பொள்ளாச்சியில் கள்ளச்சாராயம்? மது குடித்தவர்கள் மயங்கியதால் அதிர்ச்சி.. என்ன நடந்தது? போலீஸ் விசாரணை
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மது குடித்த 2 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் கள்ளச்சாராயம் குடித்ததாக தகவல் பரவி பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை பகுதியில் மஞ்ச நாயக்கனூர் என்ற மலை அடிவார கிராமம் உள்ளது. அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகள். கட்டட தொழிலாளிகளான மகேந்திரன், ரவி ஆகிய இருவரும் நேற்று மது குடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மது அருந்திய இருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவர்கள் கள்ளச்சாராயம் குடித்ததாக தகவல் பரவியது. அண்மையில் தான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய 200க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர்களில் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், பொள்ளாச்சி அருகே மது குடித்த இருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, இந்த தகவல் அறிந்து வால்பாறை டிஎஸ்பி ஸ்ரீநிதி தலைமையில் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் காயத்ரி ஆகியோர் மஞ்சநாயக்கனூர் கிராமத்தில் விசாரணை நடத்தினர்.
மது அருந்திய ரவிச்சந்திரனுக்கு ரத்த அழுத்த பாதிப்பால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். மகேந்திரனுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாக மது அருந்தவில்லை என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே திருப்பூர், கோவை போலீசார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வருவதாக மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி தெரிவித்தார். முதல்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் அருந்தியது கள்ளச்சாராயம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஜி பவானீஸ்வரி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் 65 பேர் பலியான சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில் பொள்ளாச்சி அருகே இருவர் மது குடித்ததால் உடல்நலக் குறைவு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications