அதிமுக- பாஜக கூட்டணி.. உள்ளே வரும் விஜய்? ஒரு நொடி யோசித்து அமித் ஷா கொடுத்த தெளிவான பதில்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இப்போதை கூட்டணி பேச்சுவார்த்தைகள் எல்லாம் தீவிரமாக நடந்து வருகிறது. இப்போது அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், மற்ற கட்சிகளை உள்ளே கொண்டு வர முயற்சிகள் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே விஜய் அதிமுக பாஜக கூட்டணியில் வருவாரா என்ற கேள்விக்கு அமித் ஷா முக்கியமான பதிலை அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தேர்தலுக்கு இப்போதே தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாகக் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்போதைக்கு அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. அதேநேரம் தேர்தலுக்கு முன்பு வேறு பல கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு வலுவான மெகா கூட்டணியை அமைக்கும் முயற்சியில் இந்தக் கட்சிகளின் தலைவர்கள் இறங்கியுள்ளனர்.

அமித் ஷா
இந்தக் கூட்டணியில் விஜய் வரலாம் எனச் சொல்லப்படுகிறது. இதை விஜய் தரப்பினர் மறுத்தாலும் கூட.. அதிமுக- பாஜக தரப்பினர் இது நடக்கலாம் என்பது போலவே கூறி வருகிறார்கள். இதற்கிடையே பிரபல ஆங்கில நாளேடான தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு உள் துறை அமைச்சர் அமித் ஷா பேட்டியளித்துள்ளார். அதில் தமிழ்நாடு அரசியல் தொடர்பாக அவர் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
அதிமுக பாஜக கூட்டணியில் விஜய்?
விஜய் கட்சி அல்லது பாமக அல்லது வேறு சின்ன கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணையுமா இல்லை பல முனைப் போட்டியே தமிழ்நாட்டில் இருக்குமா என்ற கேள்வி எழுப்பினர். அதற்கு அமித் ஷா, "அதை இப்போது சொல்ல முடியாது. கட்சிகளை ஒரே அணியில் கொண்டுவர முயல்வோம்" என்று மட்டும் பதிலளித்தார்.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரச்சனை என்ன என்ற கேள்விக்கு திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் ஊழலே பெரிய பிரச்சனை எனப் பதிலளித்தார்.. இது பல ஆயிரம் கோடி தொடர்புடைய பட்டியல் என்ற குறிப்பிட்ட அவர், மதுபான ஊழல் குற்றச்சாட்டு தொடங்கிப் பல ஊழல் புகார்களை திமுக அரசு மீது முன்வைத்தார்.
திமுக பிரச்சனை
அமித் ஷா மேலும் பேசுகையில், "மேலும் திமுகவில் கோஷ்டிப் பூசல் உள்ளது. அதிகார மையம் தலைமைச் செயலகத்திற்கு வெளியே தான் உள்ளது. திமுக தொண்டர்கள் கூட உதயநிதி சொல்வதைக் கேட்க வேண்டுமா.. இல்லை கனிமொழி சொல்வதைக் கேட்க வேண்டுமா.. இல்லை வேறு யாராவது சொல்வதைக் கேட்க வேண்டுமா என்று குழப்பத்தில் உள்ளனர். அதனால்தான் திமுக மொழி விவகாரம் போன்ற இல்லாத பிரச்சனைகளை உருவாக்க முயல்கிறது" என்றார்.
தொகுதி மறுவரையறை
தொடர்ந்து தொகுதி மறுவரையறை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "தென்னிந்திய மாநிலங்களுக்கு இருக்கும் எல்லாக் கவலைகளையும் தீர்ப்போம் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளேன். தொகுதி மறுவியில் எந்தவொரு அநீதியும் நடக்காது. தொகுதி மறுவரையறை ஆணைய சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை. அப்படி இருக்கும் போது ஏன இப்போதே இதைப் பற்றிப் பேசுகிறார்கள்? காரணம் சிம்பிள்.. தமிழ்நாட்டில் தேர்தல் வரப்போகிறது. அரசியலுக்காக இதைப் பேசுகிறார்கள். ஒரு சட்டமாக மாறுவதற்கு முன்பு, நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடக்கும். அப்போது எல்லாப் பிரச்சினைகளையும் தீர்ப்போம்" என்றார்.
நிச்சயம் வெல்வோம்
அடுத்து வரும் நடக்கும் பீகார், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத் தேர்தல்களில் பாஜக வெல்லுமா என்ற கேள்விக்கு அவர், "எல்லா மாநிலங்களிலும் எங்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. அசாமிலும் கூட நாங்கள் மீண்டும் வெல்வோம்.. நான் மேற்கு வங்கத்திற்குச் சமீபத்தில் செல்லவில்லை.. ஆனால் அங்கு மம்தாவுக்கு எதிராக நிறைய அதிருப்தி உள்ளது. இதனால் எங்களுக்கு நல்லதுதான்..
கடந்த தேர்தலில் அங்கு நாங்கள் வெறும் மூன்று இடங்களில் இருந்து 77க்கு சென்றோம். இந்த டிரெண்ட் தொடரும். அங்கு 34 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரிகள் பூஜ்யமாகக் குறைந்துவிட்டனர். 30 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியும் பூஜ்யமாகக் குறைந்துவிட்டனர்" என்று அவர் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications