நடுவானில் விமானத்தில் ஊசலாடிய உயிர்! முதலுதவியோடு டாக்டர் சொன்ன ஒரு பொய்.. திரும்பி வந்த உயிர்
சென்னை: கொச்சியில் இருந்து மும்பைக்கு சென்ற விமானத்தில் ஒருவர் திடீரென்று பயணி ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கூச்சலிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விமான பணியாளர்கள் அவருக்கு உதவி செய்த நிலையில் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஸ்டெதஸ்கோப்பை பிடித்து டாக்டர் செய்த சம்பவமும், அவர் கூறிய ஒரு பொய்யும் அந்த நபரின் உயிரை திரும்ப கொண்டு வந்துள்ளது.
கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு கடந்த 14ம் தேதி மாலையில் ஆகாசா ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் பயணிகள் ஏராளமானவர்கள் பயணித்தனர். இதில் டாக்டர் சிரியாக் அபய் பிலிப்ஸ் என்பவரும் பயணித்தார்.

இவர் கொச்சியில் தனது பணியை முடித்து விட்டு மும்பைக்கு விமானத்தில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது பயணி ஒருவர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சிரியாக் அபய் பிலிப்ஸ் அந்த நபருக்கு உதவினார். விமான பணியாளர்களுடன் சேர்ந்து அவர் அந்த நபருக்கு முதலுதவி சிகிச்சைகள் செய்தார்.
இதன் பலனாக அந்த நபர் தற்போது மருத்துவ சிகிச்சைக்கு பிறகு நலமாக உள்ளார். அவரது குடும்பத்தினர் டாக்டர் சிரியாக் அபய் பிலிப்சுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் விமானத்தில் உண்மையில் என்ன நடந்தது? என்பது பற்றி சிரியாக் அபய் பிலிப்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஒரு டாக்டராக மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு விமானத்தில் நான் முதல் முதலாக ஸ்டெதாஸ்கோப்பைப் பயன்படுத்தினேன். 2 நாட்களுக்கு முன்பு கொச்சியில் இருந்து மும்பைக்கு ஆகாசா ஏர் விமானத்தில் நான் பயணித்து கொண்டிருந்தேன். அது ஒரு மாலை நேர பயணம். நான் பணியை முடித்து சோர்வாக இருந்தேன். இதனால் தூங்க வேண்டும் என முயற்சிகள் செய்தேன்.
இந்த வேளையில் விமானத்தில் சத்தங்கள் கேட்டன. இதனால் நான் கண் விழித்து பார்த்தேன். அப்போது என் அருகே இருந்த ஒருவர் உயிருக்கு உயிருக்கு போராடினார். அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. விமான பணிப்பெண் நெபுலைசரை முகத்தில் பொருத்த முயன்றார். இதையடுத்து நானும் அவருக்கு உதவி செய்தேன். இந்த வேளையில் அந்த நபர் பேச முயன்றார். அவரிடம் ஆக்சிமீட்டர் இருந்தது. அதன்மூலம் பரிசோதித்தேன். அப்போது அவரது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 36 சதவீதமாக இருந்தது.
ஒருவேளை ஆஸ்துமா இருக்குமோ? என கேட்டேன். அதற்கு அவர் மறுத்தார். இதனால் குழப்பம் ஏற்பட்டது. ஆஸ்துமா இல்லாவிட்டால் ஏன் நெபுலைசேஷன் கிட் வைத்திருக்கிறார்? என்பதில் குழம்பினேன். நான் ஸ்டெடஸ்கோப்பை வைத்து பரிசோதித்தேன். அப்போது அவரது இடது பக்க நுரையீரல் பகுதியில் இருந்து சத்தம் எதுவும் இல்லை. இதற்கு நுரையீரில் நீர் நிறைந்து இருப்பது தான் காரணம். இதனை ப்ளூரல் எஃப்யூஷன் என்பார்கள்.
இதற்கிடையே அந்த நபர் பேச தொடங்கினர். மூச்சுத்திணலுக்கு இடையே தனது சிறுநீரக பாதிப்பு பற்றி கூறினார். டயாலிசிஸ் செய்கிறீர்களா? என கேட்டேன். அவர் வாரத்தில் 3 நாட்கள் செய்வதாகவும், பயணத்தின் அடுத்த நாள் மீண்டும் சிகிச்சைக்கு செல்வதாகவும் கூறினார். மேலும் நேற்று இரவு மருந்துகள் தீர்ந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து லாக் செய்யப்படாமல் இருந்த அவரது செல்போனில் இருந்த அவருக்கான மருந்து சீட்டுகளை கவனித்தேன். அதில் உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதற்கான சோதனையை செய்தேன். அப்போது 280/160 என்ற அளவில் இருந்தது. அவர் துடித்தார். மேலும் அவசர மருத்துவ சேவை கிடைக்க ஒரு மணிநேரம் ஆகும் என கூறப்பட்டது. இதனால் நான் பதறினேன். ஏனென்றால் நான் ஐசியூவுக்குள் இருப்பது போல் உணர்ந்தேன். அவரது உடல்நலம் மோசமாகி சென்றது. இதனால் அடுத்தடுத்து முடிவுகள் எடுக்க வேண்டியிருந்தது.
மேலும் அவரது உடலில் அணுகக்கூடிய வகையில் இருந்த நரம்பில் 2 துளைகள் இட்டும் பயனில்லை. அதோடு டயாலிசிஸ் ஃபிஸ்துலா செய்யப்பட்ட இடத்தையும் பயன்படுத்த முடியவில்லை. இதனால் நான் அவருக்கு ஒரு ஃபிரூஸ்மைடு ஊசியை செலுத்தினேன். இந்த ஊசி செலுத்தினால் அதிக வலி ஏற்படும் எனக்கூறிவிட்டு இதனை செய்தேன். அவர் அதிக சிரமத்தை சந்தித்தார்.
இதனால் விமானம் முழுவதும் பரபரப்பாக இருந்தது. மேலும் ஒரு கட்டத்தில் அவரை சமாதானம் செய்வது எப்படி என்பது எனக்கு தெரியவில்லை. இதனால் அவசர உதவிக்கு கிடைக்கும் இடத்துக்கு செல்ல 30 நிமிடங்கள் இருந்தாலும் இதோ வந்துவிட்டோம் என பொய் சொல்லி ஆறுதல்படுத்தினேன். அவர் என் தோள்களில் சாய்ந்து கொண்டு மூச்சுத்திணறலால் சிரமப்பட்டார்.
இந்த வேளையில் விமான பெண் மற்றும் ஆண் பணியாளர்கள் எனக்கு உதவியாக இருந்தனர். எனது அறிவுரைகள்படி அவர்கள் செயல்பட்டதால் தான் முழுமனதுடன் பணியாற்ற முடிந்தது. மேலும் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியையும் அவர்கள் வழங்கினர். இதனால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90 சதவீதத்துக்கும் மேல் சென்றது. மேலும் ஃப்ளைட் ஈஆர் கிட்டில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளைக் கண்டறிந்தேன். அதனையும் அவருக்கு வழங்கி வந்தேன்.
இந்த போராட்டத்திலும் கூட விமானத்தில் இருந்து சிகிச்சைக்கு அவர் செல்லும் முன்பு தனது செல்போனை தந்து எனது எண்ணை பதிய கூறினார். நான் செல்போன் எண்ணை பதிவு செய்தேன். இதற்கிடையே மூச்சுத்திணறல் சரியாகா விட்டாலும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்தது. அதன்பிறகு விமானம் தரையிறங்கி பிறகு அவர் ஆம்புலன்ஸில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அடுத்த நாள் அவர் நலமுடன் இருப்பதாக அவரது குடும்பத்தினர் எனக்கு மெசேஜ் செய்தனர். மேலும் அவசரகால டயாலிசிஸுக்கு பிறகும், ஐசியூவில் இருந்து மாற்றப்பட்ட பிறகு பாதிக்கப்பட்ட நபரே என்னை அழைத்து பேசினார். மேலும் அவரது உடல்நலம் குறித்து கேட்டு நான் அதிர்ந்துபோனேன். அவரது பொட்டாசியம் அளவு 9.0 ஆக இருந்ததோடு சிறுநீரக செயல்பாடு பலவீனமாக இருந்தது. இதனால் அவருக்கு நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என உணர்ந்தேன். மேலும் அவர் இரவில் குணமடைந்தார்.
இந்த வேளையில் விமான பணிப்பெண்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அதோடு நான் வருத்தத்தையும், மன்னிப்பையும் கேட்டு கொள்கிறேன். ஜனவரி 14ம் தேதி கொச்சியில் இருந்து மும்பைக்கு சென்ற QP-1519 விமானத்தில் இருந்த உங்களின் பெயர்களை நான் கேட்கவில்லை. ஏனென்றால் அது ஒரு கடினமாக நேரமாக அமைந்து இருந்தது. ஆனால் நாம் அனைவரும் இந்த மனிதனின் உயிரை காப்பாற்றினோம். உங்கள் உதவி இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. உங்களுக்கும் நன்றி’’ எனக்கூறி நெகிழ வைத்துள்ளார். டாக்டர் டாக்டர் சிரியாக் அபய் பிலிப்ஸின் இந்த பதிவு தற்போது வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். அதோடு அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.















Click it and Unblock the Notifications