புதிய குடும்ப அட்டை.. ஜூன் 5ம் தேதியேவா? பல குடும்பங்களுக்கு வரப்போகுது மகிழ்ச்சியான செய்தி
சென்னை: நாளை மறுநாள் முதல் எளிதாக விண்ணப்பித்து புதிய குடும்ப அட்டை பெற முடியும். நாளையுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வருவதால் அரசு புதிய திட்டங்களை அறிவிக்க முடியும். அதேபோல் மக்கள் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிக்கலாம். மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் குறித்த அறிவிப்பும் அடுத்த வாரத்தில் வெளியாகலாம்.
பல நாட்களாக குடும்ப அட்டை பெற முடியாமல் தவித்த மக்களுக்கு நாளையுடன் நல்ல செய்தி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக குடும்ப அட்டை பெற முடியாமல் தவிக்கிறார்கள். அதேபோல் குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்ய முடியாமலும் தவித்து வந்தார்கள். அவர்கள் நாளை மறுநாள் முதல் எளிதாக மாற்றங்களை செய்ய முடியும்..

தேர்தலால் நிறுத்தி வைக்கப்பட்ட புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி இந்த வாரம் முதல் தொடங்குகிறது. இதன் காரணமாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன கார்டு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தற்போது சுமார் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 கார்டுகள் இருக்கின்றன. குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு மானிய விலையிலும், விலையில்லாமலும் அரிசி சர்க்கரை, பருப்புகள், பாமாயில் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. குடும்ப அட்டை இருந்தால் பல்வேறு சலுகைகள் பெறலாம். அரசு அறிவிக்கும் பொங்கல் பரிசு, நிவாரண தொகைகளை பெற முடியும்.இதுதவிர அரசின் நிதி மானியங்களையும் பெற முடியும்
மிக முக்கியமான மகளிர் உரிமை தொகை வாங்க வேண்டுமானால், அவர்கள் கண்டிப்பாக குடும்ப அட்டை வாங்கவேண்டும் . இதேபோல் திருமண உதவி தொகை திட்டம் மற்றும் கர்ப்பிணி உதவி தொகை திட்டத்தின் பலனை பெறவும் குடும்ப அட்டை மிக அத்தியாவசியமானது. இந்நிலையில் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமை தொகை வழங்கப்படுவதால், புதிய கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு வழக்கத்தைவிட மிக அதிகமானது. அதாவது ஒரு குடும்பத்தில் இருக்கும் மாமியார், மருமகள் இருவரும் மகளிர் உரிமைத்தொகை பெற வேண்டும் என்பதற்காக ஒரே வீட்டில் இருந்தாலும், புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கினார்கள்
2022-ம் ஆண்டில் 2 கோடியே 20 லட்சம் ஆக இருந்த ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை கடந்த ஓராண்டாக நிறுத்திவைக்கப்பட்ட காரணத்தால் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 கார்டுகள் என்ற நிலையில் இருந்தது, இதற்கிடையில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் காரணமாக குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களை பிரித்து கொண்டு புதிய ஸ்மார்ட் கார்டுக்கு பலரும் விண்ணப்பிக்க தொடங்கினர். அதனால் புதிய கார்டுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் தேர்தலுக்கு முன்பு கணிசமானோருக்கு ரேஷன் கார்டு குறித்து எஸ்எம்எஸ் வந்துவிட்டது.. ஆனால் நடத்தை விதிமுறைகள் காரணமாக குடும்ப அட்டை அவர்களுக்கு கிடைக்கவில்லை.
இதனிடையே கடந்த ஓராண்டில் சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாளையுடன் முடியும் நிலையில், நாளை மறுநாள் முதல் விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.
தேர்தல் நடைமுறைகள் வருகிற ஜூன் மாதம் 5-ந் தேதி விலக்கி கொள்ளப்படுவதால் அனைத்து மாவட்டங்களிலும் புதிய ஸ்மார்ட் கார்டுகள் வாங்க எளிதாக விண்ணப்பிக்கலாம். அதேபோல் நாளை மறுநாள் முதல் ஸ்மார்ட் கார்டு தொலைந்தவர்கள் மற்றும் திருத்தம் செய்தவர்களுக்கும் புதிய ஸ்மார்ட் கார்டு தடையின்றி வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் பொதுமக்கள் குடும்ப அட்டைகள் பெற https://www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் நேரடியாக இனி விண்ணப்பம் செய்யலாம். அல்லது இசேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் நகல் ஸ்மார்ட் கார்டு, கார்டில் புதிய உறுப்பினர்களை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்ப தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்கம் போன்ற அத்தனை சேவைகளையும் நாளை மறுநாள் முதல் மேற்கொள்ளலாம். ரேஷன் கார்டு வாங்கியவர்களுக்கு அடுத்த வாரத்திலேயே மகளிர் உரிமை தொகை குறித்து விண்ணப்பிக்க அரசு அழைப்பு விடுக்க வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications