"உதயநிதி ஸ்டாலின் எனும் நான்.." "அவர்" வருவாரா? "இவர்" அழைப்பு விடுப்பாரா? எகிறும் எதிர்பார்ப்பு
சென்னை: அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்கும் போது முதல்வர் ஸ்டாலினின் மூத்த சகோதரர் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வருகை தருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒற்றை செங்கல்லை எய்ம்ஸ் மருத்துவமனை என எழுதி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் உதயநிதி ஸ்டாலின்.
அந்த தேர்தலில் திமுக கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெற உறுதுணையாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். இதற்கு பரிசாக அவருக்கு கிடைத்தது இளைஞரணி செயலாளர் பதவி கிடைத்தது.

சட்டசபை தேர்தல்
இதையடுத்து 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதுவும் தனது தாத்தாவை காட்டிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வெற்றி பெற்றார். இதையடுத்து அந்த தொகுதியின் சந்து பொந்து இண்டு இடுக்குகளில் எல்லாம் சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.

தூய்மையற்ற கழிவறை
பல நாட்கள் பூட்டியே கிடக்கும் தூய்மையற்ற கழிவறைக்குள் சகஜமாக சென்றார். உதய் அண்ணா உதய் அண்ணா என அழைக்கும் அளவுக்கு அந்த தொகுதி மக்களின் மக்களாக பழகினார். இவரது சேவை இந்த ஒரு தொகுதியோடு நின்று விடக் கூடாது என்பதால் இவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என மூத்த அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் தீவிரமாக கோரிக்கை விடுத்தனர்.

உதயநிதி அமைச்சர்
பல மாவட்டங்களில் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என தீர்மானங்களை திமுகவினர் நிறைவேற்றி அதை கட்சித் தலைமைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தலைவருக்கு யாருக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். எனினும் அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை ஓயாமல் முதல்வர் ஸ்டாலினின் காதுகளை சென்றடையும் வரை ஒலித்துக் கொண்டே இருந்தது.

அமைச்சரவையில் உதயநிதி
இந்த நிலையில் உதயநிதியை அமைச்சரவையில் இணைக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார். அந்த வகையில் ஆளுநரும் ஒப்புக் கொண்டதை அடுத்து நாளை காலை 9.30 மணிக்கு உதயநிதிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அழைத்துள்ளார்கள்.

அழகிரிக்கு அழைப்பு
அது போல் மத்திய முன்னாள் அமைச்சரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க. அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கும் மு.க.அழகிரிக்கும் கடந்த 7 அல்லது 8 ஆண்டுகளாக எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற போது மு.க.அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிகிறது. அவர் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருடைய மகன் தயாஅழகிரியும், மகள் கயல்விழியும் வந்திருந்தனர்.

யார் வருவார்கள்
அப்போது அவர்களை முதல்வர் குடும்பத்தினர் வரவேற்றனர். தயா அழகிரியும் உதயநிதியும் கட்டி அணைத்து அன்பை பரிமாறிக் கொண்டனர். இதன் பிறகு ஒவ்வொரு முறையும் மதுரை செல்லும் போது அழகிரியை ஸ்டாலின் சந்திப்பார் என எதிர்பார்ப்புகள் எழுந்தன. ஆனால் இதுவரை நடக்கவில்லை. இந்த நிலையில் தனது மகன் உதயநிதி நாளை அமைச்சராக பதவியேற்றுக் கொள்கிறார். இந்த விழாவால் முதல்வர் குடும்பமே கொண்டாட்டத்தில் உள்ளது. அந்த வகையில் மு.க.அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது. அவ்வாறு அழைப்பு விடுக்கும் பட்சத்தில் அழகிரி நேரில் வருவாரா இல்லை அவரது குடும்பத்தாரை அனுப்பி வைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications