சசிகலாவை நெருங்கும் 3 பிரபலங்கள்.. ஏதோ பெருசா நடக்க போகுதாமே.. குழப்பும் மன்னார்குடி? அசராத எடப்பாடி
சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு மறுபடியும் கட்சியில் இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட போதிலும், கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி கொண்டே இருக்கிறது. இது தொடர்பான யூகங்களும், அனுமானங்களும் வலம்வந்தபடியே இருப்பதால், அதிமுக மேலிடம் கடுப்பாகி வருகிறதாம்.
லோக்சபா தேர்தல் தோல்வி, வாக்கு சதவீதம் குறைந்திருப்பது, வாக்குகள் பிரிவது, திமுகவின் அசுர பலம், பாஜகவின் வியூகங்கள் பற்றியெல்லாம் அதிமுக நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி..

அந்தவகையில், தென்மண்டலத்தில் முக்குலத்தோர் ஆதரவு தேவையானால், சசிகலா, தினகரன், ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் இணைப்பது அவசியம் என்பதை நிர்வாகிகள் வலியுறுத்தினார்களாம். ஆனால், இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டாராம்.
சீனியர்கள்: நிர்வாகிகள் மட்டுமல்லாமல், கடந்த 8ம்தேதி எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில், முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சந்தித்து பேசியபோது, ஓபிஎஸ், சசிகலாவை கட்சியில் சேர்ப்பதன் மூலம் கட்சி வலுப்பெற வாய்ப்புள்ளதாக வலியுறுத்தினார்களா. இதற்கும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்து விட்டாராம்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை கட்சிக்குள் இணைக்கும் எண்ணம் கொஞ்சமும் கிடையாது என்பதையும் ஆணித்தரமாக சொன்னாராம் .. நேற்றைய தினம் மூத்த தலைவர் ஆர்.பி. உதயகுமாரும், இதையே செய்தியாளர்களிடமும் தெளிவுபடுத்தியிருந்தார்.
சுற்றுப்பயணம்: "அதிமுகவில் சசிகலாவுக்கு மீண்டும் இடம் கிடையாது. கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது" என்று காட்டமாக கூறியிருந்ததுடன், சசிகலாவின் அரசியலையும் கடுமையாக விமர்சித்திருந்தார். தென்மண்டல சுற்றுப்பயணத்தில் ஆதரவாளர்களையும், தொண்டர்களையும் திரட்டி, பலத்தை காட்டுவதுடன், இதை வைத்தே எடப்பாடி பழனிசாமி தரப்பை அணுகலாம் என்றும் கணக்கு போட்ட சசிகலா தரப்புக்கு எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம், பெருத்த அதிர்ச்சியை தந்து வருகிறதாம்.
இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு யூகமான தகவல் இணையத்தில் கசிந்து வருகிறது.. அதாவது, ஓபிஎஸ், சசிகலாவை சேர்க்க மறுத்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பிடிவாதம் செய்வதால், டெல்டாவை சேர்ந்த 3 மாஜி அமைச்சர்கள் விரைவில் சசிகலாவை சந்திக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம். இந்த 3 பேரில் ஒருவர் மீது, ஏராளமான வழக்குகளும், விசாரணைகளும் இன்னமும் நடந்து வருகின்றனவாம்.
டெல்டா சீனியர்ஸ்: டெல்டா மாவட்டத்தை சேர்ந்த 3 முன்னாள் அமைச்சர்கள் விரைவில் சசிகலாவை நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவிக்க இருப்பதாக சொல்கிறார்கள்.. ஒருவேளை அப்படி நடந்தால், எடப்பாடிக்கு எதிராக அதிமுகவில் போர்க்குரல் வெடிக்கும் என்றும் சொல்கிறார்கள்.
ஆனால், இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்றுதெரியவில்லை.. உண்மைத்தன்மையை அறியாமல் செய்திகளை வெளியிட வேண்டாம் என்று அதிமுக மேலிடம் நேற்றுமுன்தினம்கூட எச்சரிக்கை விடுத்திருந்தது. அப்படியிருந்தும், பரபரப்பு தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. அதிமுகவுக்கு எதிராக, இது வேண்டுமென்றே பரப்பப்படும் வதந்தியா? அல்லது உண்மையா? என்று தெரியவில்லை. ஆனால், அதிமுக கூடாரமே பரபரத்து காணப்படுகிறது.
சிவகங்கை: அதேசமயம், அதிமுக நிர்வாகிகளிடம் தொடர் ஆலோசனையை மேற்கொண்டு வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி.. இன்றுகூட சிவகங்கை நிர்வாகிகளிடம் கருத்து கேட்டிருக்கிறார்கள்.. அதற்கு அவர்கள், நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வலுவாக இல்லாததே அதிமுக தோல்விக்கு காரணம் என்று தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் சொன்னார்களாம்..
இப்படி பெரும்பான்மையான மாவட்ட நிர்வாகிகள் வலுவான கூட்டணி தேவை என்றே பேசியிருக்கிறார்கள்.. அதேபோல, நாம் தமிழர் கட்சி, பாமக கட்சிகளுடன் கூட்டணியை வைக்க வேண்டும் என்றும் பலரும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தினார்களாம்.
ஒவ்வொரு நிர்வாகிகள் சொல்லும் கருத்தையும் பொறுமையாக கேட்டு, அனைத்தையும் தன்னுடைய கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளாராம் எடப்பாடி பழனிசாமி..
துவள வேண்டாம்: நிர்வாகிகளிடம் பேசும்போதும், "தொண்டர்கள் யாரும் துவண்டுவிட வேண்டாம். கூட்டணி குறித்து கவலை வேண்டாம். வலுவான கூட்டணியை அமைக்க தலைமை முடிவுசெய்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வலுவான கூட்டணியை அமைக்கும். சிறுபான்மை மக்களின் மனநிலை நிச்சயம் எதிர்காலத்தில் மாறும். சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை நம்முடைய பக்கம் திருப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தி வருகிறாராம்.
ஆக, கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்திக்கொண்டே, வலுவான கூட்டணியை அமைக்கும் முடிவுக்கும் எடப்பாடி பழனிசாமி வந்திருப்பதாக கூறுகிறார்கள். இதற்கு நடுவில், 3 டெல்டா முன்னாள் அமைச்சர்கள், மன்னார்குடி விவகாரம் இதெல்லாம்தான் தொண்டர்களை குழப்பியடித்து கொண்டிருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications