பிரதமர் மோடி அப்படி சொல்ல.. குறுக்கே புகுந்த அதிமுக! 'தி கேரளா ஸ்டோரி’ வேலுமணி பேச்சை கவனிச்சீங்களா?
கோவை :'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு பிரதமர் மோடி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுதீப்தோ சென் இயக்கத்தில் உருவாகி நேற்று வெளியான 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இப்படத்திறகு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், பாஜகவினர் இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம், இந்திய தேசத்துக்கு எதிரான சதியை அம்பலப்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படம் சமூகத்தில் பயங்கரவாதத்தால் ஏற்படும் விளைவுகளை அம்பலப்படுத்த முயற்சிக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி அப்படத்தை தடை செய்து பயங்கரவாத சக்திகளுக்கு உதவ நினைக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கோவை உக்கடம் ஜி.எம்.நகர் பகுதியில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், கே.ஆர்.ஜெயராம் உள்ளிட்டோர் முன்னிலையில் அப்பகுதியை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் பலர் அதிமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "தேர்தல் நேரத்தில் கொடுத்த எந்த வாக்குறுதியும் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. சிறுபான்மையின மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அதேபோல் 50 வருடங்களாக சிறுபான்மையின மக்கள் போராடிய கபர்ஸ்தான் கடந்த அதிமுக ஆட்சியில் அமைத்து கொடுத்தோம்.
சமீபத்தில் திரையரங்கில் வெளியாகியுள்ள 'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு இஸ்லாமிய இயக்கங்கள், ஜமாத் அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எந்தப் படமும், எந்த மதத்தையும் புண்படுத்தக் கூடாது. கடந்த அதிமுக ஆட்சியில் கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம்' படத்தில் இஸ்லாமிய அமைப்புகள் எதிர்த்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதேபோல தற்போது வந்துள்ள 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான சில குறிப்பிட்ட காட்சிகளை தமிழக அரசு நீக்கிவிட்டு வெளியிட வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு பிரதமர் மோடி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அப்படத்தில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு காட்சிகளை நீக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications