உதயநிதி திமுக தலைவர் மகன்.. அதுதான் அவர்கள் பிரச்னை.. குறி வைக்க காரணம் இதான்.. திருமாவளவன் பேச்சு!
சென்னை: சனாதனம் என்றால் பயங்கரவாதம் என்பது உதயநிதி ஸ்டாலினின் தலையைச் சீவ 10 கோடி அறிவித்ததில் இருந்தே தெரிகிறது. திமுகவின் தலைவர் மகன் உதயநிதி, அது தான் அவர்கள் பிரச்னை என விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குலத்தொழிலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி ஆ.ராசா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனிதநேய கட்சித் தலைவர் ஜவஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன் எம்.பி, "பொதுமக்களுக்கு கடன் கொடுத்து அவர்களை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த திட்டம் ஆபத்தானது. சாதிய கட்டமைப்பை நிலைநிறுத்த இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இந்த திட்டத்தை எதிர்த்து எந்த மாநிலமும் போராட்டம் நடத்தவில்லை. தமிழ்நாட்டில் தான் முதலில் நடக்கிறது.
சனாதனம் என்றால் பயங்கரவாதம் என்பது உதயநிதி ஸ்டாலினின் தலையைச் சீவ 10 கோடி அறிவித்ததில் இருந்தே தெரிகிறது. இந்த சனாதனம் பற்றி தற்போது தேசிய அளவில் பேசப்படுகிறது. இதனை நாம் பெருமையாக நினைக்க வேண்டும். இதனை பற்றி நாம் தொடர்ந்து பேச வேண்டும். திமுகவின் தலைவர் மகன் உதயநிதி, அது தான் அவர்கள் பிரச்னை. அதனால் தான் அவரை இழிவுபடுத்துகிறார்கள்.
இந்தியா கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். பாஜகவின் ஆத்திரம் திமுக மீது தான். இந்தியா கூட்டணியை யாராலும் சிதைக்க முடியாது. திமுக இல்லாமல் இந்தியா கூட்டணி இல்லை. அது தான் உண்மை. இந்தச் சூழலில் தான் நாம் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் விழிப்பாக இருந்தால் பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிய முடியும்.
சமத்துவம் என்பது தலித் மக்களுக்காக மட்டும் பேசும் அரசியல் அல்ல, ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் சமத்துவம் தேவை. பாகுபாடு என்பதுதான் இந்து மதத்தின் ஆன்மாகவாக இருக்கிறது. இந்த பாகுபாட்டைத்தான் சனாதனம் என்கிறோம். எல்லாவற்றிலும் மாற்றம் நிகழும் என்பது இயங்கியல், எந்த மாற்றமும் ஏற்படக்கூடாது என்பது சனாதனம்.
சனாதனம் பற்றி நாம் தொடர்ந்து பேச வேண்டும். இந்து மக்களிடையே உள்ள இயல்பான நம்பிக்கையை, அரசியல் ஆதாயமாக மாற்றும் செயல் திட்டத்தை பாஜக தீட்டிவருகிறது. பெரும்பான்மை இந்துக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். சனாதனம் பற்றி நாம் தொடர்ந்து பேச வேண்டும். இந்தியாவை இந்துஸ்தான் என்று மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் பாஜவினர் இந்திய அரசியல் சட்டத்தை மாற்ற நினைக்கிறார்கள். பொய் பரப்புரை செய்து இந்துக்களின் வாக்குகளை ஏமாற்றி பெற்றுவிடலாம் என்று பாஜக திட்டம் போடுகிறது" எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications