கன்னியாகுமரி லாட்ஜில் பெண்... போதையில் உறங்குவதாக கூறிய இளைஞர்.. கடைசியில் ட்விஸ்ட்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் தனியார் லாட்ஜில் ஒரு ஜோடி கடந்த இரண்டு நாள் முன்பு தங்கி உள்ளது. அங்கு அறையில் இருந்து வெளியே வந்த இளைஞர், தன்னுடன் வந்த பெண் போதையில் உறங்குவதாகவும், இப்போது தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் சந்தேகப்பட்டு போய் பார்த்த ஊழியர்கள் ஆடிப்போனார்கள். அந்த இளைஞரை போலீசார் கோவையில் வைத்து கைது செய்துள்ளனர்.
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி புகழ் பெற்ற கடற்கரை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கிறார்கள். இவர்களுக்காக கன்னியாகுமரி முழுவதுமே ஏராளமான லாட்ஜ்கள் மற்றும் சொகுசு விடுதிகள் உள்ளன. ஆன்மீக சுற்றுலா வரும் பயணிகளும் இங்கு அதிகம் வருவார்கள். அதேபோல் வெறுமென கன்னியாகுமரி கடலை சுற்றி பார்க்கவும் பலர் வருவார்கள். திருவனந்தபுரம், கன்னியாகுமரி கடல், குற்றலாம் என தென் மாவட்டங்களில் சுற்றுலாவாக பலர் வந்து செல்வார்கள். அப்படி வருபவர்கள் அறை எடுத்து தங்குவார்கள்.

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் தனியார் லாட்ஜ் இருக்கிறது. இங்கு கடந்த செப்டம்பர் 16ம் தேதி காலையில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரும், ஒரு 50 வயது மதிக்கத்தக்க பெண்ணும் அறை எடுத்து தங்கியுள்ளார்கள். காலையில் ஒன்றாக இருந்த நிலையில், மதியம் அறையில் இருந்து வெளியே வந்த அந்த இளைஞர், உடன் வந்த பெண் போதையில் உறங்குவதாக கூறியுள்ளார். அவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், லாட்ஜ் ஊழியர்களிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். ஏன் இப்படி சொல்கிறார் என்று சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அந்த அறையை திறந்து பார்த்தபோது அந்த பெண் படுக்கையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.
இதுகுறித்து அவர்கள் கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து லாட்ஜ் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட அந்த பெண் மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள ஆத்திக்காட்டுவிளையை சேர்ந்த செல்வி (வயது 50) என்பது தெரியவந்தது. அவரை தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்துவிட்டு அவருடன் வந்த வாலிபர் நகைகளை கொள்ளையடித்துச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து செல்வியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடன் தங்கியிருந்த வாலிபர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள். இதற்காக தனிப்படை அமைத்து அந்த இளைஞரை தீவிரமாக தேடினர். அவரது செல்போன் சிக்னல் மூலம் அந்த இளைஞரை அடையாளம் காணும் பணியினை தீவிரமாக போலீசார் மேற்கொண்டனர்.
அத்துடன் தனிப்படை போலீசார் லாட்ஜ் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அந்த வாலிபர் கோவைக்கு செல்லும் பஸ்சில் ஏறி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கோவைக்கு சென்று இளைஞரை கைது செய்து, கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த வாலிபர் ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்த 31 வயதாகும் செல்வராஜ் என்பது தெரியவந்தது. இவர் கடந்த 16ம் தேதி நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து செல்வியை அழைத்து கொண்டு கன்னியாகுமரிக்கு வந்து லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்து விட்டு, அவரது நகையை எடுத்துக் கொண்டு தப்பி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து செல்வராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். லாட்ஜில் பெண்ணை கொலை செய்த இளைஞர் கோவையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
