நீடிக்கும் பதற்றம்.. பாதுகாப்புப் பணியில் 4,000 போலீஸ்.. என்ன நடக்கிறது கோவையில்?
கோவை: கோவை மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் வாகனங்களுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து 1,700 போலீசார் கோவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் 4,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை நள்ளிரவில் வீசி விட்டு செல்வதோடு, கார்களுக்கும் தீ வைத்து வருகின்றனர். இதனால், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

வன்முறைச் சம்பவங்கள்
கோவை மாநகர் மற்றும் புறகர் பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், கார்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. பாஜக மாவட்ட தலைமை அலுவலகம், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்கள் என, இந்து அமைப்பினரின் வீடுகளை குறிவைத்து இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருவதால், கோவை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

4000 போலீசார் பாதுகாப்பு
இந்நிலையில், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 1,700 போலீசார் கோவைக்கு அவசரமாக பாதுகாப்புப் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இது தவிர, தமிழ்நாடு கமாண்டோ போலீசார் 50-க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். கோவையில் முகாமிட்டுள்ள இவர்கள், கோவை மாநகர போலீசாருடன் இணைந்து தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

போலீசார் ரோந்துப் பணிகள்
மேலும், கோவை நகருக்கு நுழையும் வழியில் 11 சோதனைச் சாவடிகள் தவிர கூடுதலாக நகரில் 28 இடங்களில் வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒரு காவல் நிலையத்திற்கு 3 ரோந்து வாகனங்கள் வீதம், 15 காவல் நிலையங்களில் 45 ரோந்து வாகனங்கள் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் கோவை மாவட்டம் முழுவதும் காவல்துறையின் அதிதீவிர கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டில் உள்ளது.

ரயில் நிலையத்தில் பாதுகாப்பு
இதுதவிர கோவை ரயில் நிலையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகள் கொண்டு வரும் உடமைகள் அனைத்தும் முழுமையாக சோதனைக்குப் பின்னரே, பயணிகள் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், ரயில்வே காவல் கண்காணிப்பாளர் உமா, கோவை மாவட்டத்தில் முகாமிட்டு, பாதுகாப்புப் பணிகள் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications