பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: கமலாலயத்தை முற்றுகையிட்ட ஜோதிமணி கைது
சென்னை : பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிட்ட ஜோதிமணி உள்பட மகளிர் காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பபட்டனர்.
பாஜக கட்சியின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கேடி ராகவனுக்கு எதிராக இணையத்தில் வெளியான பாலியல் ரீதியான வீடியோ பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதன் ரவிசந்திரன் என்ற முன்னாள் பாஜக நிர்வாகி வெளியிட்ட இந்த வீடியோ காரணமாக தமிழ்நாடு பாஜக அதிர்ச்சியில் உள்ளது. இது தொடர்பாக விசாரிக்க பாஜக சார்பாக மாநில செயலாளர் மலர்க்கொடி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
மாநில பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கேடி ராகவனும் பதவி விலகிவிட்டார். அதேபோல் மதனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கேடி ராகவன் வீடியோ குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் பேசியதாக கூறி மதன் ரவிச்சந்திரன் நேற்று வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். அண்ணாமலைக்கும் தனக்கும் நடந்த உரையாடல் என்று கூறி மதன் ரவிசந்திரன் இந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

கண்டனம்
அண்ணாமலைக்கு எதிரான இந்த வீடியோ இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கரூர் தொகுதி எம்பியும், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியுமான ஜோதிமணி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஒப்புக்கொள்கிறார்
அந்த அறிக்கையில் ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி, பாஜகவின் தற்போதைய மாநில தலைவர் தங்கள் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஒப்புக்கொள்கிறார். ஆனால் அதை தட்டிக் கேட்க அவருக்கு தைரியமில்லை குற்றவாளியை விட்டுவிட்டு குற்றத்தை வெளிக்கொண்டுவந்தவர்களை கட்சியை விட்டு நீக்குகிறார்.

மனசாட்சி இல்லை
பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்க முடியாமல் தடுப்பது எது? பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுப்பது எது? சொந்த கட்சியிலுள்ள பெண்களிடமே பாஜக தலைவர்கள் இவ்வளவு மோசமாக நடந்துகொள்கிறார்கள், அதை அந்த கட்சியின் தலைவர் சிறிதும் வெட்கமும்,மனசாட்சியும் இல்லாமல் ஆதரிக்கிறார்

அண்ணாமலை மறுக்கவில்லை
இன்னும் பல கண்ணியக்குறைவான செய்திகள் தமக்குத் தெரியும் என்கிறார். ஒன்றிய இணைஅமைச்சர் திரு. முருகன் தொடர்பாகவும் ஒரு பாலியல் விடியோ இருப்பதாக மதன் சொல்லும் போது திரு. அண்ணாமலை அதை மறுக்கவில்லை ஆக அதுவும் அவருக்கு தெரிந்துதான் இருக்கிறது ஒரு கட்டத்தில் மிக மோசமாகப் பேரம் பேசுகிறார்

காம இச்சை
இன்னும் ஒரு படி மேலே போய் கட்சியில் இல்லாத சாதாரண பெண்களிடம் பாஜக தலைவர்கள் முறைகேடாக நடந்துகொண்டிருந்தால் கையில், காலில் விழுந்தாவது பாஜக தலைவர்களை காப்பாற்ற இந்த விடியோவை வெளியிட வேண்டாம் என்பேன் என்கிறார். திரு.அண்ணாமலையைப் பொறுத்தவரை சாதாரணப் பெண்கள் பாஜக தலைவர்களின் காம இச்சைக்குப் பலியாகவேண்டியவர்கள்! அப்படித்தானே?அவர்களைப் பற்றி திரு.அண்ணாமலைக்கு எந்த அக்கறையும் கிடையாது. இதைக் கேட்கும்போது ஒரு பெண்ணாக ரத்தம் கொதிக்கிறது

பாஜக பெண்கள்
இவர் தான் தேசம் காப்பவர்! தமிழகத்துப் பெண்கள் தேசம் இல்லையா? எங்களுக்கு கண்ணியமும்,கௌரவமும் இல்லையா? அப்படியென்றால் சாதாரண பெண்களுக்கு இந்த பாஜக தலைவர்களிடமிருந்து என்ன பாதுகாப்பு இருக்கமுடியும்?இப்பொழுது பாரதிய ஜனதா கட்சிக்குள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அவலம் ஒரு கட்சியின் உள்கட்சி விவகாரம் அல்ல. பெண்களின் கௌரவம், கண்ணியம், பாதுகாப்போடு தொடர்புடையது.

அண்ணாமலை
எந்த கட்சியில் இருந்தாலும் அவர்கள் நமது சகோதரிகளே. அவர்களை பாதுகாக்க வேண்டியது நமது மற்றும் தமிழக அரசின் கடமை. ஆனால் பாஜகவின் மாநில தலைவர் திரு.அண்ணாமலை சொந்த கட்சியில் உள்ள பெண்களின் பாதுகாப்பையும்,கண்ணியத்தையும் உறுதிசெய்ய முடியாதவர், சாதாரண பெண்களை கிள்ளுக்கீரையாக நினைப்பவர், பாஜக தலைவர்களின் பாலியல் குற்றங்களை கண்டும் காணாமல் கடந்து போகிறவர்.

ஜோதிமணி கோரிக்கை
பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக நிற்பவர். இவர்தான் தேசம், தெய்வீகம் என்றெல்லாம் பேசி ஊரை ஏமாற்றிக்கொண்டிருப்பவர். ஆகவே திரு அண்ணாமலை உடனடியாக தனது பதவியை ராஜினமா செய்ய வேண்டும். தமிழகத்துப் பெண்களை அவமதித்ததற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்" இவ்வாறு ஜோதிமணி எம்பி அறிக்கையில் கூறியிருந்தார்.

ஜோதிமணி கைது
இந்நிலையில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக வழக்கறிஞர் சுதா தலைமையில் ஜோதிமணி எம்பி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்து புறப்பட்டு, தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பாஜகவினரின் பாலியல் குற்றங்கள் பொள்ளாச்சி போன்ற கொடுமையான சம்பவங்களாக மாறாமலிருக்க பெண்களை காப்பாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையுடன் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக மகளிர் காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டிருந்தது,. இந்தபோராட்டத்தில் கலந்து கொண்ட ஜோதிமணி எம்பி, வழக்கறிஞர் சுதா உள்பட மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டதில் ஈடுபட்டனர்,












Click it and Unblock the Notifications