ஸ்டாலின் போடும் கணக்கு.. எடப்பாடியாரின் புதிய வியூகம்.. கோவை, சேலம் மேயர் பதவி யாருக்கு?
கோவையில் நகர்ப்புற உள்ளட்சி தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன
சென்னை: முதல்வர் ஸ்டாலின் ஒரு கணக்கு போட்டால், எடப்பாடி பழனிசாமி வேறு ஒரு கணக்கு போட்டு வருகிறாராம்.. வரப்போகும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டே இந்த கணக்கு போடப்பட்டு வருகிறது.
கடந்த 5 வருடங்களாகவே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாத சூழல் தமிழகத்தில் ஏற்பட்டது.. உள்ளாட்சி தேர்தலை நடத்தியே தீர வேண்டும் என்று திமுக கோர்ட் வரை சென்றதையும் மறக்க முடியாது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அத்தனை மேயர் இடங்களையும் அதிமுகவே கைப்பற்றியது.. அதனால்தான், இந்த முறை மாஸ் வெற்றியை முதல்வர் ஸ்டாலின் எதிர்பார்க்கிறாராம்..

கோவை
தகுதியானவர்களை மேயர் பதவியில் அமர்த்தி அதன்மூலம் ஆட்சிக்கு நன்மதிப்பை பெற முயற்சிகளையும் வியூகங்களையும் 2 மாதமாகவே கையில் எடுத்து வருகிறார். இதில் கோவை, சேலம் ஆகிய இடங்கள் மிகுந்த கவனத்தை பெற்று வருகின்றன.. இந்த 2 மாவட்டங்கள் தொடர்பாக இரு வேறு செய்திகளும் பரபரத்து வருகின்றன.. கொங்குவின் பிரதான மாவட்டங்களான கோவையில் திமுகவின் செந்தில் பாலாஜியும், சேலத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியும் தனித்தனி கூட்டங்களை நடத்தி தங்கள் பலத்தை நிரூபிக்க முயன்று வருகின்றனர்.

செந்தில் பாலாஜி
கோவையில் எஸ்பி வேலுமணியின் ஆவர்த்தனத்தை முடிவுக்கு கொண்டு வரவே, செந்தில் பாலாஜி கோவை மாவட்டத்துக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்... அதற்கேற்றபடி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளை நாலாபக்கமும் செந்தில்பாலாஜி முடுக்கிவிட்டுள்ளார்.. இதுபோக, நவம்பர் 23ம் தேதி முதல்வர் ஸ்டாலின் கோவை வரவுள்ள நிலையில், ஒரு லட்சம் பேரை திரட்ட வேண்டும் என்று செந்தில் பாலாஜி கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்..

ஆ.ராசா
முள்ளை முள்ளால் எடுக்கவே செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று திமுக செயற்குழு கூட்டத்தில், அக்கட்சியின் துணைப் பொதுசெயலாளர் ஆ.ராசா வெளிப்படுத்தியிருந்ததையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது. ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் கோவையை நழுவவிட்ட திமுக, இந்த தேர்தலில் விட்டதை பிடித்து, அதிமுக & பாஜகவுக்கு செக் வைக்க பெரும் முயற்சியில் செந்தில்பாலாஜி டீமுடன் இயங்கி வருகிறது.

பதிலடி
அதேபோல இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மண்ணை கவ்விய நிலையில், திமுகவுக்கு ஓரளவு டஃப் கொடுக்கும் செயல்பாடுகளை கையில் எடுத்து வருகிறதாம்.. குறிப்பாக சேலம் மாவட்டத்தில், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களில் திமுகவுக்கு பதிலடி தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம்.. சேலம் மாவட்ட திமுகவில், ஏற்கனவே மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளனர்.. மாவட்ட செயலாளர்களும் உள்ளனர்.. அதுபோலவே அதிமுகவில் நியமிக்க எடப்பாடி யோசித்து வருகிறாராம்.

எடப்பாடி பழனிசாமி
சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவி தன்னிடம் உள்ளதால், அதை மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டமாக பிரித்து, அவைகளுக்கு மாவட்ட செயலாளர்களை நியமிக்க உள்ளாராம்.. அதாவது தன்னுடைய பொறுப்பை விட்டுத்தந்து, அந்த இடத்தில் வேறு நபர்களை நியமித்து, ஒரே கல்லில் 2 மாங்காய்களை அடிக்க யோசித்து வருகிறாராம்.. அத்துடன் மாநகர், மாவட்ட கூடுதல் பொறுப்பாளர்களையும் அங்கு நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடியின் இந்த யோசனையானது, சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு கலக்கத்தை தந்து வருகிறதாம்.

களப்பணி
இதனால் யார் யாருக்கு பதவி பறிபோகிறதோ என்பது ஒருபக்கம் பீதி தந்தாலும், மற்றொரு பக்கம், தங்களுக்கும் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பலர் களப்பணியில் இறங்கிவிட்டனராம்.. இதனால் சேலம் மாவட்ட அதிமுகவே படுபஸியாக உள்ளதாம்.. இந்த விஷயம் திமுக தரப்புக்கும் தெரியவந்துள்ளதையடுத்து, சேலத்தை கைப்பற்ற தனி பிளானில் இறங்கி வருவதாக கூறப்படுகிறது.. ஆக மொத்தம் கோவையும் சேலமும் எதிர்பார்ப்புக்குரிய மாவட்டங்களாக இப்போதைக்கு உள்ளன..!












Click it and Unblock the Notifications