10 நொடிக்கு ரூ.4.5 லட்சம் தருவதாக சொன்னார்கள்.. நிராகரித்த வில்லேஜ் குக்கிங் சேனல்! காரணம் இதுதான்!
சென்னை: உலக முதலீட்டாட்டாளர் மாநாட்டின் இன்றைய அமர்வில், தி வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் கலந்துரையாடினர். அப்போது, தாங்கள் ஏன் பிராண்ட் ப்ரொமோஷன் செய்வதில்லை என்பது பற்றி அவர்கள் கூறினர்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 50 நாடுகளை சேர்ந்த தொழில் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்குவதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் 2ஆம் நாள் அமர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கொட்டும் மழைக்கு மத்தியிலும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த மாநாட்டிற்கு வருகை தந்தார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் கடைசி நாளான இன்று 300க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், உலக முதலீட்டாளர் மாநாட்டில், யூடியூபில் கலக்கும் 'தி வில்லேஜ் குக்கிங்' சேனலை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். புதுக்கோட்டையில் உள்ள சின்ன வீரமங்கலம் கிராமத்தில் இருந்து தி வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலை நடத்தி வரும் பெரியதம்பி, அய்யனார், முத்துமாணிக்கம், முருகேசன், தமிழ் செல்வன், சுப்பிரமணியன் ஆகிய 6 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தி வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு 2.33 கோடி சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இந்தியாவின் குக்கிராமம் ஒன்றில் இருந்து செயல்படும் இவர்களின் யூடியூப் வீடியோக்களுக்கு உலக நாடுகளில் இருந்து ஏராளமானோர் ரசிகர்களாக உள்ளனர். யூடியூப் மூலம் மாதந்தோறும் ரூபாய் 10 லட்சத்திற்கும் அதிகமாக சம்பாதித்து வருகின்றனர் இந்தக் குழுவினர்.
இந்நிலையில், உலக முதலீட்டாளர் மாநாட்டின் ஒரு அமர்வில், கிரியேட்டவ் எக்கானமி குறித்து இவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது, தாங்கள் ஏன் பிராண்ட்களுக்கு தங்கள் வீடியோவில் ப்ரொமோஷன் விளம்பரம் செய்வதில்லை என்பது பற்றி பகிர்ந்து கொண்டனர். யூடியூப் சேனல் ஆரம்பிப்பதற்கு முன்பே, இதை இதைத்தான் செய்ய வேண்டும் என சில விதிமுறைகளை தங்களுக்கென வகுத்துக் கொண்டனராம்.
அந்த விதிமுறைகளை தற்போது வரை பின்பற்றி வருகின்றனராம். அதன்படி, தங்கள் சேனல் வீடியோவில் பிராண்ட் ப்ரொமோஷன் செய்யக்கூடாது என்பதும் அவர்களின் முடிவாம். கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தில் இந்தக் குழுவினர் நடித்த நிலையில், அப்படத்திற்கு கூட இவர்களின் சேனலில் ப்ரொமோஷன் செய்யவில்லை. மேலும், ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், "ஒருவரிடம் இருந்து பணம் வாங்கிவிட்டால், அதற்காக அவர்களுக்கு வேலை செய்ய வேண்டி இருக்கும். நமது வீடியோவில் அவர்களுக்கு சில நொடிகளை ஒதுக்க வேண்டும். எங்கள் ஆடியன்ஸ் எங்கள் வீடியோவை பிடித்திருப்பதால் தான் பார்க்கிறார்கள். அதற்கு இடையே, ஏதாவது பொருட்களுக்கு ப்ரொமோஷன் செய்வதற்கு எங்களுக்கு மனம் ஒப்பவில்லை.
ஏற்கனவே யூடியூபில் விளம்பரம் மூலம் வருமானம் வருகிறது. அதற்கு மேலும் கூடுதலாக தனியாக விளம்பரம் பார்க்க வைத்து வருமானம் பெற விரும்பவில்லை. ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாம் கண்டெண்ட் தர வேண்டும் என்பதற்காகவே பிராண்ட் ப்ரொமோஷன்களை தவிர்த்து வருகிறோம். எங்கள் சேனலுக்கு 5 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இருந்தபோது நாங்கள் ஒரு பிராண்ட் ப்ரொமோஷன் ஆஃபரை மறுத்தோம்.
ஒரு சாக்லேட் கம்பெனியினர் வந்து, உங்கள் வீடியோவில், யாருக்காவது பிறந்தநாள் என எங்கள் சாக்லேட்டை கொடுக்க வேண்டும். ஒரு 10 செகண்ட் வந்தால் போதும், ரூபாய் நான்கரை லட்சம் தருகிறோம் என்று கூறினார்கள். 5 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இருந்தபோதே அவ்வளவு. இப்போது 22 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் என்பதால் இந்த மதிப்பு எவ்வளவோ இருக்கும். அப்போது வந்த ஆஃபரை மறுத்தோம். அதன் பிறகும் ஏராளமான வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், அவற்றைச் செய்வதில் எங்களுக்கு விருப்பம் இல்லை" எனத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications