மூட நம்பிக்கைகளை உடைத்து.. இறந்தவர் உடலை சுடுகாடு வரை சுமந்து சென்ற திவிக பெண்கள்!
சென்னை: கொளத்தூர் அருகே மறைந்த திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகியின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை பெண்கள் சுமந்து சென்றனர்.
பெரியார் சிந்தனை உணர்வாளரான கொளத்தூர் சி.சுப்பிரமணியன், நேற்று காலமானார். தமிழ்நாடு மின்சார துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுப்பிரமணியன், திராவிடர் விடுதலைக் கழகத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அவரது இறுதி ஊர்வலத்தில், அவரது உடலை பெண்கள் சுமந்து சென்றது கவனம் பெற்றுள்ளது.

கொளத்தூர் அய்யம்புதூர் பகுதியைச் சேர்ந்த திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி சி.சுப்பிரமணியன் நேற்று காலை 8 மணியளவில் காலமானார். இதையடுத்து திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த பெண் தொண்டர்கள் மறைந்த சுப்பிரமணியனின் உடலை சுமந்து சென்று இறுதி ஊர்வலத்தை தலைமை ஏற்று நடத்தினர்.
வழக்கமாக நடைபெறும் இறுதிச் சடங்குகளை தவிர்த்து, சுப்பிரமணியனின் உடல் தகனம் செய்யப்பட்டது. வழக்கமான இறுதி ஊர்வலத்தில் ஆண்களே முன்னின்று சடங்குகளை நடத்துவார்கள், பெண்களை சுடுகாடு வரை அனுமதிக்காமல் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி விடுவார்கள். அதற்கு மாறாக சுப்பிரமணியனின் இறுதி ஊர்வலத்தை திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த பெண்களே தலைமையேற்று நடத்தினர்.
இறந்தவர்களின் உடலை பெண்கள் சுமக்கக் கூடாது, சுடுகாடு வரை பெண்கள் வரக்கூடாது என்ற மூடத்தனத்தை மறுத்து, மத, ஜாதிய சடங்குகளை மறுத்து பெண்களே முன்னின்று இறுதி நிகழ்வுகளை நடத்தினர். எந்த நிகழ்விலும் ஆண், பெண் என்ற பாலின பேதம் பார்க்கக்கூடாது என்ற பெரியார் கொள்கைப்படி, இறுதி நிகழ்வு நடந்தது.
இந்நிகழ்வு அய்யம்புதூர் பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இந்த இறுதி நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் திராவிடர் கழக, திராவிடர் விடுதலைக் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதி ஊர்வலத்தின் போது பெரியாரின் பெருந்தொண்டர் சிவசுப்பிரமணியனுக்கு புகழ் வணக்கம் என கோஷமிட்டனர்.












Click it and Unblock the Notifications