"அப்பாயிக்கு வயசாகிடுச்சு! வலிக்கும் பாவம்.." பாட்டிக்காக மழலை மொழியில் கெஞ்சும் குழந்தை.. வீடியோ
சென்னை: தனது அப்பாயியை அடிக்கக் கூடாது என்று குழந்தை ஒன்று தாயிடம் மழலை மொழியில் கொஞ்சும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
Recommended Video
குழந்தைகள் எப்போதும் அனைவர் மீதும் எவ்வித ஒளிவு மறைவும் இல்லாமல் அன்பைப் பொழிவார்கள். கள்ளம் கபடம் இல்லாத அவர்களின் அன்புக்கு நிகர் வேறு எதுவும் இல்லை!
அதிலும் பெண் குழந்தைகள் என்றால் சொல்லவே தேவையில்லை. அவர்கள் தங்களைச் சுற்றி உள்ளவர்கள் மீது செலுத்தும் அன்பு அளப்பரியது.

பெண் குழந்தை
அப்படி தான் பெண் குழந்தை ஒன்று தனது அப்பாயி (அப்பாவின் அம்மா) மீது வைத்துள்ள அன்பைக் காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்ங்கில் உள்ளது. குழந்தைக்கு சீரியல் காட்டியதற்காக அப்பாயியை அடிக்கப் போவதாகக் குழந்தையின் அம்மா விளையாட்டிற்குச் சொல்ல, அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு அந்த குழந்தை தனது மழலை மொழியில் அம்மாவை சமாதானப்படுத்த முயல்கிறது.

வீடியோ
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவின் ஆரம்பத்தில் சிறு குழந்தை ஒன்று அழுது கொண்டு இருக்கிறது. அவரது தாய் எதற்காக அழுகிறாய் என்று கேட்கிறார். அதற்கு அந்த குழந்தை அழுது கொண்டே, "அப்பாயிக்கு அடி கொடுக்கறேனு சொன்னல அதுக்கு தான்!" என்கிறது மழலை மொழியில்!

அப்பாயி
இதற்கு அவரது தாய், "நான் டிவியே பார்க்கக் கூடாது என சொல்லி இருக்கிறேன். நீ டிவி பார்த்தது மட்டுமில்லாமல் சீரியலாக பார்த்து இருக்கிறாய். உங்க அப்பாயி கூட தான இந்த சீரியல் எல்லாம் பார்த்து இருக்க. அப்பாயி தான உனக்கு சீரியல் எல்லாம் போட்டு காட்டுனாங்க. அப்போ உங்க அப்பாயி தான அடிக்கணும்! வரட்டும் இன்னைக்கு அடி கொடுக்கிறேன்" எனச் செல்லமாக அதட்டுகிறார்,

அடி தாங்க மாட்டாங்க
இதைக் கேட்டதும் குழந்தையின் கண்ணீர் இருந்து மளமளவெனக் கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. கண்ணீர் துடைத்தவாறே, "அவங்க அடி தாங்க மாட்டாங்க!" என்று அந்த குழந்தை சொல்ல, "ஏன் அடி தாங்க மாட்டாங்க" எனப் பதிலுக்குக் கேட்கிறார் அவரது தாய்! "அவங்களுக்கு ரொம்ப வயசு ஆகிடுச்சு. அடி தாங்க மாட்டாங்க. அடிச்சா புண் வந்திடும்!" என்று தனது மழலை மொழியில் கெஞ்சுகிறது அந்த குழந்தை.

வயசு ஆகிடுச்சு
அதற்கு அவரது தாயார், "தப்பு பண்ணுன அடிக்கத் தான் செய்வாங்க. புண் வந்தா வரட்டும்" என்று விளையாட்டாகச் சொல்கிறார். இதைக் கேட்டதும் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல், "வேண்டாம்மா.. அப்பாயிக்கு வயசு ஆகிடுச்சு அடி தாங்க மாட்டாங்க!" என்று கூறி அழத் தொடங்குகிறது. அத்துடன் அந்த வீடியோ முடிவடைகிறது.

நெட்டிசன்கள்
குழந்தையின் கள்ள கபடம் இல்லாத அன்பை நெட்டிசன்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். அப்பாயியை அடிக்கக் கூடாது என்பதற்காக அந்த குழந்தை தன்னால் முடிந்த வரை அம்மாவைச் சமாதானம் செய்யவும் முயல்கிறது. இந்த வீடியோவை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications