கோவையில் ஐடி துறை உச்சத்துக்கு போகப்போகுது.. எல்காட் நிறுவனம் மூலம் 3,000 பேருக்கு அடிச்ச ஜாக்பாட்
கோவை: கோவை விளாங்குறிச்சியில் எல்காட் நிறுவனத்தின் சார்பில் புதிதாக திறக்கப்பட்ட கட்டடத்தின் மூலம் 3,500 பேர் வேலை வாய்ப்பு பெறவுள்ளதாகவும், டிசம்பர் மாதத்தின் இறுதியில் இருந்து முழுமையாக செயல்பாட்டுக்கு வரவுள்ளது என்றும் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கண்ணன் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், நடந்து வரும்பல்வேறு பணிகளை பார்வையிடவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி, நகராட்சி துறை அமைச்சர் நேரு, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி , தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து, கட்சியினர் கோவை விமான நிலையத்தில் இருந்து மருத்துவக் கல்லூரி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும் திரண்டு இருந்த திமுக தொண்டர்களின் வரவேற்பை முதல்வர் ஏற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து, விளாங்குறிச்சி சாலையில், டைடல் பார்க் வளாகத்தில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 தளங்களுடன் 2,94,382 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட புதிய தகவல் தொழில் நுட்ப கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அவருடன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
புதிய எல்கார்ட் வளாகத்தை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், வாரப்பட்டி மற்றும் சூலூர் பகுதிகளில் அமைய உள்ள தொழில் பூங்காக்களுக்கான நில ஒதுக்கீட்டு ஆணைகளையும் தொழில் முனைவோருக்கு வழங்கினார்.
எல்கார்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கண்ணன் கூறுகையில், கோவையில் திறக்கப்பட்ட இந்த கட்டிடம், எல்கார்ட் நிறுவனத்தின் ஒன்பதாவது கட்டிடம். 3,500 பேர் பணிபுரியும் வகையில், அதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் உடனடியாக பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இன்று முதலே ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்படுகின்றன. இன்று இரு நிறுவனங்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், கோவை வாரப்பட்டி ராணுவ பூங்காவில் அமைய உள்ள நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீட்டு ஆணைகளும் வழங்கப்பட்டன. வாரப்பட்டி ராணுவ தொழில் பூங்காவிற்கு டிட்கோ, சிப்காட் மூலம் இடம் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ராணுவத்திக்கு தேவையான உபகரணங்களை பெரிய நிறுவனம் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை மாறி சிறிய நிறுவனங்களும் ராணுவ உபகரணங்களை செய்ய முடியும்.
வாரப்பட்டியில் அமையவிருக்கும் ராணுவ பூங்காவில் 65 ஏக்கரில் 110 நிறுவனங்கள் வரை வர இருப்பதாகவும் நில ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் தெரிவித்தனர். இன்று முதல்கட்டமாக 5 நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
