சரவெடி! கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் ரெடி! வெளியானது லெட்டர்.. இனி புயல் வேகம் தான்!
கோவை: கோவையில் உலகத்தர கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கான இடம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஒண்டிப்புதூர் சிறை திறந்தவெளி மைதானம் உள்ள இடத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
மக்களவைத் தேர்தலின்போது, கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி, தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 இடங்களிலும் வெற்றி பெற்றது.

28 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் திமுகவைச் சேர்ந்தவர் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அண்மையில் கோவையில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக கோவை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய ஒண்டிப்புதூர் பகுதியில் பார்வையிட்டார்.
கோவையில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் உருவாக்க, 20 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. ஒண்டிபுதுார், பாரதியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள இடம், எல் என் டி பைபாஸ் அருகே உள்ள இடம், காந்திபுரம் மத்திய சிறை மைதானம் என நான்கு இடங்கள் மாவட்ட நிர்வாகத்தால் அடையாளம் காணப்பட்டன.
இந்நிலையில் தான் கோவைக்கு வந்த தமிழக விளையாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி உதயநிதி, ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள திறந்தவெளி சிறை வளாகத்தில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்குரிய சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தார்.
ஒண்டிப்புதூர் சிறை திறந்தவெளி மைதானம் மொத்தம் 20.72 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு சிறைத் துறை சார்பில் சிறைக் கைதிகளை கொண்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கிரிக்கெட் மைதானம் அமைக்க 20 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில் இங்கு ஆய்வு செய்யப்பட்டது. இப்பகுதிக்கு அருகே சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இந்நிலையில் ஒண்டிப்புதூர் சிறை மைதானம், சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகப்போவது உறுதியாகியுள்ளது. திறந்தவெளி சிறை மைதானத்தின் 20.72 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு நில மாறுதல் செய்ய தீர்மானம் நிறைவேற்றித் தருமாறு கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையருக்கு கோவை தெற்கு தாசில்தார் கடிதம் எழுதியுள்ளார்.
ஆக, கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒண்டிப்புதூர் அரசு புறம்போக்கு திறந்தவெளி சிறைச்சாலை, உலகத்தர கிரிக்கெட் ஸ்டேடியமாக மாற இருக்கிறது. நிலம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு மாற்றப்பட்ட உடன், நிதி ஒதுக்கப்பட்டு ஸ்டேடியம் கட்டும் பணிகள் விரைவாக தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications