வாழை.. அழுகை, காமத்தை காசாக்கும் மாரி செல்வராஜ்! "ஒன்இந்தியாவிடம்" பொங்கிய சாரு நிவேதிதா
சென்னை : இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய வாழை படத்தை விமர்சித்த பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதாவை பலரும் விமர்சித்து வரும் நிலையில், தனது விமர்சனத்துக்கு என்ன காரணம் என அவரே பதில் அளித்துள்ளார். வாழை படத்தில் டீச்சர்-சிவணனைந்தன் இடையே நடந்த உண்மை சம்பவத்தை மறைத்தது தான் ஆபாசம் எனவும், மாரி செல்வராஜை விமர்சித்த என்னை ஒட்டுமொத்தமாக சேர்ந்து அடிப்பது போல் நடந்து கொள்கிறார்கள் என கூறியுள்ளார்.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாழை படம் வெளியானது. வாழை தோப்பு பணியாளர்களின் வேதனையை ரத்தமும் சதையுமாக திரையில் அப்படியே கொண்டு வந்திருந்தார் மாரி செல்வராஜ்.

உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, நடிகர்கள் கலையரசன். நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில் வாழை ஒரு ஆபாச படம் என விமர்சித்துள்ளார் பிரபல எழுத்தாளரான சாரு நிவேதிதா. இதுதொடர்பாக தனது இணைய பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர்,”தாய்லாந்திலும் மற்ற செக்ஸ் டூரிஸ தேசங்களிலும் லைவ் ஷோ என்ற பிரபலமான காட்சி உண்டு. ஒரு பெரிய அறையின் நடுவே வட்ட வடிவத்தில் ஒரு மேடை இருக்கும். அதில் கண்ணைக் கூசும் வெளிச்சத்தில் ஒரு ஆணும் பெண்ணும் உடலில் எந்த வஸ்திரமும் இன்றி உடலுறவு கொள்வார்கள். அறையைச் சுற்றி அமர்ந்திருக்கும் ஆண்களும் பெண்களும் அந்தக் காட்சியைக் கண்டு களிப்பார்கள். கூட்டத்தில் ஆண்களுக்கு நிகராகவே பெண்களும் இருப்பார்கள்.
வாழை படத்தில் வரும் டீச்சர் பூங்கொடி, மாணவன் சிவனைந்தன் காட்சிகள் அனைத்தும் தாய்லாந்தின் லைவ் ஷோ காட்சிகளின் soft version ஆகவே எடுக்கப்பட்டிருக்கின்றன. அங்கே நேரடியாக நடக்கும். இங்கே மறைமுகமாக நடக்கிறது. ஆனால் அப்படி எதுவும் இல்லை என்பதான பாசாங்குதான் இந்தப் படத்தை சமூக விரோதமான படைப்பாக மாற்றுகிறது.” என விமர்சித்திருந்தார். இந்நிலையில் எழுத்தாளர் சாரு நிவேதிதாவை பலரும் விமர்சித்து வரும் நிலையில், அதுகுறித்து ஒன்இந்தியா குழுமம் சார்பில் அவரிடமே கேட்டோம்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சாரு நிவேதிதா,” படத்தில் உள்ள வசனங்கள் ஆபாசமாக உள்ளது. வெளிப்படையாக காட்டினால் ஆபாசம் இல்லை.. மறைப்பது தான் ஆபாசம். இது மிகவும் தவறானது. பல உலக சினிமாக்களில் காதல், ஊடலை எதார்த்தமாக காட்டியுள்ளனர். இங்கே இலைமறை காயாக காட்டி காட்டி குற்ற செயல்களை அதிகரிக்க வைத்துள்ளனர்.
வாழை படத்தில் ஆசிரியைக்கும் மாணவனுக்கு என்ன நடந்தது என வெளிப்படையாக காட்டியிருக்க வேண்டும். பட விழாவின் போதே நெல்சன், மாரி செல்வராஜை அப்போ உனக்கு என்ன வயது எனக் கேட்டிருப்பார். நீங்கள் சொல்வது போல சிறுவயதில் மாரி செல்வராஜின் உண்மை கதையாக இருந்தாலும் அதை வெளிப்படையாக சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அதை மாரி செல்வராஜ் மறைப்பது தான் பிரச்சனையே. பள்ளிக் காலத்தில் ஆசிரியை உடனான காதலை வெளியே சொன்னால் தன்னை பற்றி தவறாக நினைப்பார்கள் என்பதால் கூட மாரி செல்வராஜ் அதை மறைத்திருக்கலாம். இதுதான் பிரச்சினையே.
இந்த சமூகத்தில் எத்தனையோ நபர்களால் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதனை பெற்றோரிடம் சொன்னால் கூட அதனை கண்டுகொள்வதில்லை. ஆபாச படம் பார்த்த ஒரு சிறுவன் தனது 6 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். அதனை அவனது தாயே மறைத்திருக்கிறார். நிலைமை இப்படி இருக்க வாழை படத்தில் எல்லாமே பொய் என்பதை விட இது சமூகத்துக்கு ஆபத்தான, அபத்தமான கருத்து சொல்லப்பட்டுள்ளது.
இந்த உலகமே கொண்டாடும் எனச் சொல்லப்படும் ஒரு படைப்பை நான் விமர்சிக்க காரணம், நான் ஜெயகாந்தன் போல.. யாருக்கும் பயப்பட மாட்டேன். அவர் சிவாஜியின் மேடையிலேயே சிவாஜிக்கு நடிக்க தெரியாது. என்னையே செக்ஸ் எழுத்தாளர் என விமர்சிப்பார்கள். ஆனால் சமூகம் ஏன் இந்த படத்தை கொண்டாடுகிறது. படத்தை விமர்சித்த என்னை ஒட்டுமொத்தமாய் அடிக்க வருவது போல் வருகிறார். இதுதான் மானுட சமூகத்தின் ஒட்டுமொத்த பாசிச தாக்குதால்.
மாரி செல்வராஜை எதிர்ப்பவர்களை எல்லாம் அடிக்க வேண்டுமென்பது போல் அவரது ஆதரவாளர்கள் நடந்து கொள்கின்றனர். ஆனால் அவரது பரியேறும் பெருமாளை பலரும் கடுமையாக விமர்சித்த நிலையில், நான் மட்டுமே ஆதரித்தேன். ஆனால் வாழை படத்தில் அழுகையை காசாக்க நினைத்துள்ளார்.
படத்தில் காயம்பட்ட ஒருவரைக் காட்டி பிச்சை எடுப்பது போல் எடுத்துள்ளார். துயரத்தையும், சோகத்தையும் காட்டி காசு பார்க்க நினைப்பது கொடூரமான எண்ணம். வாழை படத்தை எடுத்த மாரி செல்வராஜ் கீழ்வெண்மணி சம்பவத்தை ஏன் எடுக்கவில்லை, தூண்ட வேண்டிய கதையை வைத்து நடிப்பது ஏன்? காமத்தை காமமாக எடுக்க வேண்டும். காமத்தை காதலாக காட்டக் கூடாது” என பதிலளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications