Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னித்தீவு கதைக்கு எண்ட் கார்டு எப்போ? எடுத்த எடுப்பிலேயே ஓபிஎஸ் ஈபிஎஸ் ஃபைட்.. 2023 விடிவு தருமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : கட்சி தொடங்கப்பட்ட பிறகு நடைபெற்ற கடந்த 11 சட்டமன்றத் தேர்தல்களில் 7 முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த அதிமுகவுக்கு 2022ஆம் ஆண்டு பெரும் சோதனைக் காலமாக அமைந்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் தோல்விகளை எல்லாம் விட அதிமுக தொண்டர்களை கவலைக்குள்ளாக்கிய சம்பவம் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல். 2022ஆம் ஆண்டின் சரி பாதி காலம் மோதல்களுடனே கடந்தது. 2023ஆம் ஆண்டிலாவது இந்த மோதலுக்கு தீர்வு கிடைத்து, கட்சி மீண்டும் வலிமையாக எழுந்து அமருமா என்பதுதான் தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அரசியல் களம், நீதிமன்றம், தேர்தல் ஆணையம், பாஜக தலைமை என நான்கு முனைகளிலும் நடைபெற்ற ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் 2023ஆம் ஆண்டிலாவது ஒரு முடிவுக்கு வந்து, கட்சி அமைதிக்குத் திரும்புமா?

வரும் 4ஆம் தேதி பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் விரைந்து ஆணை பிறப்பிக்குமா அல்லது இன்னும் இழுத்துக்கொண்டே செல்லுமா என்பதையெல்லாம் காலமே தீர்மானிக்கப் போகிறது.

 அதிமுகவுக்கு சறுக்கல் ஆண்டு

அதிமுகவுக்கு சறுக்கல் ஆண்டு

தமிழ்நாட்டில் கடைசியாக நடைபெற்ற கடந்த 11 சட்டமன்றத் தேர்தல்களில் 7 முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த கட்சி அதிமுக. அதிமுக தொடங்கப்பட்ட பிறகு தாய்க்கழகமான திமுகவே 4 முறை தான் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. அப்படி தொண்டர்களின் பெரும் பலம் கொண்ட அதிமுகவுக்கு 2022ல் ஏகப்பட்ட சறுக்கல்கள். உச்சமாக, பிரதான எதிர்க்கட்சி பாஜகவா அதிமுகவா எனும் கேள்வி எழும் நிலைக்குச் சென்றது தான் தொண்டர்களுக்கு பெரும் மனக்குமுறலை ஏற்படுத்தியது. ஆண்டின் தொடக்கத்தில் சேகுவேராவாகவும், ஃபிடல் காஸ்டிரோவாகவும் இரட்டைக் குழல் துப்பாக்கிளாக இருந்த ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஜூன் மாதம் தொடங்கி எதிரெதிர் முனைகள் ஆகினர். அதிமுகவில் நடைபெறும் இந்தச் சண்டையில் திமுகவை விட பாஜகவுக்கு தான் பெருத்த லாபம்.

 பிள்ளையார் சுழி - தர்மர்

பிள்ளையார் சுழி - தர்மர்

அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர் அறிவிப்பின்போது தான் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே மோதல் பகிரங்கமாக வெளிப்பட்டது. இரண்டு சீட்களையும் எடப்பாடி தனது ஆதரவாளர்களுக்கு வழங்க முயற்சிக்க, போராடி ஒரு சீட்டை தனது ஆதரவாளரான ஆர்.தர்மருக்கு பெற்றுக் கொடுத்தார் ஓபிஎஸ். தன்னால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியவில்லையே என எடப்பாடி பழனிசாமி மனதில் தோன்றிய அந்த எண்ணம் தான் ஒற்றைத் தலைமை எனும் பேச்சுக்கு பிள்ளையார் சுழி போட்டது. ஜூன் 14ஆம் தேதி ஜூலை 23ம் தேதி நடைபெற இருந்த அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒற்றைத் தலைமை குறித்து முழக்கம் எழுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

பூதாகரம்

பூதாகரம்

இதுகுறித்து ஜெயக்குமார் பேட்டி அளித்ததால் விவரம் பூதாகரமானது. இதுவே அதிமுக மீண்டும் இரு அணிகளாக பிரிய அடித்தளமிட்டது. ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் தனித் தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், எந்த காரணத்திற்காகவும் கட்சி உடையக்கூடாது, பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் என்று அறிவித்தார். பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தபோதும் இரு தரப்பிலும் உடன்பாடு ஏற்படவில்லை. பிளவு தான் அதிகரித்தது. எனினும், திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்தது.

 இரவோடு இரவாக

இரவோடு இரவாக

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு முறையீடு செய்தது. அதற்கு தடை கிடைக்காத நிலையில், இரவோடு இரவாக மேல்முறையீடு செய்து எடப்பாடிக்கு செக் வைத்தார் ஓபிஎஸ். அதன்படி பொதுக்குழு நடத்தலாம் ஆனால், ஏற்கெனவே முன்மொழியப்பட்ட தீர்மானங்களைத் தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்று உயர் நீதிமன்றம் அதிகாலையில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் வரவேற்றனர். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டவுடன் எழுந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், "பொதுக்குழுவின் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிக்கிறோம்" என ஆவேசமாக அறிவித்தார்.

 மீண்டும் பொதுக்குழு

மீண்டும் பொதுக்குழு

ஓபிஎஸ்ஸுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து ஆவேசமாக முழக்கமிட்டனர். ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில், காகிதம் வீசப்பட்டதால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது. ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வர மீண்டும் அதிமுக பொதுக்குழு ஜூலை 11 கூடும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் பொதுக்குழுவுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றம் வரை சென்றது ஓபிஎஸ் அணி. அங்கிருந்து வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கே திருப்பி விடப்பட்டது. ஐகோர்ட், பொதுக்குழுவை நடத்த தடையில்லை என தீர்ப்பளித்தது.

 பரபர பொதுக்குழு

பரபர பொதுக்குழு

அதன்படி, ஜூலை 11ஆம் தேதி பரபரப்புடன் கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைப் பொதுச் செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வாகினர். ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். பொதுக்குழு நடந்த அதே நேரத்தில் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றார். அங்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினருக்கு கடும் மோதல் ஏற்பட்டு கற்களை வீசித் தாக்கிக்கொண்டனர். அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அனைத்தையும் ஓபிஎஸ் தரப்பு எடுத்துச் சென்றது. தன்னை நீக்க யாருக்கும் அதிகாரமில்லை எனக் கூறி ஓபிஎஸ், எடப்பாடி உள்ளிட்டோரை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார்.

 கன்னித்தீவு கதை

கன்னித்தீவு கதை

எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார். ஆனால், தனக்கு ஆதரவாக 2,532 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர் என தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இதற்கிடையே இரு அணியினரும் மாற்றி மாற்றி எதிர் தரப்பின் ஆதரவாளர்களை நீக்குவதும், தங்கள் தரப்பினருக்கு பதவி கொடுப்பதாக இருந்தனர். இந்த நியமனங்களுக்கு ஒரு எண்ட் கார்டே கிடையாதா என அதிமுக தொண்டர்களே கேட்கும் அளவுக்கு இது ‘கன்னித்தீவு' போல தொடர்ந்து கொண்டே இருந்தது.

 உதயகுமார் - ஓபிஎஸ்

உதயகுமார் - ஓபிஎஸ்

எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை எடப்பாடி பழனிசாமி நியமித்த நிலையில், அக்டோபர் மாதம் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியபோது, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமரவைக்கப்பட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மறுநாள் இதுதொடர்பாக போராட்டமும் நடத்தினர். இதற்கிடையே அதிமுக பொதுக்குழு வழக்க்கில் ஐகோர்ட் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக தீர்ப்பளித்தார். ஐகோர்ட் இரு நீதிபதிகளோ அந்த தீர்ப்பை ரத்து செய்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார் ஓபிஎஸ்.

 தொண்டர்களின் எதிர்பார்ப்பு

தொண்டர்களின் எதிர்பார்ப்பு

சுப்ரீம் கோர்ட்டில், தசரா விடுமுறைக்குப் பிறகு விசாரிப்போம் என வழக்கு ஆறப்போடப்பட்டது. ஆனாலும், ஓபிஎஸ் - ஈபிஎஸ் பிரச்சனை தீர்வதாக இல்லை. அதன்பிறகு வழக்கு விசாரணைக்கு வந்தும், அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்டு தற்போது ஜனவரி 4ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது அதிமுக பொதுக்குழு வழக்கு. கடந்த ஆண்டு ஜூனில் தொடங்கிய அதிமுக மோதல் விவகாரத்திற்கு இந்த ஆண்டிலாவது முடிவு கிடைக்குமா என்பதுதான் ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

 பிரச்சனை எரிகிறது

பிரச்சனை எரிகிறது

இந்த வழக்கு மோதல்களுக்கு இடையே, பாஜக தலைமையின் ஆதரவை தங்கள் பக்கம் பெற டெல்லிக்குப் படையெடுத்து வந்தது ஓபிஎஸ், ஈபிஎஸ் படை. ஆனால், பாஜக தலைமையோ பிடி கொடுக்காமல் இருவரையும் அலையவிட்டு வேடிக்கை பார்க்கிறது. இருவர் கையையும் மாற்றி மாற்றி மேலே தூக்கி விட்டு, இந்த மோதலை உயிர்ப்புடனே வைத்திருக்கிறது பாஜக. ஜி20 மாநாடு ஆலோசனைக் கூட்டத்திற்கு இடைக்கால பொதுச் செயலாளர் என எடப்பாடியை அழைத்தது. ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று குறிப்பிடப்பட்டு கடிதம் அனுப்பியது.

கடிதங்கள்

கடிதங்கள்

இந்நிலையில், புலம் பெயர்ந்தோருக்கு அந்தந்தப் பகுதிகளில் வாக்களிக்க வசதி செய்து தருவது குறித்து தேர்தல் ஆணையம் கருத்து கேட்டு நடக்கும் கூட்டத்திற்கு அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் கடிதம் அனுப்பியுள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அப்படி யாரும் இல்லை என கடிதத்தை திருப்பி அனுப்பியுள்ளது. இதனால், ஜனவரி 16ஆம் தேதி வரவிருக்கும் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜனவரியிலேயே

ஜனவரியிலேயே

ஜனவரி 4ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணைக்கு வருகிறது. 16ஆம் தேதி தேர்தல் ஆணைய கூட்டம் நடக்க உள்ளது. இப்படியாக, இந்த ஆண்டின் ஆரம்பமே ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல்கள் சூடுபிடித்துள்ளன. உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் பொதுக்குழு வழக்கின் மூலம் யார் உண்மையான அதிமுக என்ற மோதலுக்கு இந்த ஆண்டில் நிச்சயம் தீர்ப்பு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் அதிமுக தொண்டர்கள். தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கும் என்ற கேள்வியும் இருக்கிறது. இந்த விவகாரம் இந்த ஆண்டில் விரைவாகவே முடிவுக்கு வருமா அல்லது அரசியல் விமர்சகர்கள் சொல்வது போல, இந்த ஆண்டைக் கடந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை இழுத்துக்கொண்டே செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+