8வது ஆளாக வந்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்.. ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு.. பின்னணி என்ன?
சென்னை: எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக ஏற்கனவே திமுகவில் 7 மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 8வது மண்டல பொறுப்பாளராக தற்போது அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலையொட்டி நியமிக்கப்பட்டுள்ள மண்டல பொறுப்பாளர்கள், கட்சிக் கூட்டங்களை நடத்தி வரும் நிலையில், தற்போது திமுகவின் 3 மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திமுக ஆயத்தம்
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுக செயல்பட்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை ஏழு மண்டலங்களாக பிரித்து அதற்கு பொறுப்பாளர்களை நியமித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியானது. வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அந்த டார்கெட்டை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் மண்டல பொறுப்பாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அசைன்மெண்ட்டாம்.
7 மண்டல பொறுப்பாளர்கள்
திமுகவில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க கட்சி அளவில் பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அந்த மண்டங்களுக்கு பொறுப்பாளர்களையும் நியமித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அர.சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக துணை பொதுச் செயலாளர்கள் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் 7 மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டனர்.
அமைச்சர் கே.என்.நேருவுக்கு திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களும், அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சேலம், தருமபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள், அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை தேனி உள்ளிட்ட மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
செந்தில் பாலாஜி
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பில் கோவை, நீலகிரி, கரூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்கள் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், அமைச்சர் அர.சக்கரபாணிக்கு கிருஷ்ணகிரி, திண்டுக்கல் திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவுக்கு சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்கள், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழிக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி,தென்காசி, கன்னியாகுமாரி மாவட்டங்கள் என 7 மண்டலங்களாக பிரித்து மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மண்டலப் பொறுப்பாளர்கள் கட்சி ரீதியிலான மாவட்டங்களில் அறிமுகக் கூட்டங்களை நடத்தி நிர்வாகிகள் மத்தியில் பேசி வருகின்றனர்.
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
இந்நிலையில், 8வது மண்டலப் பொறுப்பாளராக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மூன்று மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடலூர் கிழக்கு, விழுப்புரம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களுக்கு இவர் பொறுப்பாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி கிழக்கு , திருப்பூர் வடக்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த 3 மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மண்டல பொறுப்பாளர்கள் பட்டியலில் வன்னியர் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications