ஷாக்.. 5 பேரின் உயிரை பறித்த சோலையார்.. ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர்கள் பலி.. கோவையில் சோகம்
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையார் ஆற்றில் மூழ்கி தனியார் கல்லூரியில் படித்து வந்த 5 மாணவர்கள் அடுத்தடுத்து பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
கோவை கிணத்துக்கடவு அருகே மலுமிச்சம்பட்டி பகுதியில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியை சேர்ந்த 10க்கும் அதிகமான மாணவர்கள் இன்று வால்பாறைக்கு சுற்றுலா சென்றனர். வால்பாறையில் பல்வேறு இடங்களை மாணவர்கள் சுற்றிப்பார்த்தனர்.

அதன்பிறகு மாணவர்கள் அனைவரும் சுங்கம் பகுதியில் உள்ள சோலையார் அணைக்கு சென்றனர். இந்த வேளையில் சுங்கம் பகுதியில் உள்ள சோலையார் ஆற்றில் அவர்கள் குளிக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து மாணவர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கி உற்சாகமாக குளித்து கொண்டிருந்தனர். இந்த வேளையில் சில மாணவர்கள் ஆற்றில் சேரும், சகதியும் நிரம்பி இருக்கும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இதனால் அவர்கள் தண்ணீரில் சிக்கி தத்தளித்துள்ளனர். மேலும் அவர்கள் காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பிற மாணவர்கள் அவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அதற்குள் 5 மாணவர்கள் ஆற்றில் மூழ்கி பலியாகினர். இதையடுத்து சம்பவம் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சோலையார் ஆற்றில் மாணவர்களின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்டநேர தேடுதல் வேட்டைக்கு பிறகு 5 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. விசாரணையில் மலுமிச்சம்பட்டி தனியார் கல்லூரியில் படித்து வந்த சரத், அஜய், தனுஷ், ரபேல், வினித் என்ற 5 மாணவர்கள் ஆற்றில் மூழ்கி பலியானது தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் உடல்கள் பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையே தான் சோலையார் அணைக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் சுற்றுலா வருகின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் பல இடங்களில் வனத்துறையினர் அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர். மழை பெய்யும்போது ஆற்றில் குளிக்க வேண்டாம், ஆபத்தான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் கூட பலரும் எச்சரிக்கையையும் மீறி ஆபத்தை உணராமல் ஆற்றில் ஆழமான பகுதிகளில் குளிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அப்படியாக இன்று நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் தான் 5 கல்லூரி மாணவர்கள் பலியாகி உள்ளனர். இதனால் வனத்துறையினர் சுற்றுலா வருவோரை கண்காணித்து எச்சரிக்கையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications