து சென்னையில் எத்தகைய வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பரிந்துரைப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுனர் குழுவை திமுக அரசு அமைத்தது. அந்தக் குழு அதன் இடைக்கால அறிக்கையை 2022-ம் ஆண்டு மே மாதத்திலும், இறுதி அறிக்கையை 2023- மார்ச் 14-ம் தேதியும் அரசிடம் தாக்கல் செய்தது.

நான் அறிந்தவரை திருப்புகழ் குழுவின் அறிக்கையில் 161 பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன; அவற்றை செயல்படுத்தியிருந்தாலே சென்னையில் எதிர்காலத்தில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முடியும். இத்தகைய அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் போது, அதை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு, அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் செயல்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், திருப்புகழ் குழுவை அமைத்த திமுக அரசே, ஏதோ காரணங்களுக்காக திருப்புகழ் குழுவின் அறிக்கையை வெளியிடாமல் மூடி மறைத்தது. அது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி பல தருணங்களில் வினா எழுப்பிய போது, சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருப்புகழ் குழு அறிக்கையின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன; மொத்தமுள்ள 161 பரிந்துரைகளில் 101 செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். ஆனால், செயல்படுத்தப்பட்ட 101 பரிந்துரைகளும் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.

என்னாலும், நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் வல்க்லுனர்களாலும் புரிந்து கொள்ள முடியாத உண்மை என்னவென்றால், பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவிட்டு, விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட திருப்புகழ் குழுவை வெளியிட முடியாத அளவுக்கு அதில் என்ன இரகசியம் இருக்கிறது என்பது தான்? மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையை யாருக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதற்காக கடந்த 3 ஆண்டுகளாக திமுக அரசு கிடப்பில் போட்டது என்பது தான்?

திருப்புகழ் குழுவின் அறிக்கை என்பது கடையில் வாங்கப்பட்ட புத்தகம் அல்ல. 2021&ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு, 2023&ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மொத்தம் 17 மாதங்களுக்கு பல்வேறு கள ஆய்வுகளையும், அதில் கிடைத்த தரவுகளின் மீதான பகுப்பாய்வுகளையும் மேற்கொண்டு தான் 2023&ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. அதற்காக கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை எந்த வகையிலும் வீணடிக்கப்படக் கூடாது.

சென்னையில் இனி வரும் காலங்களில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே தீர்வு திருப்புகழ் குழுவின் அறிக்கையை செயல்படுத்துவது தான். அந்த அறிக்கையை திமுக வெளியிடாமல் இருந்ததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், தவெக அரசுக்கு அத்தகைய காரணங்கள் எதுவும் இல்லை. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு உரையாற்றிய முதலமைச்சர் விஜய் அவர்கள், எனது அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என்று அறிவித்தார். அதை வெளிப்படுத்துவதற்கு சிறந்த வாய்ப்பு திருப்புகழ் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை செயல்படுத்துவது தான்.

திருப்புகழ் குழு அறிக்கையை செயல்படுத்துவதற்கு பொறுப்பான நகராட்சி நிர்வாகத்துறையை முதலமைச்சர் விஜய் அவர்கள் தான் நிர்வகித்து வருகிறார். அதனால், திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிடுவதற்கான முன்முயற்சிகளை முதலமைச்சர் அவர்களே மேற்கொள்ள வேண்டும். திமுக அரசின் தவறுகளை தமது அரசு திருத்தி வருவதாகக் கூறி வரும் முதலமைச்சர் அவர்கள், திமுகவின் இந்தத் தவறையும் திருத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இன்னும் 50 நாள்களே உள்ளன. அதனால், இனியும் தாமதிக்காமல் திருப்புகழ் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த வேண்டும்; மீண்டும் ஒருமுறை சென்னையை வெள்ளத்தில் மிதக்க விடக்கூடாது என வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+