லண்டனில் படிப்பு முடிந்தாலும்.. அண்ணாமலை சென்னை திரும்ப தாமதமாகும்! இப்படி ஒரு காரணமா? என்ன நடக்குது
லண்டன்: மூன்று மாத மேற்படிப்பிற்காக லண்டன் சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் படிப்பு நவம்பர் 23-ந்தேதி முடிவடைகிறது. இவருக்கான சான்றிதழ் அடுத்த வருடம் பிப்ரவரியில் வழங்கப்படும். நவம்பர் 23-ந்தேதியோடு படிப்பி முடிந்தாலும் 1 வாரம் லண்டனில் இருந்து விட்டு நவம்பர் கடைசியில் தான் சென்னை திரும்புகிறாராம்.
காரணம், தனது குடும்பத்தினரை லண்டனுக்கு அழைத்திருக்கிறார் அண்ணாமலை. அவர்கள் லண்டன் செல்லும் நிலையில், குடும்பத்தினருடன் ஒரு வாரம் லண்டனை சுற்றிப்பார்க்க திட்டமிட்டுள்ளாரம் அண்ணாமலை. அதனால், நவம்பர் இறுதியில் அவர் சென்னை திரும்புவார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

சென்னை திரும்பியதும் கட்சியில் சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவிருக்கிறாராம். குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளில், கட்சி பணிகளில் சரிவர செயல்படாத நிர்வாகிகளுக்கு மீண்டும் எந்த ஒரு பதவியும் வழங்காமல் கட்டம் கட்டப்போகிறாராம். மாவட்ட தலைவர்களில் 70 சதவீதம் தனது ஆதரவாளர்களை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளார் என்றும், இதற்கு கட்சியின் தேசிய தலைமையிடம் அனுமதி பெற்றுவிட்டார் என்றும் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, அவரது வருகை குறித்து அண்ணாமலையிடம் சில முக்கிய நிர்வாகிகள் சமீபத்தில் பேசியிருக்கிறார்கள். அப்போது, 'நீங்கள் சென்னை திரும்பியதும் மாநில நிர்வாகிகளில் மாற்றம் இருக்கும் ; தலைவர் பதவியும் மாற்றப்பட விருக்கிறது என இங்கு ஒரே பேச்சாக இருக்கு'' என்று கேட்டுள்ளனர்.
அதற்கு, சிரிப்பை பதிலாகத்தந்த அண்ணாமலை, ''என்னை மாத்தறதுக்கு டெல்லி வரை போய் சிலர் முயற்சித்த விவகாரம் எனக்குத்தெரியும். அதெல்லாம் பழைய கதை. கட்சித் தலைமை எனக்கு சில அசைன்மெண்ட்டுகளை கொடுத்திருக்கிறது. அது, 2026 தேர்தலை மையப்படுத்தியது. அப்போ கூட்டி கழிச்சிப் பாருங்க ; தலைவர் பதவி மாறுமா? மாறாதா? '' என்று சொல்லி சிரித்திருக்கிறார். அவரிடம் பேசிய நிர்வாகிகள், அதில் தெரிந்த உண்மையை புரிந்து நிம்மதி அடைந்துள்ளனராம். காரணம், தலைவர் பதவி மாற்றம் உறுதி என தெரிந்தால், புதிய தலைவர் யார் என தெரிந்து அவரது பின்னால் இப்போதே சென்று துண்டு போட்டு வைத்துக்கொள்வோம் என்று நிர்வாகிகள் திட்டமிட்டிருந்துள்ளனர். அதனால்தான், மாற்றம் இருக்குமா ? இருக்காதா? என அண்ணாமலையிடமே கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள் என்கிறது கமலாலய வட்டாரம்.
கூட்டணி முயற்சி: ஒரு பக்கம் அதிமுக-பாஜக கூட்டணியை மீண்டும் உருவாக்கி விட வேண்டும் என்கிற பகீரத முயற்சியை சிலர் எடுத்து வருகிறார்களாம். இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சிலர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியிருக்கின்றனர்.
அந்த பேச்சுவார்த்தையில், ''நீங்கள் முயற்சி எடுங்கள். அதிமுக ஓ.கே. எனில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை'' என்ற ரீதியில் வாசனிடம் அமித் ஷா சொல்லியிருக்கிறார். அப்போது, அண்ணாமலையின் எடப்பாடி எதிர்ப்புதான் பாஜக வுடனான அதிமுக கூட்டணிக்கு நெருடலாக இருக்கிறது என்பதை வாசன் சொன்ன போதும், ''அப்படிப்பட்ட யோசனை தவறானது. கூட்டணி என்பது தேசிய தலைமை முடிவு செய்வது. இதில் மாநில தலைவரின் (அண்ணாமலை) முடிவு என்று எதுவும் கிடையாது. தலைவர்ங்கிற முறையில் அவரது யோசனை மட்டுமே கேட்கப்படும்.
மற்றபடி தேசிய தலைமையின் முடிவு தான் இறுதியானது. அதனால், மாநில தலைவரின் எதிர்ப்பினை வைத்து அதிமுக யோசிக்கக் கூடாது'' என்று அமித் ஷா சொல்லியிருக்கிறார். அண்ணாமலை திரும்பி வந்ததும் அவரிடம் இதை பற்றி ஆலோசனை செய்யப்படும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications