இடைத்தேர்தலில் போட்டியிட திமுக முடிவெடுத்தது ஏன்? முதல் ஆளாக முந்தியது ஏன்? பின்னணி
சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே, திமுக தனது வேட்பாளர்களை அறிவித்து அரசியல் களத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால், இந்த வேட்பாளர் அறிவிப்புக்கு பின்னால் அண்ணா அறிவாலயத்தில் மிகப்பெரிய உட்கட்சி விவாதமும், ஒரு முக்கிய தலைமுறை மாற்றத்துக்கான நகர்வும் அரங்கேறியுள்ளது.
தொடக்கத்தில் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு துளியும் விருப்பம் இல்லை என்றும், உதயநிதி ஸ்டாலின் எடுத்த தீர்க்கமான முடிவே திமுகவை தேர்தல் களத்திற்கு கொண்டு வந்துள்ளது என்றும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலின் தயங்கியது ஏன்?
பொதுவாகவே இடைத்தேர்தல்கள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்ற நிலை நிலவும் சூழலில், தற்போது தமிழக அரசியல் களம் புதிய வடிவம் எடுத்துள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள சூழலில், இந்தத் தேர்தல் தவெக மற்றும் அதிமுக இடையிலான கௌரவப் பிரச்சனையாகவே பார்க்கப்பட்டது.
இடைத்தேர்தல்களில் தேவையின்றி கவனம் செலுத்துவதை விட, அரசியல் வியூகங்களில் கவனம் செலுத்தலாம் என்பதே ஸ்டாலினின் ஆரம்பக்கட்ட யோசனையாக இருந்தது. இடைத்தேர்தல் களம் என்பது எப்போதும் கணிக்க முடியாத ஒன்று.. அதில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டால் அது கட்சியின் பொதுவான இமேஜை பாதிக்கும் என்பதால், இந்தத் தேர்தலை தவிர்த்துவிடலாம் என்றே மூத்த தலைவர்கள் சிலரும் கருத்து தெரிவித்தனர்.
உதயநிதி வைத்த வலுவான வாதம்
தலைமை தயங்கிய இந்த இடத்தில்தான் உதயநிதி ஸ்டாலின் மிகத் தீவிரமான நிலைப்பாட்டை எடுத்தார்.
திமுக போன்ற பல கால பாரம்பரியமிக்க ஒரு பெரிய இயக்கம், எந்தவொரு தேர்தல் களத்திலிருந்தும் பின்வாங்கக் கூடாது என்பதில் உதயநிதி உறுதியாக இருந்தார். "நாம் களத்தை விட்டு விலகினால், அது தேர்தல் பயம் என எதிர்த்தரப்பால் பிரச்சாரம் செய்யப்படும். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தவர்கள் மீண்டும் களம் காணும் போது, நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நமது வாக்கு வங்கி அப்படியேதான் இருக்கிறது என்பதை நிரூபிக்க இதுவே சரியான வாய்ப்பு" என்று கட்சியின் உயர் மட்டக் கூட்டத்தில் அவர் வாதிட்டார்.
'நான் களத்தில் இறங்குகிறேன்' - உதயநிதியின் வாக்குறுதி
வெறும் வாதத்தோடு மட்டும் நிற்காமல், இந்த இடைத்தேர்தலின் முழுப் பொறுப்பையும் தானே ஏற்பதாக உதயநிதி ஸ்டாலின் முன்வந்தார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் நானே நேரடியாக களத்தில் இறங்கி தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கிறேன். இரண்டு தொகுதிகளிலும் தீவிர வீதி வீதி பிரச்சாரத்தை மேற்கொள்கிறேன். தேர்தல் வெற்றிக்கான முழு உழைப்பையும் இளைஞரணியும் களப் பணியாளர்களும் கொடுப்பார்கள் என்று அவர் ஸ்டாலினிடம் உறுதியளித்தார்.
களத்தில் இறங்கி வேலை செய்ய உதயநிதி காட்டிய இந்த அதிரடி உற்சாகமும், இளம் தலைமுறையினரை முன்னிறுத்தி தேர்தல் வேலைகளை இழுத்துப் போடும் தைரியமும் இறுதியில் மு.க. ஸ்டாலினை சம்மதிக்க வைத்தது.
வேகமெடுத்த வேட்பாளர் தேர்வு
உதயநிதியின் இந்த உறுதிமொழிக்குப் பிறகே, வேட்பாளர் தேர்வும் மின்னல் வேகத்தில் முடிந்தது.
மதுராந்தகத்தில் சட்டத்துறை வல்லுநரும் தொலைக்காட்சி விவாதங்களில் திறம்பட வாதாடும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஐ. பரந்தாமன் தேர்வு செய்யப்பட்டார்.
தாராபுரத்தில் உள்ளூர் மக்களின் ஆதரவு பெற்ற எளிய களப்பணியாளரான எஸ். சுகன்யா நிறுத்தப்பட்டார்.
இரண்டு தொகுதிகளிலுமே எளிதில் அணுகக்கூடிய, களத்தில் சுறுசுறுப்பாக வேலை செய்யக்கூடிய வேட்பாளர்களை உடனடியாக அறிவித்து, தேர்தல் பிரச்சாரத்தில் பிற கட்சிகளை விட திமுக முந்திக்கொண்டது.
மும்முனைப் போட்டியில் தகிக்கும் களம்
திமுக போட்டியில் இறங்காது என எதிர்பார்த்துக் கொண்டிருந்த எதிர்க்கட்சிகளுக்கு, உதயநிதியின் இந்த அதிரடி களம் இறங்கல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் வெறும் தொகுதி இடைத்தேர்தலாக மட்டும் இல்லாமல், திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய மூன்று கட்சிகளின் பலப்பரீட்சை களமாக மாறியுள்ளது. தேர்தல் களத்தை தானே முன்னின்று வழிநடத்துவதாகக் கூறியுள்ள உதயநிதி ஸ்டாலினின் இந்த வியூகம் எந்த அளவுக்கு பலனளிக்கப் போகிறது என்பதை அக்டோபர் 9 தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும்.


Click it and Unblock the Notifications
