CBSE: சிபிஎஸ்இ விடைத்தாள் நகல் பெறுவதற்கான கட்டணம் அதிரடி குறைப்பு.. மாணவர்கள் குஷி!
சென்னை: சிபிஎஸ்இ (CBSE) பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு & விடைத்தாள் நகல் பெறுவதற்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. முன்பு விடைத்தாளின் நகலை பெறுவதற்கு மாணவர்கள் ரூ.700 செலுத்த வேண்டியிருந்தது. தற்போது, ரூபாய் 100 செலுத்தினாலே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்வதற்கான கட்டணம் ரூபாய் 500-ல் இருந்து ரூபாய் 100 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது.

டிஜிட்டல் முறையில் மதிப்பீடு
மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ, இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய 'ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' என்ற புதிய டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த டிஜிட்டல் மதிப்பீட்டு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், விடைத்தாள்களை ஸ்கேன் செய்ததில் குறைபாடுகள் மற்றும் மதிப்பெண் வழங்குவதில் குளறுபடிகள் இருப்பதாகவும் மாணவர்கள் மத்தியில் பரவலான விமர்சனங்கள் எழுந்தன.
இதனை சிபிஎஸ்இ கவனத்தில் எடுத்துக்கொண்டது. பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் பலர் தங்கள் மதிப்பெண்கள் குறித்து மிகுந்த வருத்தத்துடன் இருப்பதாகவும், அதற்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் விடைத்தாள் மதிப்பீட்டு முறையே காரணம் என்று கருதுவதாகவும் சமூக வலைதளங்கள் வழியாக தகவல்கள் வருகின்றன என தெரிவித்தது.
முக்கிய அறிவிப்பு
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட டிஜிட்டல் விடைத்தாள் திருத்தம் நடைமுறையானது, அனுபவமிக்க ஆசிரியர்கள் தயாரித்த மதிப்பீட்டு திட்டத்தின் அடிப்படையில், ஒரே மாதிரியான மற்றும் சீரான மதிப்பீட்டை உறுதிசெய்யும். மேலும் அந்த மதிப்பீட்டில் மாற்று முறைகளில் எழுதப்பட்ட பதில்களுக்கும், மதிப்பெண் பெறும் வகையில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் மாணவர்களுக்கு தங்கள் தேர்வு முடிவில், திருப்தி இல்லையெனில், மறுகூட்டல், திருத்தப்பட்ட விடைத்தாள்களைப் பார்வையிடுதல் மற்றும் மறுமதிப்பீடு கோரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, விடைத்தாள்களை மறுசரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீடு செய்வதற்கான கட்டணங்கள் பெருமளவில் குறைக்கப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலாளர் சஞ்சய் குமார் முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார்.
கட்டணம் குறைப்பு
புதிய கட்டண அமைப்பின்படி, மாணவர்கள் தங்களது விடைத்தாளின் ஸ்கேன் நகலைப் பெற இனி வெறும் 100 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானது. அதேபோல், மதிப்பெண்களை சரிபார்ப்பதற்கும் தனியாக 100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடைத்தாளில் உள்ள ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கேள்விக்கான மதிப்பெண்ணை மறுமதிப்பீடு செய்யக் கோரி சவால் செய்ய விரும்பினால், ஒவ்வொரு கேள்விக்கும் தலா 25 ரூபாய் செலுத்த வேண்டும்.
இனி 700 இல்லை.. 100 மட்டுமே
இதற்கு முன்னதாக, விடைத்தாளின் நகலைப் பெற 700 ரூபாயும், மதிப்பெண் சரிபார்ப்புக்கு 500 ரூபாயும், ஒவ்வொரு கேள்வியையும் மறுமதிப்பீடு செய்ய 100 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கட்டணம் ரூபாய் 100 ஆக குறைக்கப்பட்டுள்ளது மாணவர்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.
அத்துடன் மாணவர்களுக்கு சாதகமான மற்றொரு முக்கிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. விடைத்தாள் மறுசரிபார்ப்பு அல்லது மறுமதிப்பீட்டு செயல்முறையின் போது ஒரு மாணவரின் மதிப்பெண்கள் அதிகரித்தால், அவர்கள் இந்த மறுமதிப்பீட்டிற்காக செலுத்திய ஒட்டுமொத்த தொகையும் முழுமையாகத் திருப்பித் தரப்படும் (Refund) என்று சஞ்சய் குமார் உறுதி அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications