சென்னை சாலையில் மாடு.. தண்ணீர் லாரியில் சிக்கிய பெண்.. தலை துண்டாகி பலி.. கணவன் கண் முன் துயரம்
சென்னை: சென்னை அனகாபுத்தூரில் இருசக்கர வாகனத்தில் தம்பதி சென்ற போது, மாடு சாலையில் படுத்துக்கிடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மாடு மீது மோதி வாகனம் கவிழ்ந்தது. இதில் கணவன் கண் முன்னே தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் தலை துண்டாகி பலியானார். இந்த சம்பவம் தாம்பரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துக்கள் அவ்வப்போது ஏற்படுவது நடந்து வருகிறது. விபத்து நடந்த சில நாட்கள் மட்டும் மாடுகளை சாலையில் விட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மற்றபடி வழக்கம் போல் மாடுகள் சுற்றுகின்றன. நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை.

சென்னையில் தெருக்களில் மாடுகள் சுற்றுவதால் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்து ஏற்பட்டு சிலருக்கு காயங்களும் ஏற்படுகிறது. ஏன் தற்போது மரணமே நடந்துள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
சென்னையில் பல்லாவரம் இந்திரா நகரைச் சேர்ந்த 65 வயதாகும் சின்னையா தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நாகம்மாளுக்கு 59 வயதாகிறது. ஞாயிறு அன்று காலை கணவன்-மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.
பம்மல்-திருநீர்மலை சாலையில் அனகாபுத்தூர் அருகே இவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் மாடு படுத்துக்கொண்டிருந்தது. இதனால் பிரேக் பிடிக்க முடியாமல் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் படுத்துகிடந்த மாடு மீது மோதி கவிழ்ந்தது. இதில் கணவன்-மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தோடு சாலையில் விழுந்தனர்.
அப்போது வலது பக்கமாக நாகம்பாள் விழுந்தார். இடதுபக்கமாக சின்னையா விழுந்தார். வலதுபக்கம் சாலையில் வாகனங்கள் செல்லும் பகுதி என்பதால், அந்த நேரத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி நாகம்மாள் மீது ஏறி இறங்கியது. இதில் நாகம்மாள், தலை துண்டாகி அதே இடத்தில் இறந்தார். கணவர் கண் எதிரிலேயே இந்த கொடூரமான சம்பவம் நடந்தது. ரத்த வெள்ளத்தில் தலை துண்டாகி கிடந்த மனைவியின் உடலை தூக்கி வைத்துக் கொண்டு சின்னையா கதறி அழுதார். இந்த காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. விபத்து நடந்த உடன் லாரியை நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து நாகம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அனகாபுத்தூர், பம்மல் பகுதியில் இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் சுற்றி திரிவதால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. இதுபற்றி தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். சாலையில் மாடுகளால் விபத்து இனியும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications