கோவையில் திடீரென இறங்கிய 450 போலீஸ்.. கஞ்சா சாக்லேட், போதைப் பொருள் பதுக்கிய.. 7 மாணவர்கள் கைது
கோவை: கோவையில் மதுக்கரை, செட்டிபாளையம், கேஜி சாவடி ஆகிய மூன்று பகுதிகளில் விடுதிகள் மற்றும் அறைகள் எடுத்து தங்கியுள்ள மாணவர்களின் வீடுகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து போலீசார் திடீர் சோதனை மேற்கொண்ட நிலையில், கஞ்சா, கஞ்சா சாக்லேட் பதுக்கிய கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. கல்லூரி மாணவர்கள், ஐடி இளைஞர்களைக் குறிவைத்தே இந்த சம்பவங்கள் நடக்கின்றன. கோவை புறநகர் பகுதியில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்க காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்க தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். செட்டிபாளையம், மதுக்கரை, க.க.சாவடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் வெளியூர் மாணவர்கள், தனியாக வீடு மற்றும் அறை எடுத்து தங்கி உள்ளனர். அவர்களை குறிவைத்து போதைப் பொருட்கள் விற்பனை அதிகமாக நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகள் மற்றும் அறைகள் சிறப்பு தனிப்படை காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்த காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன் பெயரில் 450 காவல் துறையினர் நேற்று அதிகாலை முதல் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த மூன்று காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வெளியூர் மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு காவல் துறையினர் சென்று ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினர். இதில், சில மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகளில் கஞ்சா பொட்டலம் போட்டுக் கொடுப்பதற்காக சிறிய அளவிலான பிளாஸ்டிக் கவர்கள் இருந்தன.
அதைத் தொடர்ந்து, காவல் துறை நடத்திய சோதனையில் மாணவர்கள் தங்கி இருந்த அறைகளில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும், அவற்றை மாணவர்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனே அந்த வீடுகளில் இருந்த மாணவர்கள் 6 பேரை மடக்கிப் பிடித்து காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு போதைப் பொருட்களை சப்பளை செய்த நபரையும், காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவையில் சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் புதிய வகை கஞ்சா ஆயில், கஞ்சா, ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கல்லூரி மாணவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க இந்த அதிரடி நடவடிக்கைகளில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை புறநகர்ப் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகள் மற்றும் அவர்கள் அடிக்கடி செல்லும் இடங்களில் சிறப்பு தனிப்படை போலீசார் அண்மையில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 6 கிலோ கஞ்சா, 4 கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் 42 திருடப்பட்ட நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனங்கள் என பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து கடந்த வாரத்தில் கோவையில் உக்கடம், ராமநாதபுரம், குனியமுத்தூர் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள் வசித்து வரும் அறைகளில் போலீஸார் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர். வேலைக்குச் செல்லும் இளைஞர்கள், மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், ஆயுதங்கள் ஏதேனும் இருக்கின்றதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து, செட்டிபாளையம், மதுக்கரை, கேஜி சாவடி பகுதிகளில் சுமார் 450க்கும் மேற்பட்ட காவலர்கள் சோதனை மேற்கொண்ட நிலையில் 6 மாணவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications