பணி நியமனத்தில் முறைகேடு குற்றச்சாட்டு: தமிழக போலீஸ் விசாரிக்குமா? அமைச்சர் கே.என் நேரு பதில்
சென்னை: நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததா? என்பதை போலீசார் விசாரிப்பார்கள். ஆனால் நான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், திமுகவை மிரட்டி பார்ப்பதற்காக கூட இதுபோன்று அமலாக்கத்துறை செய்யலாம் என்று அமைச்சர் கே.என் நேரு கூறினார்.
நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பணியாளர்களை நியமித்த விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று அமைச்சர் கே. என். நேரு கூறினார். திருச்சியில் அமைச்சர் கே. என். நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சோதனை நடத்தும்போது சில ஆவணங்கள் கிடைத்துள்ளன. இது எந்த அளவுக்கு உண்மை என்று பார்க்க சொல்லி கொடுத்திருக்கிறார்கள். அதை போலீசார் பார்க்கப் போகிறார்கள். அதை பார்த்து போலீசார் முடிவு செய்வார்கள். நான் தெளிவாக சொல்கிறேன், எந்த தவறும் செய்யவில்லை. மிரட்டி பார்க்கும் வேலையாக இருக்கலாம்.
நான் எந்த தவறும் செய்யவில்லை. முழு ஒத்துழைப்பு கொடுத்து எந்த தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிப்பேன். தமிழக அரசு வழக்குப் பதிவு செய்யுமா எனக் கேட்கிறீர்கள். விசாரணை செய்துதான் பார்ப்பார்கள்.. முதல்வர் முடிவு செய்வார். திமுகவில் மூத்த தலைவர்களை ஓரங்கட்டும் வேலையை யாரும் செய்யவில்லை. தேர்தல் நேரத்தில் எங்களை விமர்சிக்க எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
விசாரணையில் குற்றமற்றவர் என்று நிரூபித்து வெளியே வருவோம். டிடிவி தினகரன், செங்கோட்டையன் சந்திப்பு குறித்து பேசிய கே. என். நேரு, "இந்த சந்திப்பு குறித்து நாங்கள் நினைப்பதற்கு என்ன இருக்கிறது? அவர்கள் ஏற்கனவே ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். 2, 3 வருடமாக அதைத்தான் சொல்லியிருக்கிறார்கள்.
நேற்று சேர்ந்து இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி எதற்கெடுத்தாலும் திமுக பி டீம் என்பார். இல்லையென்றால் திமுக கூட்டணியில் இருந்து எங்களிடம் வருவார்கள் என்றார். ஆனால் அவர்களிடம் இருந்துதான் ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கிறார்கள். அவருக்கு வேலை என்ன... அவர் வாயில் வந்ததை பேசி வருகிறார்கள்" என்றார்.
ED குற்றச்சாட்டு என்ன?
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நகரமைப்பு அதிகாரி, உதவி இன்ஜினியர், இளநிலை இன்ஜினியர், துப்புரவு ஆய்வாளர் ஆகிய பதவிகளுக்கு 2 ஆயிரத்து 538 பேரை தேர்வு செய்வதற்காக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பதவிகளுக்கு மொத்தம் 1.12 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதற்கான தேர்வை நகராட்சி நிர்வாகத் துறை அறிவுறுத்தலின்பேரில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது.
தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில், சுமார் 150 பணியிடங்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு நிரப்பப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
அதாவது, நகராட்சி நிர்வாகத் துறையின் அமைச்சராக பதவி வகித்து வரும் கே. என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் நடத்தி வரும் 'ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்' எனும் நிறுவனம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக வெளியான குற்றச்சாட்டை அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த விசாரணையின்போது இந்த மோசடி தொடர்பான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழக டிஜிபி (பொறுப்பு) வெங்கடராமனுக்கு அமலாக்கத் துறை கடிதமும் எழுதியது. அமலாக்கத் துறையின் இந்த குற்றச்சாட்டு அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக மற்றும் அமைச்சர் கே. என். நேருவை கடுமையாக விமர்சித்ததோடு, இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். எனினும், அமலாக்கத் துறை வைத்த குற்றச்சாட்டு 'அரசியல் உள்நோக்கம் கொண்டது' என்று தமிழக அரசு பதிலடி கொடுத்தது.












Click it and Unblock the Notifications