திருமாவளவன் அவர்களே.. அந்த "மர்மம்" என்ன?.. மதவெறியை தூண்டி.. கொந்தளிக்கும் தமிழக பாஜக
திருமாவளவனுக்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது
சென்னை: "பட்டியலின, பழங்குடி மக்கள் மதமும், சாதியுமில்லாத மண்ணின் மைந்தர்கள், ஆனால், இந்து பெரும்பான்மை என காட்டுவதற்காக அவர்களை இந்து பட்டியலில் இணைத்து, சான்றிதழ் வழங்கி வருகிறோம். இதுவே அவர்களுக்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகம்.. எனவே, இவர்கள் அனைவரையும் பூர்வ பவுத்தர்கள் என அறிவிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று திருமாவளவன் நாடாளுமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த பழங்குடியின மக்களை எஸ்டி பட்டியலில் சேர்ப்பது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்பியுமான திருமாவளவன் இதுகுறித்து பேசியதாவது:

வன்கொடுமை
எஸ்சி, எஸ்டி மக்கள் மதமில்லா மண்ணின் மைந்தர்கள்.. இவர்களுக்கென்று எந்த மதமும் இல்லை.. எந்த சாதியும் இல்லை... ஆனால் இந்துக்கள் பெரும்பான்மை என்பதற்காக, இவர்களுக்கு இந்துக்கள் என சான்றிதழ் வழங்கி வருகிறோம்... இதுவே அந்த மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்தான்.. பொருளாதாரம், கல்வி,வேலைவாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மேம்படுத்த, காலம் காலமாக இழைக்கப்படும் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாப்பதற்கும் துளியும் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்பதை சுதந்திர இந்தியா நமக்கு உணர்த்தியுள்ளது.

அம்பேத்கர்
அதனால், அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர் விரும்பியபடி இவர்கள் இந்துக்கள் இல்லை என்பதை பிரகடனப்படுத்த வேண்டும் அல்லது இவர்கள் அனைவரையும் பூர்வ பவுத்தர்கள் என அறிவிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். அதேபோல, பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் பெறுவதிலும் நிறைய நெருக்கடிகளை இவர்கள் எதிர்கொள்கிறார்கள்.. தமிழ்நாட்டில் இருளர், குரும்பர்கள் கல்வி பயில, வேலைவாய்ப்புக்கு சாதிச் சான்றிதழ் பெற முடியாத சூழல் இன்னமும் இருக்கிறது..

சான்றிதழ்
இதனால், வீட்டு மனைப் பட்டா பெறுவதற்கு கூட முடியாத சூழல் உள்ளது... அவர்களுக்கு சாதி சான்றிதழ் எளிதாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.. காலம் காலமாக நீர்நிலையோரத்தில் இந்த மக்கள் வசிக்க வேண்டியதாயிற்று.. இதையே காரணம் காட்டி, "நீங்கள் நீர்நிலைகள் அருகே வசிக்கிறீர்கள், பட்டா தர முடியாது" என்று மறுத்துவிடுகிறார்கள்.. அதனால், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சாதிச் சான்றிதழை இலகுவாக வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்" என்று திருமாவளவன் கேட்டுக் கொண்டிருந்தார்.

திருப்பதி நாராயணன்
இதற்குதான் பாஜக கொந்தளித்துள்ளது.. தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருமாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக ஒரு ட்வீட்டையும் அவர் பதிவிட்டுள்ளார்.. அதில், "விளம்பரத்திற்காக அரசியல் வியாபாரம் செய்யும் திருமாவளவன் அவர்களே, 19/04/2019 ல் ஹிந்துவாக இருந்த பட்டியலின மக்கள், நானும் ஹிந்து தான், என் அம்மாவும் ஹிந்து தான், என் பின்னால் உள்ளவர்கள் 90 % ஹிந்துக்கள் தான் என்று நவம்பர் 2019ல் பாராளுமன்றத்தில் இருந்து பேசுகிறேன் என்று கூறிய நீங்கள், இன்று இப்படி பேசியுள்ளதன் மர்மம் என்ன? யாருடன் வியாபாரம்?

திருப்பதி நாராயண் ட்வீட்
மதரீதியான மோதலை உருவாக்கி மதவாத அரசியலுக்கு வித்திடுவது ஏன்? மதசார்பற்ற நாட்டில் மதவெறியை தூண்டுவது ஏன்? மதரீதியான மோதலை உருவாக்கி மதவாத அரசியலுக்கு வித்திடுவது ஏன்? மதசார்பற்ற நாட்டில் மதவெறியை தூண்டுவது ஏன்?''என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருக்கிறார். இதற்கு விசிகவினர் திரண்டு வந்து கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications