2 விஐபிகளுக்கு "குறி" வைத்த பாஜக.. வீடியோ சம்பவம் ஞாபகம் இருக்கா.. மெகா பதவிகள்.. சமாளிக்குமா திமுக
நாடார் ஓட்டுக்களை குறி வைத்து சசிகலா புஷ்பாவுக்கு பதிய பதவி தரப்பட்டுள்ளதாக தெரிகிறது
சென்னை: தமிழக பாஜகவில் முக்கிய தலைவர்களுக்கு புதிய பதவிகள் அளிக்கப்பட்டுள்ளது.. இது எந்த அளவுக்கு கட்சிக்கு பலனை பெற்று தரும்? என்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
பாஜகவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏராளமான அதிரடிகளை எடுத்து வருகிறார்..
அதிமுகவை முந்திக் கொண்டு, பாஜக உயர்த்த துடித்து கொண்டிருக்கிறார்.. திமுகவுக்கு மாற்று தாங்கள்தான் என்பதையும் போகிற இடமெல்லாம் சொல்லி கொண்டு இருக்கிறார்.

பால்கனகராஜ்
இதனிடையே கட்சிக்குள் சரியாக செயல்படவில்லை என்று கூறி 26 மாவட்ட தலைவர்களை சமீபத்தில் நீக்கியிருந்தார்.. இப்போது அதிமுக முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் ஆர்சி பால் கனகராஜ், வி.பி. துரைசாமி, நாராயணன் திருப்பதி, கரு. நாகராஜன் உள்ளிட்ட 11 பேர் மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எம்.முருகானந்தம், முன்னாள் மேயர் கார்த்தியாயினி உள்ளிட்ட ஐந்து பேர் மாநில பொதுச் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கராத்தே தியாகராஜன்
முன்னாள் மேயரான கராத்தே தியாகராஜன், வினோஜ் p. செல்வம், எஸ்.சரவணகுமார், மீனாதேவ், சுமதி வெங்கடேசன் உள்ளிட்ட 13 பேர் மாநில செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்... இந்த நியமனங்கள் அனைத்துமே, திடுதிப்பென்று அண்ணாமலை அறிவித்துவிடவில்லை.. வரப்போகும் எம்பி தேர்தலுக்கு கணக்கு போட்டே ஒவ்வொருவரின் நியமனமும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

விபி துரைசாமி
விபி துரைசாமியை பொறுத்தவரை, திமுகவில் மிகப்பெரிய செல்வாக்குடன் வலம் வந்தவர்.. ஆனால், திமுகவிலிருந்து விலகி பாஜகவுக்குச் சென்றவுடனேயே மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.. மாற்று கட்சியில் இருந்து வந்த ஒருவருக்கு மிகப்பெரிய பதவியை பாஜக தந்து அழகு பார்த்தது என்றாலும், அதற்கு பிறகு விபி துரைசாமிக்கான முக்கியத்துவம் கட்சிக்குள் குறைந்துவிட்டது என்றே சொல்லப்பட்டது.. இந்த அதிருப்தி துரைசாமிக்கே இருந்து வந்ததை மறுக்க முடியாது.

காந்தி - வீடியோ
சமீபத்தில்கூட வள்ளுவர் கோட்ட பாஜக ஆர்ப்பாட்டத்தில், மைக்கை எடுத்து துரைசாமி பேசும்போது, அவரை பேசவிடாமல் இடையூறு செய்து முழக்கமிட்டபோதும் சரி, அதே மேடையில், எம்.ஆர்.காந்தியின் தோளில் கைவைத்தபோது, ஆத்திரமடைந்த எம்.ஆர்.காந்தி போராட்ட மேடை என்றும் பார்க்காமல், துரைசாமியின் கையை அடித்து தட்டிவிடும்போது சரி, அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானதையும் மறுக்க முடியாது.

துரைசாமி
இந்த அதிருப்திகளை களையும் விதமாகவும், விபி துரைசாமியின் தேவை வரப்போகும் தேர்தலில் தவிர்க்க முடியாது என்பதற்காகவும், பொதுச்செயலாளர் பதவி தரப்பட்டதாக கூறப்படுகிறது.. ஆனால், "துரைசாமியை திமுக கை நழுவ விட்டிருக்க கூடாது" என்ற ஆதங்கம் இன்றுவரை நிலவி வருவதை மறுக்க முடியாது.

சசிகலா புஷ்பா
அதேபோல, சசிகலா புஷ்பாவுக்கும் பதவி தரப்பட்டுள்ளது.. இத்தனை நாளும் இல்லாமல் இப்போது ஏன் இந்த முக்கியத்துவம் என்ற சந்தேகம் பரவலாக எழாமல் இல்லை.. கடந்த எம்பி தேர்தல் நடந்து முடிந்த சமயத்தில், சசிகலா புஷ்பாவுக்கு தமிழக பாஜகவினர் போஸ்டர் ஒட்டி வாழ்த்து தெரிவித்து கொண்டிருந்தார்கள்.. அதில். "அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு 'வீரமங்கை', "தமிழகத்தின் ஜான்சிராணி", 'பொய்வழக்கை முறியடிக்க புறப்பட்ட புயல்' என்ற பட்டங்களுடன் நாடார் சமுதாயம் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது தற்போது நினைவுகூரத்தக்கது.

முக்கிய புள்ளிகள்
அதுமட்டுமல்ல, கடந்த முறை எம்பி தேர்தலின்போதே, சில அதிமுக முக்கிய புள்ளிகளை தட்டி தூக்கி பாஜக பக்கம் கொண்டு வர, சசிகலா புஷ்பாவுக்கு மேலிடம் அசைன்மென்ட் தந்திருப்பாக கூறப்பட்டது.. தற்போது அத்தகைய ஐடியாவையும் பாஜக யோசிக்காமல் இருக்காது.. இத்தனை கால டெல்லி வாசத்தில், அங்கு பல விஐபிக்கள், அரசியல் தலைகளின் அறிமுகங்களையும் நட்பையும் சசிகலா புஷ்பா பெற்றுள்ள நிலையில், மாற்று கட்சி அதிருப்தியாளர்களை பாஜக பக்கம் திருப்பும் வேலையையும் இனி இவர் எளிதாக செய்யக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.

ஜான்சிராணி
வரும் எம்பி தேர்தலில் தூத்துக்குடியில், திமுகவின் கனிமொழி அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்து வரும் நிலையில், சாதீய ஓட்டுக்களை பிரிக்கவும் சசிகலா புஷ்பாவின் தயவு தேவையானதாக இருக்கிறது.. இதையெல்லாம் யோசித்தே பதவி தரப்பட்டுள்ளதாக தெரிகிறது.. ஆக மொத்தம், அண்ணாமலையின் கணக்கு எப்படி இருக்க போகிறது என்பது இனிமேல்தான் தெரியவரும்.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications