"நிரந்தர" பொதுச்செயலாளர்! எடப்பாடியின் அடுத்த பிளானை பாருங்க.. புதிர்போடும் மாஃபா.பாண்டியராஜன்
சென்னை: அதிமுகவில் இன்னும் உட்கட்சி குழப்பம் முடிவுக்கு வராத சூழலில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பரபர கருத்துகளைத் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இடையே கட்சியில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இரு தரப்பும் தங்கள் பின்னால் தான் அதிமுக தொண்டர்கள் இருப்பதாகக் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே அதிமுக பொன் விழா கூட்டத்தை எடப்பாடி தரப்பு பிரம்மாண்டமாகக் கொண்டாடி வருகிறது. பல்வேறு மாவட்டங்களிலும் சிறப்புக் கூட்டங்களை நடத்தி வருகிறது.

அதிமுக பொன்விழா
அதன்படி விருதுநகர் சாத்தூரில் அதிமுகவின் பொன்விழா நிறைவு விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் மேடையில் வைக்கப்பட்டு இருந்த கேக்கை வெட்டி கொண்டாடினர். மேலும் நலிவடைந்த கட்சி நிர்வாகிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மாஃபா.பாண்டியராஜன்
இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், "அனைத்து சமூகத்தினரையும் ஒரே போலப் பார்க்கும் கட்சி தான் அதிமுக. திமுக ஆட்சிக்கு வந்ததும் வழக்கம் போல மின்வெட்டு தொடங்கிவிட்டது. மின் வெட்டும் திமுகவும் ஒட்டிப்பிறந்தது.. இதன் காரணமாகப் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். தமிழக அரசு இதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை.

கடும் தாக்கு
திமுக பொதுக்குழுவில் வைத்தே தமிழக அமைச்சர்களின் செயல்களைப் பார்த்து "என் உடம்பு ஒரு மாதிரி ஆகிவிட்டது" என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். அதுமட்டுமின்றி, தமிழக மக்களை இழிவுபடுத்தும் வகையில் திமுக அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. இப்படிப் பேசும் அமைச்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு அமைச்சரையாவது நீக்கும் துணிச்சல் முதல்வருக்கு உள்ளதா

குடும்ப அரசியல்
அதிமுகவைப் பொறுத்தவரைக் கடைக்கோடி தொண்டனும் பெரிய பதவிக்கு வரலாம்.. ஆனால் திமுகவைப் பாருங்கள்.. ஒரு பக்கம் ஸ்டாலின் மற்றும் உதயநிதி உள்ளனர். மற்றொரு பக்கம் கனிமொழி இருக்கிறார். திமுகவில் குடும்ப அரசியல் தான் உள்ளது.. கமிஷன், கலெக்சன், கரெக்சன் என்பது திமுகவுக்கே பொருந்தும். கட்சிக்குள் பொறுப்பு வழங்கவும் கூட இதே கமிஷன், கலெக்சன், கரெக்சன் தான்.

நிரந்தர பொதுச்செயலாளர்
இப்போது அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அவர் அடுத்த இரண்டு மாதங்களில் நிச்சயம் நிரந்தர பொதுச்செயலாளராக வருவார். திமுக ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். திமுகவின் 16 மாத கால ஆட்சியில் மக்களுக்கு வெறுப்பு உள்ளது. இதனால் எடப்பாடியைப் பார்த்து மக்கள், "கண்டா வரச்சொல்லுங்கள் எடப்பாடி பழனிசாமியைக் கண்ட வரச்சொலுங்க.." என்றே பாடுகின்றனர்.

அடுத்த பிளான்
மேலும் மக்களவை தேர்தல் உடன் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது. அப்படி வந்தால் அதில் எடப்பாடி தலைமையிலான அதிமுக பெரிய வெற்றியைப் பெறும். அதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது" என்றார். மாஃபா.பாண்டியராஜன் பேசிய பொது அங்கு மழை பெய்யத் தொடங்கியது இருப்பினும் அவரது பேச்சைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் கேட்டனர்.












Click it and Unblock the Notifications