“அக்கா..” பிளஸ் 2 பெயிலாகி ஆசிரியர் பணி! மோடி, அதானியால் தமிழிசைக்கு பதவி - காங்கிரஸ் எம்பி நறுக்
தூத்துக்குடி மக்கள் தமிழிசை சவுந்திரராஜனை புறக்கணித்ததாகவும், மோடி, அதானியால் அவருக்கு பதவி கிடைத்ததாகவும் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்து உள்ளார்.
சென்னை: தமிழ்நாடு மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் தன்னை போன்ற திறமையானவர்களுக்கு அங்கீகாரம் அளித்திருந்தால் மத்திய அமைச்சராகி இருப்போம் என்று தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்து உள்ள நிலையில், அது பிளஸ் 2 பெயில் ஆனவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்குவதை போன்றது என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சித்து உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருக்கும் விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர், "நீங்கள் பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த பிறகு பள்ளி முதல்வர் ஆசிரியர் பதவி வழங்குவார்.
அக்கா, நாடாளுமன்றத்தில் தங்கள் குரலாக யார் இருப்பார்கள் என்று தூத்துக்குடி மக்கள் தெரிந்து தேர்வு செய்து உள்ளார்கள். எனவே அவர்கள் உங்களை புறக்கணித்தார்கள். ஆனால், மோடி மற்றும் அதானியால் நீங்கள் பதவி பெற்றீர்கள்.

தமிழிசை பேச்சு
தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்திரராஜன், நேற்று கோவையில் பேசுகையில், "தமிழ்நாடு மக்கள் நிர்வாக திறன் கொண்ட எங்களை போன்றவர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் அங்கீகாரம் கொடுக்கவில்லை. மாநிலங்களில் பதவியேற்கும் ஆளுநர்கள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரால் பரிசீலனை செய்யப்பட்டு அவர் ஜனாதிபதியால் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தமிழ்நாடு மக்கள் அங்கீகரிக்கவில்லை
தமிழ்நாடு மக்கள் எங்களை போன்றவர்களை நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்து இருந்தால் பலர் மத்திய அமைச்சர்களாகி இருப்பார்கள். மத்திய அரசு திறமையானவர்களை அடையாளம் கண்டு ஆளுநர்களாக நியமித்து வருகிறது. தமிழ்நாடு மக்கள் நல்லவர்களையும், திறமையானவர்களையும் அடையாளம் காண வேண்டும்.

4 முறை தேர்தலில் போட்டி
தமிழிசை சவுந்திரராஜன், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக 5 ஆண்டுகளாக பதவி வகித்தவர். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா என்ற கட்சி மக்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கியது இவரது பதவி காலத்தில்தான். பல்வேறு நிகழ்வுகளை நடத்தி பாஜகவை தமிழிசை சவுந்திரராஜன் தமிழ்நாட்டில் பிரபலப்படுத்தினார்.

தேர்தலும் தமிழிசையும்
தமிழ்நாட்டில் இதுவரை 4 முறை தேர்தல்களில் போட்டியிட்டு இருக்கிறார் தமிழிசை சவுந்திரராஜன். தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் 2 முறை, மக்களவைத் தேர்தலில் 2 முறை என அவர் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிட்டு இருக்கிறார். ஆனால், தமிழிசை சவுந்திரராஜன் ஒருமுறைகூட எந்த தேர்தலிலும் இதுவரை வெற்றி பெற்றது இல்லை.

ஒரு வெற்றிகூட இல்லை
2006 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் முதல் முதலாக ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சவுந்திரராஜன் 5 வது இடத்தை மட்டுமே பிடித்தார். வேளச்சேரி சட்டசபைத் தொகுதியில் 2011 ஆம் ஆண்டு போட்டியிட்ட அவர், 4 வது இடத்தையே பிடித்தார். வட சென்னை மக்களவைத் தொகுதியில் 2009 ஆம் ஆண்டு போட்டியிட்டு 3 வது இடத்தையும், தூத்துக்குடி தொகுதியில் 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட தமிழிசை 2 வது இடத்தையும் பிடித்தார்.

ஆளுநர் தமிழிசை
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவராக 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டு காலம் பதவி வகித்த தமிழிசை சவுந்திரராஜன், கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி துணை நிலை ஆளுநராக 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதவியேற்றார் தமிழிசை சவுந்திரராஜன்.












Click it and Unblock the Notifications