2024 மக்களவைத் தேர்தல்! கோவையில் நேரடியாக களமிறங்கும் திட்டத்தில் திமுக! மார்க்சிஸ்ட் கம்யூ. நிலை?
கோவை மக்களவை தொகுதியில் நேரடியாக களமிறங்கும் திட்டத்தில் திமுக.
கோவை: 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது கோவை தொகுதியில் நேரடியாக களமிறங்கும் திட்டத்தில் இருக்கிறது திமுக.
கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரை நேரடியாக எதிர்த்து போட்டியிட்டு தேர்தலில் வீழ்த்த விரும்புகிறது திமுக தலைமை.
தற்போது கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வசம் கோவை தொகுதி உள்ள நிலையில் அந்தக் கட்சிக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கோவைக்கு பதில் வேறொரு தொகுதி ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தல்
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40க்கு 40 தொகுதிகளிலும் முழுமையாக வெற்றிபெற்று தேசிய அரசியலில் தனக்கென தனி முத்திரையை பதிக்க விரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின். இதனால் தான் இப்போதே நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை அவர் சத்தமின்றி தொடங்கிவிட்டார். இந்நிலையில் தமிழ்நாட்டில் கோவை மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொகுதியாகும்.

அசுர வளர்ச்சி
சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு இணையாக அசுர வளர்ச்சி அடைந்து வரும் ஒரு மாநகரமாகும். இதுமட்டுமல்லாமல் தொழில்வளத்தில் நம்பர் 1ஆக திகழ்கிறது. இதனிடையே சிட்டிங் எம்.பி.யான மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ்ட் கட்சியை சேர்ந்த நடராஜன் இதுவரை 2 முறை கோவை தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்தும் மக்கள் மத்தியில் அவருக்கு பெரிய பரிச்சயம் ஏற்படவில்லை. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மற்றொரு எம்.பியான சு.வெங்கடேசனிடம் உள்ள சுறுசுறுப்பில் கால்வாசி கூட இவரிடம் இல்லை. இதற்கு காரணம் அவரது வயதும் ஒன்று.

நேரடியாக திமுக
இதனால் தான் கோவையில் நேரடியாக களமிறங்கும் திட்டத்தில் உள்ள திமுக அதற்கான பூர்வாங்க பணிகளை கவனித்து வருகிறது. மேயர், திமுக மாவட்டச் செயலாளர் தேர்வில் பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி எப்படி டிவிஸ்ட் வைத்தாரோ அதேபோல் வேட்பாளர் தேர்விலும் டிவிஸ்ட் வைப்பார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கோவைக்கு பதில் வேறொரு தொகுதி ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

கோவைக்கு முக்கியத்துவம்
திமுக இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அண்மைக்காலமாக கோவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அடிக்கடி ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கோவைக்கு விசிட் அடித்து வருகிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது திமுகவை வெற்றிபெற வைத்தால் மாதம் மாதம் கோவைக்கு வருவேன் எனக் கூறியிருந்தார். அதன் படி அவர் கோவைக்கு தொடர்ந்து விசிட் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
