அந்த மனசு தான் சார்.. வீடற்ற மாற்றுத் திறனாளி குழந்தைக்கு வீடு! அசத்திய தமிழக வெற்றிக் கழகம்..!
கோவை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டம் மூலமாக கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி குழந்தைக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள். இதையடுத்து சமூக வலைதளங்களில் அந்தக் கட்சியினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தற்போதைக்கு நம்பர்-1 நடிகராக தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் விஜய் அரசியல் வருகைக்கு முன்னதாக தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி அரசியல் கட்சி தொடங்கப் போவதை சூசகமாக அறிவித்தார்.

அரசியலுக்கு ஏனோதானோ என்று வரக்கூடாது என தீர்க்கமாக இருந்த விஜய் தான் நற்பணி இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான முன்னெடுப்புகளை தொடர்ந்து செய்து வந்தார். மாநில நிர்வாகிகள் நியமனம் மாவட்ட தலைவர்கள் நியமனம் என மெதுவாகவும் அதே நேரத்தில் நிதானமாகவும் அவரது செயல்பாடுகள் இருந்தது.
பனையூரில் அடிக்கடி ஆலோசனை மாணவர்களுக்கு திட்ட உதவிகள் வழங்குவது என தொடர்ந்து திட்டமிட்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கிய விஜய் ஒரு வழியாக கட்சி பெயரையும் அறிவித்தார். 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் நடிகர் விஜய், புதிய கட்சி தொடங்கியுள்ளார். இத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ள விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் இலக்கு என்று அறிவித்துள்ளார்.
இப்போது கோட் படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளில் தீவிரம் காட்டி வரும் விஜய் தனது அடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். இந்த இரு திரைப்படங்களும் முடிவடைந்த பின்னர் தான் அவரது முழு அரசியல் பயணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் கடந்த ஆண்டு போலவே மாணவர்களை நேரில் வரவழைத்து அவர்களுக்கு பரிசு வழங்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.
இதை அடுத்து தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற மாணவ மாணவிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு பாஸ்களும் வழங்கப்பட்டுள்ளது. அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விருந்து உடன் பரிசு வழங்க திட்டமிட்டு இருக்கிறார் நடிகர் விஜய். இதற்கான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏற்கனவே செய்து வருகின்றனர். இரண்டு கட்டங்களாக மாணவர்களை சந்திக்கவுள்ளார். அதுமட்டுமல்லாமல் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி குழந்தையின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கின்றனர் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள். கோவை தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த இளைஞர் அணி நிர்வாகிகள் ஏற்கனவே அப்பகுதியில் இலவச படிப்பகம் ரத்ததான முகாம் சாலை ஓரம் மக்களுக்கு போர்வைகள் வழங்குவது உணவு வழங்குவது ஆகிய பணிகளை செய்து வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி குழந்தையின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பாக தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் வீடு கட்டி கொடுத்ததோடு வீட்டு உபயோக பொருட்களையும் வாங்கி கொடுத்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு அவர்களுக்கு வீட்டின் சாவியையும் தேவையான பொருட்களையும் கொடுத்தார்.
தங்கள் குடும்பத்தினருக்கு வீடு இல்லை என அவர்கள் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட நிலையில் நேரடியாக சென்ற தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் அவர்களிடம் இது பேசி வீடு கட்டி தருவதாக உறுதியளித்தனர். தொடர்ந்து அவர்களுக்கென இடம் வாங்கி சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் இந்த வீடு கட்டிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளியின் குடும்பத்தினரும் தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தற்போது இந்த வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பாராட்டுதலை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications