கோவை -ஜோலார்பேட்டை இடையே 3-வது ரயில் பாதை.. தெற்கு ரயில்வேயிடம் பரிந்துரை
கோவை: கோவை -ஜோலார்பேட்டை இடையே 3-வது ரயில் பாதை அமைக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வேயிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை தான் மிகப்பெரிய நகரமாகும். கோவையில் மிகப்பெரிய அளவில் தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. கோவை திருப்பூர் பகுதியில் பல லட்சம் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள்.

இதன் காரணமாக இந்தியாவின் முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றாக கோவை ரயில் நிலையம் இருக்கிறது. கோவையில் உள்ள ரயில் நிலையங்கள் மூலம் ஆண்டு வருமானமாக ரூ.283 கோடி கிடைப்பதாக கூறப்படுகிறது. தெற்கு ரயில்வேயில் அதிக வருமானம் ஈட்டும் 3வது ரயில் நிலையமாக கோவை ரயில் நிலையம் இருக்கிறது.
கோவையை பொறுத்தவரை கோவை சந்திப்பு ரயில் நிலையத்திலும், வடகோவை ரயில் நிலையத்திலும், போத்தனூர் ரயில் நிலையத்திலும் பயணிகள் இறங்க முடியும். அதேநேரம் கோவை சந்திப்பு மற்றும் போத்தனூர் ரயில் நிலையத்தில் மட்டுமே ஏறவும் இறங்கவும் முடியும். இது தவிர சிங்காநல்லூர், பீளமேடு ரயில் நிலையங்கள் பயணிகள் அதிகம் வரும் ரயில் நிலையங்களாக உள்ளன. கோவையில் சென்னை போல் புறநகர் ரயில்கள் இல்லை. அதேநேரம் மெட்ரோ ரயில் கொண்டுவர பணிகள் நடந்து வருகிறது. அதற்கு குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது ஆகும் என தெரிகிறது.. அதேநேரம் தற்போதைய நிலையில் கோவையில் ரயில் பயணத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். தற்போது கோவை வரியாக தினமும் 96 ரயில்கள் செல்கின்றன, 38 ரயில்கள் கோவை ரயில் நிலையத்தில் இருந்தும் புறப்பட்டு செல்கின்றன. தென்மாவட்டங்களுக்கான பழைய ரயில்களை மீண்டும் இயக்கினால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
இந்தநிலையில் வருகிற 28-ந்தேதி சேலத்திற்கு தென்னக ரயில்வே பொதுமேலாளர் வருகிறார். அங்கு ரயில்வே திட்டப்பணிகள் குறித்து எம்பிக்கள், ரயில்வே அதிகாரிகள் மற்றும் பயணிகள் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் கோவை ரயில்வே வளர்ச்சிக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட இருக்கிறது..
அங்கு வைக்கப்பட உள்ள பரிந்துரைகள் சிலவற்றை பார்ப்போம். கோவையில் இருந்து பழனி வழியாக இயக்கப்பட்ட நீண்டநாள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். அதேபோல், ராமேசுவரம், திண்டுக்கல், தூத்துக்குடி, செங்கோட்டை ரயில்களை இயக்க வேண்டும்.
வடகோவை ரயில் நிலையத்தில் கூடுதலாக 2 பிளாட்பாரங்கள் கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் கோவை ரயில் நிலையத்தில் இரவு நேரத்தில் நாகப்பட்டினம், பெங்களூரு, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு புதிய சூப்பர் பாஸ்ட் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையில் உள்ளது போல் கோவை நகரைச் சுற்றி ம் சில புதிய ரயில் நிறுத்தங்களை ஏற்படுத்தி, விமான நிலையம், டைடல் பார்க், கணபதி, நஞ்சுண்டாபுரம், சிங்காநல்லூர் பகுதிகளுக்கு ரயில்களை இயக்க வேண்டும். கோவை நகரின் வடக்குப் பகுதியில் உள்ள நல்லாம்பாளையத்தில் புதிய சரக்கு முனையத்தைக் கட்டி, வடகோவை ரயில் நிலையத்தில் சரக்கு வசதியை மேம்படுத்த வேண்டும்.
ஜோலார்பேட்டை, கோவை மற்றும் சொரனூர் இடையே மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் பாதை வசதிகளை ஏற்படுத்தினால் மேற்கு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கும். மேலும் ஜோலார் பேட்டையில் இருந்து கோவை வரும் ரயில்கள் 130 கிலோ மீட்டர் வேகத்தில் வருவதற்கு தற்போதுள்ள ரயில் பாதை மேம்படுத்தப்பட வேண்டும். இது பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
மேலும் கோவை - போத்தனூர் பிரிவு மற்றும் இருகூர் - போத்தனூர் இடையே 1.2 கி.மீ. தூர இணைப்பு பாதையை சீரமைப்பதன் மூலம் கோவை சந்திப்பில் இருந்து ஒரு திசையில் ரயில்களின் இயக்கத்திற்கு உதவும் என்றும் கோவை - சொரனூர் பிரிவில் மதுக்கரை மற்றும் கஞ்சிக்கோடு இடையே சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட ரயில் பாதை அமைக்கப்பட்டால் வன விலங்குகள், குறிப்பாக யானைகள் இறப்பை தடுக்க உதவும். இந்த பிரிவில் உள்ள "பி" லைன் பாதை சுற்றுச்சூழலுக்கு இடையூறாக உள்ளது. இதனை மாற்றி அமைக்க வேண்டும் இவ்வாறு பரிந்துரைகள் செய்யப்பட்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications