சென்னை ஈசிஆர் சம்பவம்.. தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய அதிமுக வழக்கறிஞர்
சென்னை: சென்னை ஈசிஆர் சாலையில் நள்ளிரவில் காரில் பெண்களை துரத்திய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை வெளியிட்ட விவகாரத்தில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க கோரி அதிமுக பெண் வழக்கறிஞர் தலைமை நீதிபதி, தலைமைப் பதிவாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக பெண் வழக்கறிஞர் ரேணுகா தேவி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, சென்னை ஈசிஆர் சாலையில் கானத்தூர் அருகே முட்டுக்காடு பகுதியில் இரவு நேரத்தில் சென்ற பெண்களை இளைஞர்கள் சிலர் மற்றொரு காரில் துரத்திச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவியது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்க சென்றபோது, புகாரின் மீது வழக்கு பதிவு செய்யாமல் காவல்துறையினர் நள்ளிரவில் ஏன் வெளியில் வந்தீர்கள் என கேள்வி எழுப்பியதாகவும், சமூக வலைதளத்தில் வீடியோ பரவியதால் தான் வழக்கு பதிவு செய்ததாகவும், இந்த விவகாரம் தொடர்பாக 29ம் தேதி தாம்பரம் காவல் ஆணையர் வெளியிட்ட பத்திரிக்கை செய்தி குறிப்பில் பாதிக்கபட்ட பெண்ணின் பெயர், காரின் எண் போன்றவை வெளியிடப்பட்டுள்ளது.
விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில் இந்த விவரங்கள் வெளியாக வேண்டிய அவசியம் இல்லை. குற்றஞ்சாட்டப்பட்ட ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களை காப்பாற்றும் நோக்கில் காவல்துறையினர் செயல்பட்டது கண்டனத்திற்குரியது.
காவல் அமைப்பு சுதந்திரமான அமைப்பு எனவும், ஆளுங்கட்சியின் உத்தரவிற்கிணங்க செயல்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வருகிறது. எனவே, பெண்களின் விவரங்களை வெளியிட்டது தொடர்பாகவும், அடையாளங்களை வெளியிட்ட அதிகாரி மீதும் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், போலீஸ் தரப்பில் இது கார்கள் உரசிக்கொண்டதால் ஏற்பட்ட வாக்குவாதம்தான் எனவும், சண்டை போட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications