டாக்டர் போல வந்து வந்து ஸ்டான்லி மருத்துவமனை விடுதியில் நகை திருடிய பெண்.. சிக்கியது எப்படி?
சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மகளிர் விடுதியில் டாக்டர் போல் வேடமிட்டு மாணவிகளின் தங்க நகைகளைத் திருடி வந்த ஸ்வேதா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில், மாணவிகளின் தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த செல்போன்கள் தொடர்ந்து திருட்டு போவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக விடுதி நிர்வாகத்திடமும் மாணவிகள் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், மருத்துவப் பிரிவில் 2 ஆம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மருத்துவ மாணவி ஒருவர் தனது அறையில் தூங்கச் சென்றபோது, தனது 2 சவரன் தங்க நகைகளை கழற்றி வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது, மருத்துவர் சீருடையில் விடுதிக்குள் நுழைந்த பெண் ஒருவர், அங்கு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை எடுத்துள்ளார்.
நகைகளை திருடிய பின்னர் விடுதியை விட்டு வேகமாக வெளியேற முயன்ற பெண்ணின் நடவடிக்கையில் விடுதி ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விடுதி ஊழியர்கள் விசாரித்துள்ளனர். அவர் அளித்த பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால், உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார், அந்தப் பெண்ணை விசாரித்தனர். அந்தப் பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் கிழக்கு தாம்பரத்தில் உள்ள லட்சுமி நகரைச் சேர்ந்த ஸ்வேதா என்பது தெரியவந்தது. மேலும், மருத்துவர் போல சீருடை அணிந்து விடுதிக்குள் நுழைவதை வழக்கமாகக் கொண்டு, கடந்த சில நாட்களாக விடுதியில் திருட்டு செயலில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விடுதியில் மாணவிகள் மற்றும் மருத்துவர்களின் நடமாட்டத்தைப் பயன்படுத்தி ஸ்வேதா விடுதிக்கு உள்ளே சென்று, மொபைல் போன்கள், நகைகளை திருடியுள்ளார். இதையடுத்து ஸ்வேதா மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். ஸ்வேதா மீது ஏற்கனவே 6 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மகளிர் விடுதியில் இதற்கு முன்பு நடைபெற்ற நகை மற்றும் செல்போன் திருட்டுச் சம்பவங்களிலும் ஸ்வேதாவுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications
