கலெக்டர் ஆபீசில் கருகிய உடல்.. வேதனையில் விபரீத முடிவு! பணத்தை சுருட்டிய கம்பெனியால் ஊசலாடும் உயிர்!
திண்டுக்கல்: தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் செலுத்திய பணத்தை வாடிக்கையாளர்கள் திரும்ப கேட்டு தொந்தரவு கொடுத்த காரணத்தினால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த பெண், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பிரங்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மனைவி பச்சையம்மாள். இவர் அதே பகுதியில் உள்ள Pacl என்ற தனியார் நிதி நிறுவனத்தில் முகவராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களிடம் அதிக வட்டி கிடைக்கும் என நம்ப வைத்து நிதி நிறுவனத்திற்கு பணம் வசூல் செய்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிதி நிறுவனம் மூடப்பட்டது.

இதனையடுத்து பச்சையம்மாள் பொதுமக்களிடம் வசூல் செய்த பணத்தை திரும்ப செலுத்த முடியவில்லை. பணம் கொடுத்த பொதுமக்கள் இவரை தொடர்ந்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரிடம் பலமுறை பச்சையம்மாள் புகார் கொடுத்துள்ளார். ஆனால் தமிழக அளவில் ஏராளமான வாடிக்கையாளர்களிடம் இந்த நிறுவனம் பண மோசடி செய்து விட்ட காரணத்தினால் பச்சையம்மாள் பணம் வாங்கி கொடுத்த நபர்களுக்கு அவரால் பணத்தைத் திரும்ப செலுத்த முடியவில்லை என சொல்லப்படுகிறது.
ஆனாலும் தினந்தோறும் பச்சையம்மாள் வீட்டிற்கு பணம் கொடுத்த நபர்கள் வந்து கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் மன வேதனை அடைந்த பச்சையம்மாள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தபோது மிகுந்த மன வேதனை அடைந்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில், அப்பெண்ணுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், PACL வழக்கை விரைந்து முடித்து முதலீட்டாளர்களை காக்க அரசுக்கு திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," நத்தம் மங்களப்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரது மனைவி பச்சையம்மாள்.
இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் PACL -ல் ஏஜென்டாக வேலை பார்த்து வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்து மேற்படி நிறுவனத்தில் செலுத்தியுள்ளார் என்பதும் இதேபோல நாடு முழுவதும் பலர் இந்நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பதும் இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திலும், அமலாக்கத்துறையிலும் விசாரணையில் இருந்து வருகிறது என தெரியவருகிறது.
இந்நிலையில் வாடிக்கையாளர்கள் பணத்தை திருப்பி கேட்டதால் மனவிரக்தி அடைந்த மேற்படி பச்சையம்மாள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். PACL நிறுவன வழக்கை விரைந்து முடித்து அதன் சொத்துக்களை ஏலம் விட்டு முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்க ஒன்றிய நிதியமைச்சகம் விரைந்து நடவடிக்கை எடுத்து இதுபோன்ற உயிர்ப்பலிகளை தடுத்து நிறுத்த வேண்டுகிறோம்!" என கூறியுள்ளார்.
Note: தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்..












Click it and Unblock the Notifications