பென்ஷன் குட் நியூஸ் வருமா? ஓய்வூதியம், அகவிலைப்படி கேட்கும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள்
சென்னை: காலி தட்டுகளை ஏந்தியவாறு, குறைந்தபட்ச ஓய்வூதியம், அகவிலைப்படி, குடும்ப ஓய்வூதியம், மருத்துவப்படி, மருத்துவ காப்பீடு என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் திமுக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தபடியே உள்ளனர். இந்நிலையில், நீண்ட காலமாக ஓய்வூதியத்தை உயர்த்தவில்லை, கோர்ட் உத்தரவை கூட அமல்படுத்தாமல் அரசு அலட்சியம் காட்டுகிறதே என்று சத்துணவு ஊழியர் சங்கத்தினர் வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர்.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, சத்துணவு அமைப்பாளர் மற்றும் அங்கன்வாடிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் கிட்டத்தட்ட 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். இவர்களுக்கு மாதம், 2,000 ரூபாய் மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

மோப்ப நாய்களுக்கு பென்சன்
மோப்ப நாய்களுக்கு ஓய்வூதியமாக மாதம் 3,000 முதல் 5,000 ரூபாய் அரசு வழங்கும் நிலையில், குழந்தைகளுக்காக சமைத்த தங்களுக்கு, வெறும் 2,000 ரூபாய் மட்டுமே வழங்குவது சரியா என்று சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கேள்வி எழுப்பியபடியே உள்ளனர்.
அதுமட்டுமல்ல, ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான, ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, திமுகவினர் சட்டசபை தேர்தலின்போது வாக்குறுதி அளித்தனர்.
திமுக வெற்றி பெற்று நான்கு ஆண்டுகளாகியும், வாக்குறுதியை நிறைவேற்றாமல் உள்ளனர். இதனை நினைவூட்டவே, சத்துணவு மற்றம் அங்கன்வாடி பணியாளர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தபடியே உள்ளனர்.
ஓய்வூதியம் எப்போது
சிறப்பு ஓய்வூதியமாக ரூ.6750 மற்றும் அகவிலைப்படி வழங்க வேண்டும், சட்டப்பூர்வ பென்ஷன் ரூ.7850-ஐ வழங்க வேண்டும், ஓய்வு வரும்போது வாங்கும் சம்பளத்தில் இருந்து 2.57 சதவீத தொகையை வழங்கவேண்டும்,
சென்னை ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும், 3% அகவிலைப்படி உயர்வினை வழங்க வேண்டும், ஈம கிரியை சடங்கிற்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் பலகட்ட போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
எனினும் அரசு தரப்பில் எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படாத நிலையில், ஊழியர்கள் அனைவரும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின், முன்னாள் மாநில செயலாளர் கருணாநிதி செய்தியாளர்களிடம் சொன்னதாவது:
சிறப்பு ஊதியம் இல்லை
"ஓய்வு பெறும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி அமைப்பாளர்களுக்கு 700, சமையலர்களுக்கு 600, உதவியாளர்களுக்கு 500 ரூபாய் சிறப்பு ஊதியமாக, திமுக அரசு கடந்த 2008ல் அறிவித்தது.
அடுத்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அந்த தொகையானது, ரூ.1,000 உயர்த்தப்பட்டது. இப்போது மாதத்துக்கு, 2,000 ரூபாய் மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
தமிழகத்தில், குறைந்தபட்ச ஓய்வூதியமாக வருவாய் கிராம ஊழியருக்கு, 6,750 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த ஓய்வூதியத்தை வழங்கினால்கூட, சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் வாழ்க்கை நடத்த உதவியாக இருக்கும்.
எம்எல்ஏக்களுக்குகூட பென்ஷன்
கடந்த 2008ல், அரசு அறிவித்த சிறப்பு ஓய்வூதியத்தை செயல்படுத்தியிருந்தால், அமைப்பாளருக்கு, 4,431 ரூபாய், சமையலருக்கு, 4,279 ரூபாய், உதவியாளருக்கு, 4,125 ரூபாய் கிடைத்திருக்கும். ஆனால், இந்த தொகையையும் அரசு எங்களுக்கு வழங்கவில்லை.
கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு உதவித்தொகைகள் அரசால் உயர்த்தப்பட்டுள்ளன; சட்டமன்ற உறுப்பினர்களுக்குகூட பென்ஷன் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.. ஆனால், எங்களுக்கு இதுவரை ஓய்வூதியம் உயர்த்தப்படாதது கவலையாக உள்ளது" என்று வேதனை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications