யாதவர்கள் தான் 100 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறோம்! இருதலை கொள்ளியாய் ராஜகண்ணப்பன்!
சென்னை: யாதவர்கள் தான் 100 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக திகழ்கிறோம் என்றும் யாதவர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் யாதவ மகா சபையினர் டிமாண்ட் வைத்துள்ளனர்.
இந்த டிமாண்டை நேரடியாக அரசுக்கு வைப்பது ஒரு பக்கம் என்றாலும், இதனை நிறைவேற்றி தர வேண்டியது உங்கள் பொறுப்பு என அமைச்சர் ராஜகண்ணப்பன் வசமும் சுமையை ஏற்றியுள்ளனர். இது தொடர்பாக கோகுல மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் சேகர் அளித்த மனு விவரம் வருமாறு;

''தமிழ்நாட்டில் யாதவர்கள் அனைத்து பகுதியிலும் பரந்து விரிந்து வாழ்ந்து வருகிறார்கள், நூற்றுக்கும் மேற்ப்பட்ட தொகுதிகளில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கின்ற மாபெரும் சக்தியாக இருக்கிறார்கள். இம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 'சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார முறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் அல்லது யாதவர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என்ற முக்கிய கோரிக்கையை அரசுக்கு பல முறை கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் பல முறை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்து உள்ளோம் என்பதை நாங்களும் அறிந்தவையே ஆகும்.''
''தமிழகத்தில் வாழும் யாதவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டிய அவசர அவசியத்தை தமிழக அரசுக்கு தெரியபடுத்தும் வண்ணம் சிறப்பாக செயல் படக்கூடிய சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட ஆற்றல் மிக்க அமைச்சர் அண்ணன் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், நமது தமிழக முதல்வரிடம் இம்மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள நிலைகளை எடுத்துச் சொல்லி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கிட தாங்கள் உரிய ஆவனசெய்திடல் வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.''
''மத்திய மாநில அரசு வேலைவாய்ப்பில் அனைத்து துறைகளிலும் உரிய பங்களிப்பு கிடைக்காமல் சுமார் 34 ஆண்டுகளாக தமிழக யாதவர்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளனர் என்பதை தாங்கள் நன்கு அறிந்தவர் என்பதால் இதை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என மீண்டும் ஒருமுறை பணிவுடன் வேண்டுகிறோம்.''
''சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு அல்லது தமிழக யாதவர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்கிட தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆவணம் செய்வார்கள் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உண்டு. தமிழகத்தில் அனைத்து சாதி சங்க தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இக்கோரிக்கையை எழுப்பி வருவதையும் தாங்கள் அறிந்தவையே ஆகும். ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை தாங்கள் தான் நிறைவேற்றி தர வேண்டும் என மிகவும் பணிவுடன் வேண்டுகிறேன்.''












Click it and Unblock the Notifications